தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 மற்றும் 1ஏ முதல் நிலைத்தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 28) வெளியாகியுள்ளது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி, உதவி ஆணையர், உதவி இயக்குநர், உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட 70 உயர் பதவிகளுக்கான குரூப் 1 மற்றும் 1ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை தமிழ்நாடு முழுவதும் 2.49 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.
அதன் முடிவு இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடந்த 75 நாட்களில் முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியோர் முடிவுகளை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் (www.tnpsc.gov.in) காணலாம்.

முதன்மைத் தேர்வு எப்போது?
குரூப் 1 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் டிசம்பர் 1 முதல் 4ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் முதன்மைத் தேர்வை எழுதலாம்.
அதே போன்று குரூப் 1ஏ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், டிசம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரையில் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் தாளுக்கான முதன்மைத் தேர்வுகளும் சென்னையில் வைத்து நடைபெற உள்ளது.
தகுதி பெற்ற தேர்வர்கள் செப்டம்பர் 3 முதல் 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்ற வேண்டும். மேலும் ரூ.200 கட்டணம் செலுத்தி முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்து.