தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் தன் தனித்துவமான படைப்பால் கவனம் ஈர்த்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தனது நீண்ட நாள் காதலியான அகிலா இளங்கோவனை இன்று (அக்டோபர் 31) திருமணம் செய்து கொண்டார்.
சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே மாதம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தை இயக்கி முதல் படத்திலேயே பாராட்டுகளை அள்ளினார்.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது இப்படம். ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து. 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. குடும்ப சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து வெளியான இந்தப் படம், ரசிகர்களை கவர்ந்தது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் பல மொழிகளிலும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.
இதற்கிடையே அபிஷன் ஜீவிந்த் தனது காதலி அகிலாவுக்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்வின் போது மேடையில் வைத்து பிரபோசல் செய்தது அனைவரையும் கவர்ந்தது. அபிஷன் அகிலாவுக்கு மோதிரம் அணிவித்த நெகிழ்ச்சியான தருணமும் சமூக வலைத்தளங்களில் படுவேகமாகப் பரவி, ‘வைரல்’ ஆனது.
இந்நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா திருமணம் இன்று சென்னை போயஸ் கார்டனில் கோலாகலமாக நடைபெற்றது.
நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம்.எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், சௌந்தர்யா ரஜினிகாந்த் என பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
அகிலா அபிஷனின் பள்ளி தோழி என்பது குறிப்பிடத்தக்கது.
