தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ குழு அதிகாரிகள் கரூர் வருகை தந்துள்ளனர்.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், SIT எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு எதிராக தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், SIT விசாரணையை CBI- சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் CBI விசாரணையை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.
இதனைத் தொடர்ந்து SIT-ன் விசாரணை ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் குழு கரூரில் முகாமிட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் குழு தங்கி உள்ளது.
குஜராத் கேடரைச் சேர்ந்த சிபிஐ அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான இந்த குழுவில் ஏடிஎஸ்பி முகேஷ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.