அதிமுக ஆட்சியை விட அதிக அளவில் நெல் கொள்முதல் – தமிழக அரசு விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

TN government explanation on paddy procurement

“இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா?” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்களை முன் வைத்த நிலையில், திமுக ஆட்சியில் கடந்த அதிமுக ஆட்சியை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில்,”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாடுபட்டு உழைத்து விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்று கூறி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்புடன் சேமித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். அந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் முந்தைய ஆட்சிக்காலத்தை விடக் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.

ADVERTISEMENT

திராவிட மாடல் அரசு விவசாயிகளைப் பாதுகாப்பதில், அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதில் எப்பொழுதும் முன்னுரிமை கொடுத்து வந்துள்ளது.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை ரூ. 7 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்து 2006 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற விழா மேடையிலேயே ஆணை வழங்கி உத்தரவிட்டார்கள். அதன்பிறகு இந்தியா முழுவதும் ரூ.70 ஆயிரம் கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது வரலாறு.

​முத்தமிழறிஞர் கலைஞர் 1972 இல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் நெல் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி கொள்முதல் செய்யப்படும் முறையை தமிழ்நாட்டிற்கெனத் தனியே உருவாக்கினார்கள்.

ADVERTISEMENT

அந்த நடைமுறையின் படிதான் தற்போதும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

ரூ.576.2 கோடியில் வேளாண் இயந்திரங்களை வழங்கிய திராவிட நாயகர்

ADVERTISEMENT

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1972 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக வேளாண்மையை இயந்திரமயமாக்கிட வேண்டும் என்பதற்காக வேளாண்மைப் பொறியியல் பணிக்கூட்டுறவு இணையத்தை உருவாக்கி நவீன இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.

முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண்மை – உழவர் நலத்துறை என பெயர் சூட்டி விவசாயிகளின் நலன்களுக்கு தனி முக்கியத்துவம் தந்தார்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கைகளை வழங்கி விவசாயத்தை மேம்படுத்தியதுடன் விவசாயப் பெருமக்களையும், அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி வருகின்றார்கள். கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 68 ஆயிரத்து 919 விவசாயிகளுக்கு ரூ.576.20 கோடியில் வேளாண் இயந்திரங்களும், நவீன கருவிகளும் மானியங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. ரூ.98 கோடி மதிப்பில் 1,215 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சிறு விவசாயிகளுக்கும் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.

திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த வேளாண் வளர்ச்சி

முதலமைச்சர் அவர்களின் முன்னெடுப்புகளால் முந்தைய ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் 2012-2013 முதல் 2020-2021 வரை சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயர்ந்து மகத்தான சாதனை படைத்துள்ளது திராவிட மாடல் அரசின் வேளாண்துறை.

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கிய திராவிட நாயகர்

மாநில அரசின் சார்பாக, விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை 1974 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முதல் அறிவித்து வழங்கி நடைமுறைப்படுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றபின் 2021 -2022 ஆம் ஆண்டிற்குப்பின் ஒன்றிய அரசு சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதலாக 100 ரூபாயும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 75 ரூபாயும் உயர்த்தித் தந்தார்கள்.

நடப்பாண்டில் ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த விலையை விட சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 156 ரூபாயும், பொதுரக நெல்லிற்கு 131 ரூபாயும் கூடுதலாக உயர்த்தி வழங்கியுள்ளார்கள்.

ஆனால், முந்தைய ஆட்சிக்காலம் முழுவதிலும் ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த விலையைவிட சன்னரக நெல்லிற்கு குவிண்டாலுக்கு 70 ரூபாயும், பொதுரக நெல்லுக்கு 50 ரூபாயும் எனக் குறைந்த அளவிலேயே ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

முந்தைய ஆட்சியைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்திடும் திராவிட மாடல் அரசு

விவசாயிகளிடம் முந்தைய ஆட்சிக் காலத்தில் 2016-2017 முதல் 2020-2021 வரை 4 ஆண்டுகளிலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 இலட்சத்து 51 ஆயிரத்து 469 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 22 இலட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் மட்டுமே.

