தூத்துக்குடியில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை பார்க்கச் சென்ற கனிமொழி எம்.பியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மர்மான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இயற்கை உபாதை கழிப்பதற்காக கடந்த 10ஆம் தேதி மாலை 7 மணியளவில் காட்டுபகுதிக்குச் சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அளித்த புகார் மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் அலட்சியம் காட்டியுள்ளனர். ஆய்வாளர் பிரவீனா, ‘உங்க பொண்ணு யாரையாச்சு வவ் பண்ணியிருக்கும்… ஓடி போயிருக்கும்” என்று பதிலளித்திருக்கிறார்.
இந்தசூழலில் ஊர் மக்களும் உறவினர்களுமே தேடிய போது நேற்று முன்தினம் அதே பகுதியில் இருக்கும் ஒரு முட்புதரில் மாணவியின் உடல் கிடந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் உடலை மீட்டு போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பும், விளாத்திக்குளம் பகுதியிலும் உயிரிழந்த மாணவியின் உறவினரும் ஊர்க்காரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களிடம், நீங்கள் வழக்கை திசை திருப்பும் நோக்கில் போராடுகிறீர்கள்… இங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் கூற, நீங்கள் வந்து மாணவியை தேடியிருந்தால் இந்த நிலைமையையே வந்திருக்காது என ஊர் மக்கள் சொல்ல இரு தரப்புக்கும் இடைவே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாணவியின் ஊரான வேடநத்தம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.
இப்படிபட்ட நிலையில், தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் இருவரும் உயிரிழந்த மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூற சென்றனர்.
ஆனால் அவர்களை முற்றுகையிட்ட மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகிவிட்டது…. இத்தனை நாட்களாக எங்கு சென்றீர்கள் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர். அவர்களிடம் கனிமொழி எம்.பி. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானமாக பதிலளித்தார்.
தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்று உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று நம்பிக்கை அளித்தார்.
அப்போது அங்கிருந்த ஊர் பெரியவர், மாணவி எப்போது காணாமல் போனார் என்பது முதல் காவல்நிலையத்தில் எப்படி அலட்சியமாக நடந்துகொண்டனர் என்பது வரை அனைத்தையும் கனிமொழியிடம் கூறினார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இளம் மாணவிக்கு ஒரு மிகப்பெரிய கொடுமை நடந்திருக்கிறது. 10 குழுக்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். அந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கடுமையான தண்டனம் பெற்றுத் தரப்படும்” என்று கூறினார்.
மேலும் அவர், “பிரேத பரிசோதனை நடந்து இன்னும் முழுமையாக ரிப்போர்ட் வரவில்லை. விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
