‘வாக்கு திருட்டு’ தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அதில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அன்று அவர் பேசியதாவது “இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை, வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை இந்திய தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார். இதை ஆதாரத்துடன் சொல்கிறேன்” என்று கூறினார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மற்றும் இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் இணைந்து சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்தியாவில் வாக்குத்திருட்டு எப்படி நடக்கிறது என்பதை விளக்கினார்கள்.
அதில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் அறிவியல் மற்றும் அரசியல் ஆலோசகர் பொன்ராஜ் இந்த வாக்கு திருட்டு தொடர்பாக பல்வேறு விஷயங்களை விளக்கினார்.
அதில் தேர்தல் ஆணையம் உருவாக்கிய இணையதளத்தில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து கொண்டே தமிழ்நாட்டின் சைதாப்பேட்டை தொகுதியில் ஐந்தாயிரம் வாக்காளர்களை நீக்கவும், கோயம்புத்தூரில் ஆயிரம் வாக்காளர்களை சேர்க்கவும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் எந்த அளவிற்கு பலவீனமாக உள்ளது என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நடைமுறை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி வரை இருந்ததாகவும் அதன் பிறகு தேர்தல் ஆணையம் இதை மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி வரை இந்தியாவில் யார் வேண்டுமானாலும் ஒருவரின் வாக்கை அவருக்கே தெரியாமல் நீக்க முடியும் என்ற நடைமுறை இருந்தது என்றும் அவர் கூறினார்.
2015 ஆம் ஆண்டு முதல் இந்த மென்பொருளுக்காக இந்திய அரசாங்கம் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளது.
மேலும் வட இந்திய தொழிலாளர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்ப்பதும் வாக்குத்திருட்டில் அடங்கும் என்றும் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வட இந்திய வாக்காளர்களை சேர்த்து அதன் மூலமாக பாஜகவை வெற்றி பெற செய்வதற்கான நோக்கமும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.