சென்னையில் உள்ள மகளிர் ஆணையத்தில் மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராகி உள்ள நிலையில் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என ஜாஸ் கிரிஸில்டா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து தற்போது தான் கர்ப்பமாக உள்ள நிலையில் சேர்ந்து வாழ மறுப்பதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் நேற்று (அக்டோபர் 15) மாலை மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர்.
நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.
இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை.
ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று (அக்டோபர் 16) சென்னை சேப்பாகத்தில் உள்ள மகளிர் மாநில ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகி உள்ளார். புகார் தெரிவித்துள்ள ஜாய் கிரிஸில்டாவும் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார்.
மன்னிப்பு கேட்க நோட்டீஸ்
ஜாய் கிரிஸில்டா நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சனையை முடித்துக்கொள்ள தன்னை அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிடதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜாய் கிரிஸில்டா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், மாதம்பட்டி ரங்கராஜ்க்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகளை அவர் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், 24 மணி நேரத்திற்குள் அந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், அணுகியவர்கள் யார் என்பதை ரங்கராஜ் வெளியிட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தவறினால் அவர் மீது உரிய குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.