நடிகர் ரஜினியின் கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 12) அனுமதி வழங்கியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை மறுநாள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆமிர்கான், நாகர்ஜூனா, ஸ்ருதிகாசன், உபேந்திரா, செளபின் சாஹர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 7,500 ஸ்கிரீன்களில் திரையிடப்படவுள்ள கூலி படத்தின் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கியது. பல இடங்களில் அதிக விலைக்கு ரூ.2000 வரை டிக்கெட் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசிடம் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனுமதி கோரியது.
இந்த நிலையில் பட வெளியீட்டு நாளான ஆகஸ்ட் 14 அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகள் திரையிடலாம் என அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே படத்தின் முன்பதிவில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு வசூல் சாதனைகளை கூலி திரைப்படம் படைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது சிறப்பு காட்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கான முதல் நாள் வசூல் ரஜினி பட வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதிக வன்முறை காரணமாக தணிக்கை துறையிடம் ஏ சான்றிதழ் பெற்றுள்ள போதும், திரைக்கதை வலுவாக இருக்கும் பட்சத்தில், கூலி தமிழ் சினிமாவில் முதல் ஆயிரம் கோடியை எட்டிய திரைப்படம் என்ற சாதனையை படைக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.