பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று (அக்டோபர் 5) ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது.
பணிக்கொடை, அரியர்ஸ், பழைய ஓய்வு திட்டம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் 23 பணிமனைகளில் தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த போராட்டம் இன்று 50ஆம் நாளை எட்டியுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஆறுமுகம் நைனார் மின்னம்பலம்.காம் தரப்பில் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பினோம்.

அவர் கூறுகையில், “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, காரைக்குடி, திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கோவை, சேலம், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை போன்ற இடங்களில் இன்று அக்டோபர் ஆறாம் தேதி ஐம்பதாவது நாள் போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 17 மாதத்தில் ஓய்வு பெற்ற 3500 தொழிலாளர்களுக்கு சுமார் 1,800 கோடி ரூபாய் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் தொகை இதுவரையில் வழங்காமல் இருந்து வருகிறது, மேலும் தொழிலாளர்கள் சொசைட்டியில் கடன் வாங்கி அதன் வட்டியும் அசலும் ஊதியத்தில் பிடித்தாலும், அதை சொசைட்டியில் வரவு வைப்பதில்லை போக்குவரத்துக் கழகம். இதனால் சொசைட்டி தற்போது திவால் ஆகி உள்ளது, சுமார் 280 கோடி சொசைட்டிகளில் சேர்க்காமல் உள்ளது கார்ப்பரேஷன் இதனால் தொழிலாளிகள் பெரும் அளவிற்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு 22,000 பேருந்துகள் இருந்தன. இதனால் நாள் ஒன்றுக்கு இரண்டு கோடியே 10 லட்சம் பேர் பயணம் செய்தனர். ஆனால் இன்று 18, 400 பேருந்துகள்கள் மட்டுமே இயக்கப்படுகிறது இதனால் நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 75 லட்சம் பேர் மட்டுமே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இருந்தனர். தற்போது வெகுவாக குறைந்து ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 50 நாட்களாக போராட்டம் செய்து வருகிறோம். அரசு இதுவரையில் எங்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்த்து வைக்க முன்வரவில்லை. நாங்களும் மக்கள் பாதிக்காத அளவுக்கு போராட்டம் செய்து வருகின்றோம். இனிவரும் காலத்தில் போராட்டத்தைப் பற்றி மாற்றி யோசிக்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.