எண்ணெய் இல்லாமல் அல்லது சிறிதளவு எண்ணெய்யில் காய்கறிகள் சமைப்பது குறித்து சில டிப்ஸ்களைப் பார்க்கலாம்.
தற்போதைய காலத்தில் எடை அதிகரிப்பு, கொழுப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு நம் அன்றாட உணவில் எண்ணெய் பயன்பாடு அதிகரித்ததுதான் காரணம் என்று கூறும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஆகவே, உணவில் எண்ணெய்யை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். ஆனால், குறைந்த எண்ணெயில் உணவு வழக்கம் போல சுவையாக இருக்குமா என்று மக்கள் யோசிக்கிறார்கள்.
குறிப்பாக நிறைய எண்ணெயில் பொரித்தால்தான் காய்கறிகள் சுவையாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது முற்றிலும் தவறான விஷயம். நீங்கள் சரியான முறையைப் பின்பற்றினால், குறைந்த எண்ணெயில் அல்லது அது இல்லாமலேயே சுவையான உணவை சமைக்கலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு காய்கறிகளை எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வோம்.
என்ன பாத்திரம் பயன்படுத்தலாம்? ஒரு நான்-ஸ்டிக் பான் அல்லது தடிமனான அடிப்பகுதி கொண்ட வாணலியை பயன்படுத்த வேண்டும். வழக்கமான வாணலியை பயன்படுத்துவதற்குப் பதிலாக, தடிமனான வாணலி பயன்படுத்துவது, காய்கறிகள் அடிப்பகுதியில் ஒட்டாமல் தடுக்கும். வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெய்யில் கடுகு மற்றும் சீரகத்தை சேர்க்கலாம்.
காய்கறிகளுக்கு சுவையூட்ட வெங்காயம், தக்காளி, தேங்காய் அல்லது இஞ்சி-பூண்டு பேஸ்ட்களை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்ட்டை எண்ணெயில் பிரட்டுவதற்கு பதிலாக சிறிது தண்ணீரில் வதக்கவும் அல்லது அப்படியே வதக்கவும். மசாலாப் பொருட்கள் சேர்த்து பச்சை வாசனை குறைந்தவுடன், சிறிது தண்ணீர் சேர்த்து காய்கறிகளை அதில் இட்டு சமைக்க வேண்டும். இது எண்ணெய் இல்லாமல் கூட மசாலாப் பொருட்களின் நறுமணத்தையும் சுவையையும் பாதுகாக்கிறது.
காய்கறிகளை வேகவைப்பதை வழக்கமாக்குங்கள்: காய்கறிகளை வேகவைப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் காய்கறிகளை எண்ணெய்யில் வறுப்பதை காட்டிலும் வேகவைப்பது மிகவும் நல்லது. வாணலியில் காய்கறிகளை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூட வேண்டும். இதனால் காய்கறிகள் வேகமாக வெந்து மென்மையாகின்றன. இது அவற்றின் ஊட்டச்சத்துக்களையும் பாதுகாக்கிறது மற்றும் அதிகப்படியான எண்ணெயின் தேவையை நீக்குகிறது.
காய்கறிகளை தேர்வு செய்துகொள்ளவும்: சமைக்க வேண்டிய காய்கறிகள் என்னவென்று முடிவு செய்துகொள்ள வேண்டும். காலிஃபிளவர், பீன்ஸ் போன்ற காய்கறிகளை உப்பு நீரில் சிறிது நேரம் வேகவைத்து, பின்னர் அவற்றை நேரடியாக சற்று எண்ணெயில் சேர்க்க வேண்டும். இது காய்கறிகளை குறைந்த எண்ணெயில் சமைக்க உதவுகிறது.
இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, காய்கறிகளையும் நன்றாக வேக வைக்கும். காய்கறிகள் சமைக்கும் போது சிறிதளவு கொத்தமல்லி இலைகள், சிறிது எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இது குறைந்த எண்ணெயில் சமைக்கப்படும் காய்கறிகளின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் அனைவருக்கும் பிடித்தமானதாக மாற்றுகிறது.
