குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை (செப்டம்பர் 23) கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. அதற்கு மறுநாள் அக்டோபர் 3ஆம் தேதி கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெற உள்ளது.
இதனையொட்டி நாளை நடைபெற உள்ள கொடியேற்ற நிகழ்வு மற்றும் காப்புகட்டுதல் நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சரக்கு வாகனங்களுக்கு தடை!
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிக்கு செல்வதற்கும், பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கும் இன்றும், நாளையும் இரண்டு நாட்களில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாற்றுப்பாதை
திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் ECR ரோடு வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும், குலசேகரபட்டிணத்தை கடந்து செல்ல முடியாதபட்சத்தில், அவைகள் திருச்செந்தூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், மணிநகர் மார்க்கமாக மணப்பாடு, பெரியதாழை வழியாக கன்னியாகுமரி செல்லவும் அல்லது சாத்தான்குளம், திசையன்விளை மார்க்கமாக உவரி வழியாக கன்னியாகுமரி செல்லவும்.
கன்னியாகுமரி, உவரி, பெரியதாழை, மணப்பாடு, ECR ரோடு வழியாக குலசேகரபட்டிணம் மார்க்கமாக திருச்செந்தூர் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும், குலசேகரன்பட்டினத்தை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பெரியதாழை ECR ரோடு வழியாக படுக்கப்பத்து, மணிநகர், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் செல்லவும் அல்லது கன்னியாகுமரி, உவரி, திசையன்விளை, சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் வழியாக திருச்செந்தூர் செல்லவும்.
தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்
வடக்கு பகுதிகளில் இருந்து குலசேகரபட்டிணம், உடன்குடி ECR பைபாஸ் சாலையை கடந்து தெற்கு பகுதிக்கு செல்லும் பால்வாகனம், மருந்து பொருட்கள் கொண்டு செல்லும் வாகனம் போன்ற அத்தியாவசிய வாகனங்களும், மற்றும் தெற்கு பகுதியில் இருந்து குலசேகரபட்டிணம், உடன்குடி ECR பைபாஸ் சாலையை கடந்து வடக்கு பகுதிக்கு செல்லும் அத்தியாவசிய வாகனங்களும் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் குலசேகரபட்டிணத்தை கடந்து செல்வதை தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்லவும்.
தனியார் வாகனங்களுக்கான விதிமுறைகள்
தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், மேலரதவீதி, முருகாமடம் (தெப்பக்குளம்) வழியாக பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி சிதம்பராதெரு சந்திப்பு வந்து, பின்பு உடன்குடி RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (PARKING PLACE) வாகனங்களை நிறுத்தவும்.
திருநெல்வேலி மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் குரும்பூர், நல்லூர் விலக்கு, காந்திபுரம் வந்து வலதுபுறமாக திரும்பி காயாமொழி விலக்கு, பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி சிதம்பராதெரு சந்திப்பு வந்து பின்பு உடன்குடி RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (PARKING PLACE) வாகனங்களை நிறுத்தவும்.
மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்துமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் தருவைக்குளத்தை சுற்றி குலசேகரன்பட்டினம் ECR பைபாஸ் கருங்காளியம்மன் ஜங்ஷன் வந்து குலசேகரன்பட்டினம் வடக்கூர் ECR பைபாஸ், கல்லாமொழி, ஆலந்தலை, திருச்செந்தூர் முருகாமடம் (தெப்பகுளம்), திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம், இராணி மஹாராஜபுரம் நல்லூர் வழியாக திருநெல்வேலி அல்லது அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும். அல்லது அம்மன்புரம், ஆறுமுகநேரி, DCW, ஆத்தூர் மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும்.
அரசு சிறப்பு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள்
திருநெல்வேலி – தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும், திருச்செந்தூர் இரும்பு ஆர்ச், மேல ரதவீதி, முத்தாரம்மன் கோவில் சந்திப்பு, முருகாமடம் சந்திப்பு (தெப்பகுளம்), ஆலந்தலை, கல்லாமொழி வழியாக குலசேகரபட்டினம் வடக்கூர் ECR பைபாஸ் வந்து குலசேகரபட்டிணம் ஊருக்குள், வடக்கு பகுதியில் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகியம்மன் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக திருச்செந்தூர் முருகாமடம் வந்து அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருச்செந்தூர் பேருந்து நிலையம் செல்லவும்.
திசையன்விளை – தட்டார்மடம் – சாத்தான்குளம் – மெஞ்ஞானபுரம் மார்க்கத்திலிருந்து குலசேகரபட்டினம் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி வழியாக தேரியூர் ஊருக்குள் வந்து, செட்டியாபத்து – கூழையன்குண்டு விலக்கு, உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் ஜங்ஷன், RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரபட்டினம் ECR பைபாஸ் சந்திப்பு தருவைகுளம் அருகில் கொட்டங்காடு ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது கொட்டங்காடு வழியாக உடன்குடி சென்று மற்ற ஊர்களுக்கு செல்லவும்.
கன்னியாகுமரி – உவரி, பெரியதாழை, மணப்பாடு மார்க்கமாக வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் குலசேகரபட்டினம் தெற்கு பகுதி ECR பைபாஸ் சாலை தீதத்தாபுரம் ரோடு சந்திப்பு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
பக்தர்கள் கடற்கரை மற்றும் கோவிலுக்கு செல்லும் வழி!
கொட்டங்காடு ரோடு தற்காலிக பேருந்து நிலையம், மற்றும் உடன்குடி ரோட்டிலுள்ள (தருவைகுளம் சுற்றியுள்ள) வாகன நிறுத்துமிடங்களிலிருந்து வரும் பக்தர்கள் ரத்னகாளியம்மன் கோவில் அல்லது கருங்காளியம்மன் கோவில் வழியாக செல்லவும். ECR ரோடு தீதத்தாபுரம் ரோடு சந்திப்பு தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் ECR மணப்பாடு ரோடு வாகன நிறுத்துமிடங்களிலிருந்து வரும் பக்தர்கள் தெற்கு பகுதி வழியாக செல்லவும். ECR உடன்குடி 4 வழி சாலை சந்திப்பு வழியாக கோவிலுக்கு செல்வதற்கு அனுமதியில்லை.
கோவில் தரிசனம் முடித்து வெளியே செல்லும் பக்தர்கள் கோவில் மேற்கு பக்க வாசல் (ஆர்ச்) வழியாக வெளியே வந்து, காவல் நிலையம், சகாயம் பெட்ரோல் பல்க் (இந்தியன் ஆயில்) வழியாக குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ரோடு சந்திப்பு வந்து செல்லவும்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள்
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், தசரா குழுக்கள் வரும் வழி, பக்தர்கள் வரும் வழி, கோவில் வளாகம், கடற்கரை பகுதி, பக்தர்கள் வெளியே செல்லும் வழி ஆகிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் கவலர்களை நியமித்து தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பக்தர்களும், பொதுமக்களும் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், நடத்திட மாவட்ட நிர்வாகம், இந்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.