செய்தியாளர் திவ்ய விக்னேஷை ஒருமையில் பேசி கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்ட தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் ANI நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் திவ்யவிக்னேஷ் கேள்வி எழுப்ப முயன்ற போது மற்ற மீடியாவைவிட பெரிய ஆள் என்று சீன் போட வேண்டுமா? அங்கு நிற்பவர்கள் எல்லாம் பாவமா? உங்கள் நிறுவனத்திற்கு மட்டும் கொம்பு முளைச்சிருக்கா? என செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து TNDJU வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நவம்பர் 4 நடைபெற்ற பாஜக மாநில அளவிலான இணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அண்ணாமலை வந்தபோது அவரிடம் ANI நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் திவ்யவிக்னேஷ் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மற்றும் கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்தும் கேள்வி எழுப்பி அவரது பதிலைப் பெற முயன்ற போது அண்ணாமலை ஒருமையில் பேசி, கண்ணியமற்ற வகையில் மிரட்டியுள்ளார்.
நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பி அரசியல் கட்சித் தலைவர்களின் பதிலைப் பதிவு செய்து வெளியிடுவது ஒரு செய்தியாளரின் பணி. அவர் எழுப்புகின்ற கேள்விக்கு, பதிலளிப்பது அரசியல்வாதியின் கடமை. ஆனால் அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அண்ணாமலை செய்தியாளர் திவ்ய விக்னேஷ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காதது மட்டுமல்ல, கேள்வி எழுப்பினார் என்கின்ற காரணத்திற்காகவே அவரை ஒருமையில் பேசி இருக்கிறார். கண்ணியமற்ற வகையில் மிரட்டி இருக்கிறார்.
செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களிடம் கண்ணியமற்று நடந்து கொள்வது அண்ணாமலை அவர்களுக்குப் புதிதல்ல. அவர் பாஜக தலைவராகப் பொறுப்பேற்று சென்னையில் நடத்திய முதல் ஊடகவியலாளர் சந்திப்பில் தொடங்கி இன்று வரை அவ்வாறே நடந்து கொண்டிருக்கிறார். டிஜிட்டல் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பது, விமர்சனம் தொடர்பான கேள்விகளை எழுப்பினால் அவரைத் தனிப்பட்டவகையில் தாக்குவது, அதன் விளைவாகச் செய்தியாளரின் வேலை பறிக்கப்படுவது என்று அவரது அராஜகப் போக்கு தொடர்ந்து வருகிறது.
ஊடகவியலாளர்கள் மீது பாய்வது மட்டுமல்லாமல் அவர்களிடையே பகைமையை வளர்க்கும் வகையிலும் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். இங்கே உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை விட நீங்கள் பெரியவரா என்று திவ்யவிக்னேஷை நோக்கிக் கேள்வி எழுப்புவது ஊடகவியலாளர்களிடையே பகைமையை வளர்ப்பதற்காகவே. மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் அவர் யார் மீதெல்லாம் பாய்கிறாரோ அவரைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தையும் அண்ணாமலை கொண்டிருப்பதைக் காண்போர் அனைவரும் புரிந்துகொள்வர். 2023ஆம் ஆண்டு சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அண்ணாமலை இதேபோன்று தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கும் டிஜிட்டல் ஊடகவியலாளர்களுக்கும் பகைமையைத் தூண்டும் வகையில் செயல்பட்டார். கருத்துரிமை, பேச்சுரிமையைப் பாதுகாக்க அனைத்து ஊடகவியலாளர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய காலகட்டத்தில் இதுபோன்ற பகைமையை வளர்க்கின்ற போக்குகளை உடனடியாக நிறுத்திட வேண்டும். அண்ணாமலை போன்றோர் அதனைத் தூபம்போட்டு வளர்க்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
மே 27, 2022 அன்று பிரதமர் மோடியின் வருகைக்கான பதாகைகள் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம், “உனக்கு ரூ.200 கிடைக்கும்” என்றும், “நான் அவர்களிடம் (திமுக) உனக்கு அதிக பணம் கொடுக்கச் சொல்கிறேன், ரூ.3000 ஆக உயர்த்தச் சொல்கிறேன்” என்றும் இழிவுபடுத்தினார். அக்டோபர் 27, 2022 அன்று கடலூரில் செய்தியாளர்களை “மரத்தில் குதிக்கும் குரங்குகளைப் போல” என்று ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தினார். 2023 ஜனவரியில் சென்னை பாஜக அலுவலகத்தில் ஆதாரம் கேட்ட ஊடகவியலாளரை மிரட்டியது, நியாயம் கேட்ட ஊடகவியலாளர் அசீப் அவர்களிடம் அடாவடியாகப் பேசியது, கேள்வி எழுப்பிய டிஜிட்டல் ஊடகவியலாளர்களுக்கு கேள்வி எழுப்ப அங்கீகாரமே இல்லை அதிகாரத் திமிரை வெளிப்படுத்தியது என்று தொடர்ந்து ஊடகவியலாளர்களைத் தாக்குவதையே முதன்மையாகச் செய்து வந்தார். 2023 ஜூன் மாதம் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய தந்தி நிறுவன செய்தியாளர் ஒருவர் பணியில் இருந்தே நீக்கப்பட்டார். பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது அவரைக் கேமராவுக்கு முன் வந்து முகத்தைக் காட்டுங்கள் என்று அவரது பணிக்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்வுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். ஜனவரி 2024-ல் நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைச்செல்வன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பேட்டி எடுத்தது குறித்து மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு ஊடகவியலாளர் அமைப்புகளும் மூத்த ஊடகவியலாளர்களும் தொடர்ந்து அவருக்குக் கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ள நிலையில் இன்று தன் பணியைச் செய்துகொண்டிருந்த செய்தியாளர் திவ்யவிக்னேஷ் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளார். இதுபோன்று ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் போக்கினை இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. கேள்வியையே உள்வாங்காமல், ஊடகங்களின் மீது பாய்ந்து தன்னை ஆக்ரோஷமான தலைவர் போலக் காட்டிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கும் அண்ணாமலை அவர்களைத் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த விவகாரத்தில் தனது செய்தியாளர் திவ்யவிக்னேஷ்க்கு ஆதரவாக ANI நிறுவனம் தனது கருத்துகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஒவ்வொருமுறை செய்தியாளர்கள் அண்ணாமலை போன்றவர்களால் தாக்குதலுக்கு ஆளாகும்போதும் அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மௌனமாகவே இருப்பது ஏற்புடையதல்ல. இன்றைய நிகழ்விலேயே அண்ணானலை, ANI ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷிடம் புகார் அளிப்பேன் என்று தான் மிரட்டுகிறார். இவ்வாறான சூழல்களில் தனது செய்தியாளருக்கு ஆதரவாக இருந்து காக்க வேண்டியது நிறுவனங்களின் கடமை. இப்பணிப் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தாமல் தனது செய்தியாளர்கள் தாக்கப்படுகின்ற சூழல்களில் மௌனம் காப்பது என்பது அண்ணாமலை போன்றவர்களின் மிரட்டலை மறைமுகமாக ஆதரிப்பதாகவும் அமைந்துவிடுகிறது என்பதை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உடனடியாக ANI நிறுவனம் தனது செய்தியாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் TNDJU வலியுறுத்துகிறது.” இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
