’ட்ராகன்’ படம் மூலமாக தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தவர் கயாடு லோஹர். விளம்பரப் படங்களின் வழியே கன்னட சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் மலையாளம், தெலுங்கில் நடித்தாலும், அந்தப் படமே அவருக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கக் காரணமானது. பட்டிதொட்டியெங்கும் அவரைப் பிரபலப்படுத்தியது.

தற்போது தமிழில் ‘இதயம் முரளி’, ‘இம்மார்ட்டல்’ படங்களில் அதர்வா மற்றும் ஜி.வி.பிரகாஷ் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் கயாது லோஹர். டொவினோ தாமஸ் உடன் ‘பள்ளிசட்டம்பி’ எனும் மலையாளப் படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் ‘எஸ்எஸ் மியூசிக்’ யூடியூப் சேனலில் தொகுப்பாளர் ஏஞ்சலின் உடனான நேர்காணலில் பங்கேற்றிருந்தார் கயாது லோஹர். அந்தப் பேட்டியில், தான் ஒரு கீழ் நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் என்றும் ‘ரொம்பவே சென்சிடிவ்வான நபர்’ என்றும் சொல்லியிருந்தார்.
அந்த பேட்டியின் இடையே, ‘படப்பிடிப்பில் ரொம்பவே கஷ்டமான விஷயம் எது’ என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, ‘காமெடி படத்துல நடிக்குறது ரொம்ப கஷ்டம்’ என்ற கயாடு, ‘பிரின்ஸ்’ இயக்குனர் அனுதீப்பின் படத்தில் தற்போது நடித்து வருவதாகக் கூறினார்.
“ஒரு மொழி தெரியும்போது, அதில் இருக்கிற கலாசாரம், ரசிகர்களின் எதிர்பார்ப்பு என எல்லாமே புரியும். எனக்கு நல்ல ‘சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்’ உண்டு. என்றாலும், காமெடி படம் பண்ணுவது கஷ்டம் தான். ஒவ்வொரு டேக்லயும் சரியான ‘பஞ்ச்’ உடன் பேச வேண்டும். அதை புரிஞ்சு பேசினால் தான், அது வொர்க் அவுட் ஆகும்.
அனுதீப்பை பொறுத்தவரை, ‘இது சரியா வரலையா. அப்ப இப்படி சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு வேறு டயலாக்கை சொல்வார். ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருப்பார். அதற்கேற்றவாறு தயார் ஆவது கஷ்டம் தான்.
தாய்மொழியான அஸ்ஸாமியில் வசனம் இருந்தால், அந்த கஷ்டம் பெரியளவில் தெரியாது. மற்ற மொழிகளில் காமெடி படங்களில் நடிக்கிறபோது அது நிறையவே இருக்கும்” என்று கூறினார் கயாடு.
இவ்வளவும் சொன்னவர், அனுதீப்பின் ‘பிரின்ஸ்’ படத்தைப் பார்த்தாரான்னு சொல்லலையே..!?