அதே நேரத்தில், விவசாயிகளுக்கு நன்மை செய்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பாடுபட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டிற்குப்பின் 2024 – 2025 ஆண்டு வரை 4 ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மொத்தம் 1 கோடியே 70 இலட்சத்து 45 ஆயிரத்து 545 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 42 இலட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன் ஆகும்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் சராசரியாகக் கொள்முதல் செய்யப்பட்ட நெல் ஆண்டுக்கு 22 இலட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன். ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆண்டுக்கு, சராசரியாக கொள்முதல் செய்துள்ள நெல் 42 இலட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன் ஆகும். அதாவது முந்தைய ஆட்சியைவிட திராவிட மாடல் அரசு 19 இலட்சத்து 91 ஆயிரத்து 93 மெட்ரிக் டன் கூடுதலாகக் கொள்முதல் செய்துள்ளது.

இந்தச் சாதனை ஒன்றே விவசாயிகளிடம் முதலமைச்சர் அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை நாட்டிற்கு வெளிப்படுத்தும் உறுதியான சான்றாகும்.

நடப்பு ஆண்டில் முன்கூட்டியே தொடங்கப்பட்ட நெல் கொள்முதல் பணிகள்

தமிழ்நாட்டில் நடப்பு நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி 24.10.2025 வரை 1,853 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 10.40 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சிக்காலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதிதான் நெல் கொள்முதல் ஆரம்பிக்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, இந்த ஆண்டின் பருவமழைக்கு முன்பாகவே விவசாயிகள் நெல் அறுவடை செய்து, புதிய விலையில் நெல் விற்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே, செப்டம்பர் 1-ஆம் தேதியே கொள்முதல் தொடங்கப்பட்டுவிட்டது.

மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் நெல்​ தற்போது கொள்முதல் செய்யப்பட்ட 10.40 இலட்சம் மெ.டன்களில் 8.77 இலட்சம் மெ.டன் மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுவிட்டது. மீதம் 1.63 இலட்சம் மெ.டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திருவாரூர் மாவட்டத்தில் 53,831 மெ.டன் நெல்லும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 23,125 மெ.டன் நெல்லும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 16,793 மெ.டன் நெல்லும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 21,537 மெ.டன் நெல்லும் நகர்வு செய்யப்படவேண்டும்.

21.10.2025-க்குப் பிறகு தஞ்சாவூரிலிருந்து தினமும் 4 இரயில்களும் (7,000 மெ.டன்), திருவாரூரிலிருந்து 5 இரயில்களும் (9,000 மெ.டன் முதல் 10,000 மெ.டன் வரை), மயிலாடுதுறையிலிருந்து 2 இரயில்களும் (4,000 மெ.டன்), நாகப்பட்டினத்திலிருந்து 1 இரயிலும் (2,000 மெ.டன்) இயக்கப்பட திட்டமிடப்பட்டு நகர்வு செய்யப்படுகிறது.​திருவாரூரிலிந்து மட்டும் 48,000 மெ.டன் நகர்வு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரப்பதத்தை உயர்த்திட கோரிக்கையும் குழுக்கள் வருகையும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல் கொள்முதல் ஈரப்பத அளவினை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரிக்க ஒன்றிய அரசிற்கு 19.10.2025 அன்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அக்கோரிக்கையை ஏற்று 23.10.2025 அன்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் நெல் ஈரப்பதத்தினை ஆய்வு செய்திட மூன்று வல்லுநர் குழுக்களை நியமித்து ஆணையிட்டுள்ளது; அதன்படி, நிபுணர் குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.

முதலமைச்சர் அவர்களின் ஆய்வும் நகர்வுப் பணிகளும்

முதலமைச்சர் அவர்கள் 2.10.2025 அன்று நெல் கொள்முதல், நகர்வு குறித்து ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து வட்ட வாரியாக குழுக்கள் அமைத்து இரயில் மூலமாக அதிகமாக நகர்வு செய்யப்பட்டு வருகிறது.

