சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எம்.பி. டி.ஆர்.பாலு இன்று (ஆகஸ்ட் 28) ஆஜரானார்.
திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்த போது 2024 ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டார்.
இந்நிலையில் திமுக எம்.பியும், பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 17ஆம் தேதி அண்ணாமலை விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து டி.ஆர்.பாலுவும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிபதி செந்தில்குமார் முன் இன்று (ஆகஸ்ட் 28) டி.ஆர்.பாலு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை கூறினார்.
இதன் பின் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, ”எனது பேருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றரை மணி நேரம் இன்று வழக்கு விசாரணை நடந்தது. எனக்கு 21 நிறுவனங்கள் இருப்பதாகவும் அதில் தவறாக சம்பாதித்த 10800 கோடி ரூபாய் பணம் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இது உண்மைக்கு புறம்பானது என்று நீதியரசரிடம் சொன்னேன். அவர் சொன்ன 21 நிறுவனங்களில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கு சம்பந்தம் கிடையாது. இருக்கிற 3 நிறுவனங்களும் பல ஆண்டுகளாக சேலத்தில் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் என் மீது மக்கள் வைத்துள்ள மரியாதையையும் மதிப்பையும் குறைக்கும் வகையில் தவறனா தகவலை சொல்லி விளம்பரம் தேடியுள்ளார்.
இன்று சாட்சியம் சொல்லியிருக்கிறேன். அடுத்த செப்டம்பர் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்” என்றார்.
2004ல் நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009ல் உங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை. அப்போது போகாத மானம் டிஎம்கே ஃபைல்ஸ் வெளியிட்டதன் மூலம் போய்விட்டதா என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, இந்த மாதிரி உங்களை கேட்க சொன்னாரா? நீங்கள் சொல்லவில்லை தானே என்று செய்தியாளரிடம் கோபமாக பேசிய டி.ஆர்.பாலு, “அவருக்கு நான் சரியான நேரத்தில் பதில் தருவேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து 10000 கோடி ரூபாய் உங்களுக்கு என செய்தியாளர்கள் கேள்வியை கேட்க தொடங்கிய போதே, டென்ஷனாகி அங்கிருந்து கிளம்பிவிட்டார் டி.ஆர்.பாலு.