நெல்லையில் ஜாதி ஆணவப் படுகொலை (Kavin Caste Honour Killing) செய்யப்பட்ட ஐடி பணியாளர் கவின் உடலை வாங்க அவரது பெற்றோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை கவின், வேறு ஜாதியை சேர்ந்த சுபாஷிணியை காதலித்தார். இதில் ஆத்திரமடைந்த சுபாஷிணியின் தம்பி சுர்ஜித், கவினை வெட்டிப் படுகொலை செய்தார். தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது இந்த ஜாதி ஆணவ படுகொலை.

கவின் படுகொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் சரணடைந்த சுர்ஜித் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளார். தாய் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆனாலும் சுர்ஜித்தின் தாயார் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியையும் கைது செய்ய வலியுறுத்தி கவின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர் வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நேற்று நெல்லை சென்று கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று கவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் கவின் உடலை வாங்கி நல்லடக்கம் செய்ய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நெல்லை பகுதியில் 3 நாட்களாக கவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வருகிறது.