’கூட்டணி ஆட்சி’- ”நீலகிரி பேச்சுவார்த்தை”யில் திமுக திட்டவட்ட நிராகரிப்பு! டெல்லியில் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை!

Published On:

| By Mathi

DMK Congress Alliance

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையை ஏற்க முடியாது என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனையடுத்து டெல்லியில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இந்த முறை ‘அதிகாரப் பகிர்வு- கூட்டணி ஆட்சி’ மற்றும் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை திமுக ஏற்க மறுத்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் புனித தாமஸ் பள்ளி பொன்விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி கடந்த 13-ந் தேதி வருகை தந்திருந்தார். அப்போது ராகுல் காந்தியை சந்தித்து பேச நீலகிரி தொகுதி எம்.பி.யும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசாவை ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் ஆ.ராசாவும் பங்கேற்றார். இதன் பின்னர் வானிலை மோசமாக இருப்பதால் தாம் உடனடியாக செல்ல வேண்டும் என ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார். இதனால் ராகுல் காந்தியுடன் ஆ.ராசா திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடத்த இயலவில்லை.

ADVERTISEMENT



நீலகிரி பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

அதே நேரத்தில் ராகுல் அறிவுறுத்தலின்படி, நீலகிரியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தமிழகத்துக்கான தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கூட்டணி பேச்சுவார்த்தைக்கான ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோருடன் ஆ.ராசா பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் காங்கிரஸ் தரப்பில், “ஆட்சியில் பங்கு- கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்; 3 அமைச்சர்கள் பதவி தர வேண்டும்; கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும்” என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், “2006 சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தும் அதை விட்டுவிட்டோம்.. இந்த முறை அந்த வாய்ப்பை விட்டுவிட முடியாது” என்றும் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஆ.ராசா, ”2006-ம் தேர்தலை காங்கிரஸ் கட்சி உதாரணமாக சுட்டிக்காட்டிப் பேசுவதே தவறு. அந்த தேர்தலுக்கு முன்னர் கூட்டணி ஆட்சி பற்றியோ, அமைச்சரவையில் இடம் பற்றியோ எதுவும் பேசவே இல்லை. அப்போது, நாங்கள் 132 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுத்தோம். அதில் நாங்கள் 96 இடங்களை பெற்றோம். ஒருவேளை தேர்தலுக்கு முன் கூட்டணி ஆட்சி என்றெல்லாம் பேசி ஓட்டு கேட்டிருந்தால் 65 சீட்தான் கிடைத்திருக்கும்.. கூட்டணி அமைச்சரவையை தமிழக மக்கள் ஒருநாளும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.. இப்போதும் அதுதான் மக்கள் மனநிலை” என விவரித்தார்.

ஆனாலும், “எங்க கட்சியின் MLA, MP-க்களில் 70% பேர் கூட்டணி ஆட்சிதான் வேண்டும்” என்கின்றனர் எனவும் காங்கிரஸ் தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

அப்போது, “கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பே இல்லை. நீங்க சொல்ற 2006-ல் கலைஞர் முதல்வராக இருந்த போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அனைத்தும் செய்தார். அதேபோல இந்த முறை வாரியம் உள்ளிட்டவைகளை கேளுங்கள்..அதுமாதிரி உள்ளாட்சி தேர்தல்களில் அதிக இடங்களைக் கேளுங்க.. முதல்வர் நிச்சயம் பரிசீலனை செய்வார்” என ஆ.ராசா மீண்டும் கூறினார். ஆனாலும் காங்கிரஸ் தரப்பு இதனை ஏற்க மறுத்து மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தியதால் நீலகிரி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

செல்வப்பெருந்தகையின் திடீர் முடிவு

இதனிடையே, தாம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் தம் மீது குற்றம்சாட்டுவதால் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்” என ராகுல் காந்தியிடம் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார். ஆனால் ராகுல் காந்தியோ, ”Don’t Worry.. அதெல்லாம் யாரும் எதுவும் நினைக்கவில்லை” என சொல்லி செல்வப்பெருந்தகைக்கு ஆறுதல் கூறினாராம்.

’எம்.எல்.ஏ.’வாக முடியுமா?

கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் இவ்வளவு தீவிரமாக வலியுறுத்தினாலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் ”ஆட்சியில் பங்கு கேட்கனும்தான்.. அதில் தப்பே இல்லை.. அதுக்காக திமுக கூட்டணியை விட்டு போகவும் கூடாது.. நிச்சயம் திமுக கூட்டணியில்தான் இருக்க வேண்டும்.. அப்பதான் நாம ஜெயிச்சு எம்.எல்.ஏ.க்களாக முடியும். விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்தால் ஒரு எம்.எல்.ஏ. கூட கிடைக்காது… பல தொகுதிகளில் கட்சி அமைப்பே இல்லாத தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதால எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை” என அழுத்தம் திருத்தமாகவே சொல்லி வருகின்றனர்.

டெல்லி ஆலோசனை

இத்தகைய பின்னணியில்தான் டெல்லியில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் ‘தலைவர்களுடன்’ ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் துணை அமைப்புகளின் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் ‘கூட்டணி ஆட்சி’ குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share