திமுகவுடன் பேரம் பேசும் கட்சி இல்லை விசிக.. ஆட்சியில் பங்கு குறித்து மனம் திறந்த திருமா

Published On:

| By Pandeeswari Gurusamy

Thirumavalavan suspends two party executives

திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு வழக்கமான தேர்தல் அல்ல. வலதுசாரி சக்திகளைத் தடுக்கும் பொறுப்புணர்வோடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளோம்” என்றார்.

திமுகவுடன் பேரம் பேசும் கட்சியாக அல்லாமல், கூட்டணியின் வெற்றிக்காக செயல்படும் அங்கமாகவே விசிக செயல்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழக மக்களுக்கான வெற்றி, சமூகநீதிக்கான வெற்றி என்ற புரிதலோடு அதிகாரப் பகிர்வு குறித்து தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

“எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விவாதிக்கவில்லை. எங்கள் கட்சியின் வலிமைக்கேற்ப அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும் என்பதை தெரிவித்துள்ளோம். எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதையும் கூறியுள்ளோம். அந்த எண்ணிக்கை உறுதியான பின் அறிவிப்போம்,” என்றார்.

ராஜ்யசபா இடம் குறித்து கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும், ஆனால் புதுச்சேரியில் ஒரு பொதுத்தொகுதி மற்றும் ஒரு தனித்தொகுதி வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, “கூட்டணி அரசியலை வெளிப்படையாக விவாதிக்க முடியாது” என பதிலளித்தார்.

நேற்று மதுரைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தது குறித்த கேள்விக்கு, “தமிழகத்தில் ‘மோடி வித்தை’ எடுபடாது. எத்தனை முறை வந்தாலும், என்ன பேசினாலும் தமிழக அரசியலில் பெரிய தாக்கம் ஏற்படாது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது. 2026 தேர்தல் இதை மீண்டும் நிரூபிக்கும்” என்றார்.

மேலும், “இங்கு மதவாதம் அல்லது வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை. மதம் மற்றும் சாதி பெயரில் வெறுப்பு பரப்பும் அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள். சமூகநீதி சார் அரசியல் சூழலை பாதுகாக்கும் பொறுப்பு திமுகக்கு உள்ளதுபோல், ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் உள்ளது. அதற்கேற்ப விசிகவும் தன் உரிமையையும் வலியுறுத்தியுள்ளது” என தெரிவித்தார்.

“ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்தது விசிகதான். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனினும், தற்போதைய அரசியல் சூழல் அதற்கான வாய்ப்பை இன்னும் உருவாக்கவில்லை” என்றும் கூறினார்.

திமுக–காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு இழுபறி குறித்த கேள்விக்கு, “எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில்தான் இருக்கும். கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share