கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருப்பூரில் உணவகங்களை நம்பியிருக்கும் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தின் எதிரொலியாக இந்தியாவுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் தாக்கம் தமிழகம் முழுவதும் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் கடும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தொழில் நகரமான திருப்பூரில் இந்தப் பாதிப்பு தீவிரமாகப் பதிவாகியுள்ளது.
பின்னலாடைத் தொழிலுக்குப் பெயர் பெற்ற திருப்பூரில் லட்சக்கணக்கான வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அன்றாட உணவிற்காக சிறிய மெஸ்கள் மற்றும் ஹோட்டல்களை நம்பியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகிறது. ஆனால் தற்போது நிலவும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்களில் இனி ‘கலவை சாதம்’ மட்டுமே வழங்கப்படும். தற்போது கையிருப்பில் உள்ள சிலிண்டர்களைக் கொண்டு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே ஹோட்டல்களை இயக்க முடியும். அதன் பின்னர் முழுமையாக மூட வேண்டிய சூழல் உருவாகலாம். அதே சமயம் இந்த ஓட்டல்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படும சூழல் உருவாகும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
திருப்பூரில் மட்டும் நாள்தோறும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் ஹோட்டல்களில் உணவு உண்ணுகின்றனர். உணவகங்கள் மூடப்பட்டால், இவர்களுக்கு அன்றாட உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. இது பின்னலாடை உற்பத்தித் தொழிலையும் பாதித்து, நகரின் பொருளாதாரத்திற்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிவாயு விநியோகத் தடையை சரிசெய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மக்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
