வைஃபை ஆன் செய்ததும், “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என கமெண்ட் அடித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
வாருமய்யா.. எல்லாமே நீர் சொன்னபடியே நடக்குதுதான்..
ஆமாய்யா.. அதிமுக- பாஜக கூட்டணியில டிடிவி தினகரனும் இணைஞ்சுட்டாரு..
கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இபிஎஸ் கூட போறதுக்கு பதிலா தூக்குல தொங்கிடுவேன்னு சொன்னவருதான் டிடிவி.. அவருக்கு பதிலடியாக 420 தான் டிடிவின்னு சொன்னவரு எடப்பாடி.. அதே மாதிரிதான், துரோகத்துக்கான நோபல் பரிசை இபிஎஸ்-க்குதான் கொடுக்கனும்னு சொன்னவரும் சாட்சாத் தினகரன்தான்..
இன்னைக்கு அதிமுக பாஜக கூட்டணியில தினகரன் சேர, எடப்பாடி அவரை வரவேற்க, “அரசியல்ல நிரந்தர எதிரியோ நண்பனோ இல்லை”ன்னு ப்ரூப் பண்ணிகிட்டு இருக்காங்க..
இதே எடப்பாடியை சிஎம் வேட்பாளராக ஏற்கவே முடியாதுன்னு சொல்லிட்டுதான் பாஜக கூட்டணியை விட்டே போனாரு டிடிவி.. இன்னைக்கு ‘முதல்வர் வேட்பாளர் யாருன்னு உங்களுக்கே தெரியுமே.. அதை ஏன் திரும்ப திரும்ப கேட்குறீங்கன்னு’ சொல்லி சமாளிக்கிறாரு.
டிடிவிக்கு என்னதான் தூண்டில் போட்டுச்சாம் பாஜக?
தூண்டிலா.. என்னய்யா தினகரன் மேலதான் கேஸ்கள் நிலுவையில் இருக்கே.. அது ஒன்னு போதாதா பாஜகவுக்கு? அதை வைச்சே டிடிவியை வழிக்கு கொண்டு வந்துருச்சு பாஜக.
டெல்லியில அமித்ஷாவை எடப்பாடி சந்திச்சு பேசனப்ப ‘தனிக்கட்சி’ நடத்துற டிடிவி தினகரனை கூட்டணியில சேர்த்தாகனும்னு சொன்னாரு.. எடப்பாடியும் ஓகேன்னு சொல்லிட்டு வந்துட்டாரு..”ன்னு நாமதான் சொல்லி இருந்தோமே..
2021 தேர்தல்ல தினகரனோட அமமுகவால தென் மாவட்டங்களில்ல 20 தொகுதிகளில்ல அதிமுக கூட்டணிக்கு சேதாரம் ஏற்பட்டுச்சு.. இந்த புள்ளி விவரங்களை எல்லாம் விளக்கியும் டிடிவி அவசியம் கூட்டணியில இருக்கனும்னு சொல்லி இருந்தாரு அமித்ஷா.
அதுக்கு பிறகு அமித்ஷாவை போய் டிடிவி தினகரனும் சந்திச்சு பேசி மீண்டும் என்டிஏவுக்கு ரிட்டர்ன் ஆகிட்டாரு..
டிடிவி தினகரனுக்கு எத்தனை தொகுதியாம்?
அதிமுக- பாஜக கூட்டணியில 8+1ன்னு ராஜ்யசபா சீட் கேட்டிருக்காரு டிடிவி.. இந்த முறை சட்டமன்ற தேர்தல்ல டிடிவி போட்டியிடலையாம்.. அதனால அந்த 1 ராஜ்யசபா சீட்டு கூட தனக்குதான்னு ரிசர்வ் செஞ்சி வெச்சிருக்காராம்..
பாஜகவோ, 6 சீட்டை கொடுக்கலாம்னு முடிவு செஞ்சிருக்காம்..,..
பாஜக- அதிமுக கூட்டணியில டிடிவி சேர்ந்த உடனேயே தென் மாவட்டங்களில்ல திமுக நிர்வாகிகளை உஷாராக இருக்க சொல்லி இருக்காங்க.. இதை பத்தி தென் மாவட்ட திமுக நிர்வாகிகள்கிட்ட பேசுனப்ப, “அமமுக பலமா இருக்கிற தொகுதிகளில்ல கூடுதலா வேலை செஞ்சாகனும்னு கட்டளை வந்திருக்கு சார்.. அதிமுகவும் தினகரனும் ஒரே கூட்டணியில இருக்கிறது தென் மாவட்டத்துல சில தொகுதிகளில் எங்களுக்கு டஃப் ஃபைட்டாதான் இருக்கும்.. அதனாலதான் இப்பவே உஷாராகிறோம்” என சொல்வதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
