தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ397 கோடிக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். Senthil Balaji High Court
சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2021-23ம் ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ1,183 கோடி மதிப்பில் டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இம்முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர்- நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். இம்மனு மீது கடந்த ஜூன் 13-ந் தேதி விசாரணை நடைபெற்ற போது, செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி வேல்முருகன்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று ஜூலை 3-ந் தேதி நடைபெற்றது. இன்றைய விசாரணை குறித்து மனுதாரரான அறப்போர் இயக்கத்தின் ஜெயராமனை நமது மின்னம்பலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விவரங்கள் கேட்க ஒரு வார அவகாசம் கேட்டது அரசு தரப்பு. இதனால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.