உணவுத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் குழு டெல்டா மாவட்டங்களில் 10.10.2025, 11.10.2025 ஆகிய நாள்களில் ஆய்வு செய்து கொள்முதல் மற்றும் நகர்வுப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் அவர்கள் தெற்கு இரயில்வே பொதுமேலாளர் அவர்களிடம் பேசி டெல்டா மாவட்டங்களுக்கு தினசரி 13 சரக்கு இரயில்கள் அனுப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டது. இரயில்வே நிர்வாகமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தினமும் நெல் கொள்முதல் நடைபெறுகிறது

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நேரம் மாலை 6.00 மணியிலிருந்து 8.00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிக கொள்முதல் நடைபெறும் 13 மாவட்டங்களில் கூடுதலாக 127 POP இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.அதிக நெல் வரத்து இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன.

19.10.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 5,510.4 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக 57,63,203 சாக்குகளும், 58 மெ.டன் சணல்களும், (15,204 + 13,652) 28,856 பிளாஸ்டிக் தார்ப்பாய்களும் இருப்பில் உள்ளன. மாநில அளவில் 2.65 கோடி சாக்குகள் இருப்பில் உள்ளன.

தற்சமயம் திருவாரூரில் அதிக நெல் இருப்பு உள்ளதால் அதனை நகர்வு செய்திட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாரியாக பொறுப்பு அளித்து கூடுதலாக 2 பொது மேலாளர்கள், 64 கண்காணிப்பாளர்கள் கொண்ட 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 4000 லாரிகள் மூலமாகவும், 13 முதல் 15 இரயில்கள் மூலமாகவும் நெல்கள் பாதுகாப்பாக கிட்டங்கிகளுக்கு தினசரி 35,000 மெ.டன் என்ற அளவில் திட்டமிட்டு நகர்வு செய்யப்படுகிறது.

100 சுமை தூக்கும் பணியாளர்கள் 21.10.2025 முதல் கூடுதலாக திருவாரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 மண்டல மேலாளர்கள் குழு ஒரு கூடுதல் பதிவாளர் ஆகியோர் கடந்த 10 நாட்களாக பணியாற்றி வருகின்றனர்.

சுமைப்பணியாளர் ஊதியத்தை உயர்த்தித் தந்து ஊக்கமளித்துள்ள திராவிட நாயகர்

முதலமைச்சர் அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பருவ கால சுமைதூக்குவோருக்கான ஊதியம் ஒரு மூட்டைக்கு ரூ.3.25/- என்று இருந்ததை ரூ.10/- என உயர்த்தி வழங்கி ஊக்கமளித்துள்ளார்கள். இதனால், சுமார் 34,000 தொழிலாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் அவர்கள் பொது விநியோக திட்டத்தினை வட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தவும் மற்றும் சேமிப்புக் கொள்ளளவினை மேம்படுத்தவும் ஆணையிட்டதைத் தொடர்ந்து, மொத்தம் 1 இலட்சத்து ஆயிரத்து 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 83 வட்ட செயல்முறை கிடங்குகள் 199 கோடியே 78 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 38 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 16 கிடங்கு வளாகங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் கொண்டுவரப்படவுள்ளன. மேலும் 62 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 67 கிடங்குப் பணிகளை நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு விவசாயிகளின் நலன்களைக் காப்பதில் முந்தைய ஆட்சிக் காலம் போல் இல்லாமல் ஒரு மாதம் முன்பாகவே, அதாவது செப்டம்பர் 1 ஆம் தேதி முதலே நெல் கொள்முதல் பணிகளை முடுக்கிவிட்டு அதன்மூலம் மிக அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவதுடன் அவற்றை உடனுக்குடன் மாவட்டங்களுக்கு அனுப்புவதிலும் சிறப்பான பணிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மையாகும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share