“சார்… நான் டிகிரியை கரஸ்ல (Correspondence) தமிழ்ல படிச்சேன்… எனக்கு டிஎன்பிஎஸ்சில முன்னுரிமை உண்டா?” என்று கேட்டுக்கொண்டு வரும் பலருக்கும், தமிழக அரசு ஒரு தெளிவான பதிலைச் சட்டமாகவே மாற்றியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு (PSTM) வழங்கப்பட்டு வருகிறது. இதில் இருந்த சில குழப்பங்களைத் தீர்க்கவும், தகுதியானவர்களுக்கு மட்டுமே வேலை கிடைப்பதை உறுதி செய்யவும், நேற்று (ஜனவரி 23) சட்டசபையில் ஒரு முக்கியமான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்? இதுவரை சிலர் ஆங்கில வழியில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, பெயருக்கு ஒரு டிகிரியை மட்டும் தமிழ் வழியில் படித்துவிட்டு “நானும் தமிழ் வழி மாணவன் தான்” என்று இட ஒதுக்கீட்டைக் கோரி வந்தனர். இனி அந்த ‘வேலை’ ஆகாது!
புதிய விதிகளின்படி:
- ஆரம்பம் முதல் அதிரடி: ஒரு வேலைக்குக் கல்வித் தகுதி டிகிரி என்றால், அவர் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றும் டிகிரி என முழுவதும் தமிழ் வழியில் மட்டுமே படித்திருக்க வேண்டும்.
- தனித்தேர்வர்கள் உஷார்: 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்லாமல், நேரடியாக 10ஆம் வகுப்பைத் தனித்தேர்வராக (Private Candidate) எழுதியவர்கள், இந்த இட ஒதுக்கீட்டிற்குக் கீழே வரமாட்டார்கள். அவர்கள் தகுதியற்றவர்கள்.
- ஆனாலும் ஒரு ரிலாக்ஸேஷன்: கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTE), 1ஆம் வகுப்பில் சேராமல் நேரடியாக 2ஆம் வகுப்பிலோ அல்லது 8ஆம் வகுப்பிலோ சேர்ந்து, அதன் பிறகு முழுமையாகத் தமிழ் வழியில் படித்திருந்தால் அவர்கள் தகுதியானவர்களே!
பழைய ஆட்களுக்குச் சிக்கலா? “ஏற்கனவே வேலையில் சேர்ந்தவங்க கதி என்ன?” என்று பயப்பட வேண்டாம். 2010 முதல் இதுவரை இந்த ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற்றவர்களின் வேலைக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சட்டசபையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படிக்கும் தமிழ் வழி மாணவர்களே… உங்க பள்ளிக்கூடத்துல 1ஆம் வகுப்பிலிருந்து 10/12ஆம் வகுப்பு வரை தமிழ்ல தான் படிச்சீங்க அப்படிங்கிறதுக்கான ‘PSTM சான்றிதழ்’ (PSTM Certificate) தனித்தனியா வாங்கி வைங்க. ஏதோ ஒரு வருஷம் இங்கிலீஷ் மீடியம் படிச்சிருந்தா கூட, இந்த 20% கோட்டா உங்களுக்குக் கிடைக்காது. கடைசி நேரத்துல பதறாம, இப்பவே சர்டிபிகேட்டை ரெடி பண்ணிடுங்க பாஸ்!
