”புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் படி ஆவின் பால் பொருட்களின் விலையை குறைத்து மாற்றியமைக்காமல், தள்ளுபடி என்ற பெயரில் மக்களை மடைமாற்ற நினைக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்வை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி அறிவித்தபடி தீபாவளி பரிசாக மத்திய அரசால் மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் இன்று (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதில் முக்கியமாக பால் பொருட்களின் மீதான வரியை 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நடத்தி வரும் ஆவின் நிறுவனத்தின் பால் பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த நிலையில் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் காரணமாகவும், பண்டிகை கால சலுகையாகவும் ஆவின் நிறுவனம் நெய், பன்னீர் உள்ளிட்டவற்றின் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, ஒரு லிட்டர் ஜார் நெய் ரூ.690லிருந்து ரூ.650 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் ரூ.110க்கும், ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட 1/ 2 கிலோ பன்னீர் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் விலை குறைப்புக்கு பதிலாக தள்ளுபடி என்ற ஏமாற்றுவதாக தமிழக பாஜக அறிக்கை வெளியிட்டது.
அதில், ”ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் நமது மத்திய அரசு ஜிஎஸ்டியில் கொண்டு வந்த புதிய சீர்த்திருத்தங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் பொருட்களின் விலை இன்னும் குறைந்தபாடில்லை.
பால் பொருட்களின் மீதான வரியை 12% லிருந்து 5% ஆக குறைத்துள்ள புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் படி ஆவின் பால் பொருட்களின் விலையை குறைத்து மாற்றியமைக்காமல், தள்ளுபடி என்ற பெயரில் மக்களை மடைமாற்ற நினைக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்வை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதுவும் நாட்டின் புதிய ஜிஎஸ்டி வரியை முழுமையாக செயல்படுத்தாமல், ஆவின் பால் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை, வரப்போகும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறிது தள்ளுபடி வேண்டுமானால் கொடுக்கிறோம் என்ற தொனியில் ஒரு அறிவிப்பை வெளியிடும் ஆளும் அரசின் ஆணவம் கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது.
இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் ஒரு தெளிவான அறிக்கை மற்றும் விளக்கத்தை உடனடியாக அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.