பாஜக அலுவலகம் மீது குண்டுவீசிய வழக்கில் தபெதிகவை சேர்ந்த மூவருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து, அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 31) விடுதலை செய்து உத்தரவிட்டது.
கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் பாஜக மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மீது கடந்த 2018 மார்ச் 7-ம் தேதி அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இந்த சம்பவத்தில் கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த ஜீவா (எ) ஜீவானந்தம், கோபால் (எ) பாலன், கவுதம் (எ) கவட்டய்யன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் முன்பு திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை அடுத்து, பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா, தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, தபெதிக பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார். அதன்பிறகு, திருப்பத்தூரில் பாஜக பிரமுகரால் பெரியார் சிலை உடைக்கப்பட்டது.

இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூவர் மீதும் 2 பிரிவுகளில் காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து கோவையில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரணைக்கான அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.சசிரேகா, கடந்த 2023ஆம் ஆண்டு கைதான மூவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,000 அபராதம் விதித்தது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் ஆதரவாக மூத்த வழக்கறிஞர் துரைசாமி மற்றும் இளங்கோவன் வாதாடினர்.
வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன், ஜீவானந்தம், பாலு, கௌதம் ஆகியோரின் 7 வருட சிறை தண்டனையை ரத்து செய்ததுடன், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து வழக்கறிஞர்கள் துரைசாமி மற்றும் இளங்கோவனுக்கு தெபதிக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.