TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் ரத்து.. எடப்பாடி, விஜய், அன்புமணி, பெ.சண்முகம் கண்டனம்

Published On:

| By Mathi

TNPSC Exam

TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்படதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி, சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திமுக ஆட்சியில் “நிர்வாகம்” என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ,இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. TNPSCGroup2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன,

ADVERTISEMENT

“Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் , குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு? அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்

தமிழ்நாட்டை “சூப்பர்ஸ்டார்” மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் முதல்வர்
@mkstalin அவர்களே – ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.

ADVERTISEMENT

ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி , அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள், 2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial
அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும் .

விஜய்: அரசுப் பணி என்கிற கனவோடு TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள். அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும்.

ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.

எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது?

இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்?

இன்று TNPSC Group 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், TNPSC நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி.

அன்புமணி ராமதாஸ்: தமிழ்நாடு அரசில் சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 ஏ பணிகளுக்கு 828 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்த முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கான டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் அலட்சிய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

தொகுதி 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் தொழில்நுட்பக் காரணங்களால் தான் ரத்து செய்யப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டாலும், தேர்வுக்கான அடிப்படையான ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கோட்டை விட்டது தான் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் ஆகும்.

தமிழ்நாடு முழுவதும் காலையில் 9,223 தேர்வர்களும் மாலையில் 9244 தேர்வர்களும் எழுத இருந்த இந்தத் தேர்வுகளுக்காக சென்னையில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 3221 பேர் தேர்வுகளை எழுத இருந்தனர். அவர்களில் 600 தேர்வர்களுக்கு சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் சென்னை அரும்பாக்கம் டி ஜி வைஷ்ணவா கல்லூரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாகத் தான் இந்தக் குளறுபடி தெரியவந்தது.

இதைக் கண்டித்து தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை நந்தனம் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தான் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் தேர்வு தொடங்காத நிலையில் கோவை உள்ளிட்ட பல மையங்களில் தேர்வு தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் ரத்து செய்யப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும், தேவையற்ற அலைச்சலுக்கும் ஆளானார்கள்.

தேர்வு மையங்கள் மற்றும் அவற்றில் தேர்வு எழுதும் தேர்வர்களை ஒதுக்கீடு செய்வதை டி.என்.பி.எஸ்.சியில் இளநிலை உதவியாளர் நிலையில் உள்ள பணியாளரே தெளிவாக செய்ய முடியும். ஆனால், டி.என்.பி.எஸ்.சி தலைவர், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி என 3 இ.ஆ.ப. அதிகாரிகளும், 6 உறுப்பினர்களும் மேற்பார்வையிட்டும் கூட இவ்வளவு குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன என்றால், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு இளநிலை அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை விடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெ.சண்முகம்: நிர்வாக குளறுபடிகள் காரணமாக இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2a தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு தேர்வுக்கு தயாரான நிலையில் ரத்து என்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வை நடத்துவதில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பதை உரிய அவகாசத்துடன் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிக்க வேண்டும். இனிமேல் இப்படியொரு தவறு நடக்காமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share