தூத்துக்குடி மாணவி விவகாரம்… மெத்தன போக்காக இருப்பதா? காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்!

Published On:

| By Kavi

காவல்துறையின் மெத்தனம் ஏற்புடையது அல்ல என்று தூத்துக்குடி மாணவி மர்ம மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மார்ச் 10ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து காட்டுப்பகுதிக்கு சென்றார்.

ADVERTISEMENT

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. மாணவி மாயமானது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர். இதன் காரணமாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த சூழலில் மாணவி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ்வரி தாக்கல் செய்த மனுவில், ‘மாணவி காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டபோது பெண் காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததோடு பெற்றோர்களை மோசமாக பேசியுள்ளார். சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

புகார் அளித்த உடனே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவி காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

ADVERTISEMENT

போலீசாரின் தாமதம் காரணமாகவே மாணவியின் உயிர் பறிபோய் உள்ளது. தற்போது போலீசார் தங்களது மெத்தனப் போக்கை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் இன்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில், சரியான பாதையில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுவதற்கு எந்த ஆட்சேபனமையும் இல்லை. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தென் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் இது போன்ற குற்ற நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன.

அதேசமயம் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் போது உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியாது. விசாரணையை சரியாக நடக்கவும் முடியாத நிலையை ஏற்படுத்தும்.

வழக்கில் அறிவியல் பூர்வமான சான்றுகளை சேகரிக்க வேண்டும். இது போன்ற வழக்குகளில் அவகாசம் வழங்காமல் அழுத்தம் தருவது விசாரணை சரியான பாதையில் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தும். இந்த வழக்கின் விசாரணை குறிப்புகளை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அப்போது மனுதாரர் சார்பில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்த உடனேயே போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள் போலீசார் இது போன்ற புகார்களை மெத்தனமாக கையாள்வது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share