தென்னகத்தின் அயோத்தி: பகுதி 2 

Published On:

| By Minnambalam Desk

தமிழ் முருகனா, சமஸ்கிருத சுப்ரமணியனா?

சுதிப்தோ மண்டல்

கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க: https://minnambalam.com/thiruparankundram-is-the-ayodhya-of-the-south/

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் குறித்த மோதல் ஆர்எஸ்எஸ் தோன்றுவதற்கு முன்பே, தெய்வீகக் கருத்துக்களும் சாதிப் பெருமையும், நில ஆதிக்கமும் கலந்த நீண்டகாலப் போராட்டமாகவே இருந்துள்ளது.

முருகன் தமிழ்க் கடவுள் என்று கொண்டாடப்பட்டாலும், திருப்பரங்குன்றம் உட்பட ஆறு முக்கியக் கோயில்களிலும் பிராமண அர்ச்சகர்கள் சமஸ்கிருத மந்திரங்களிலேயே பிரார்த்தனை செய்கிறார்கள். முருகனை சுப்ரமணியன், ஸ்கந்தன், கார்த்திகேயன் என்று சமஸ்கிருதப் பெயர்களில் அழைப்பதே இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது.

ADVERTISEMENT

சங்க இலக்கியங்களில் முருகன், வேல் ஏந்தி, ஆடு பலியிடும் (பிராமணரல்லாத) மலைத் தெய்வமாக இருந்தார். ஆனால், பிற்காலச் சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் காலங்களில், அரச ஆதரவுடன் பிராமணிய சமஸ்கிருத ஆகமச் சடங்குகள் புகுத்தப்பட்டன.

இதன் விளைவாக, முருகன் சிவ-பார்வதியின் பிள்ளையான சுப்ரமணியன் என்ற பிராமணியப் பரிமாணத்தைப் பெற்றார். இந்திரனின் மகளான தேவயானையை மணந்த முருகனின் தோற்றமே அவரது பிரதான வடிவமாகக் கருதப்பட்டது. முருகன் சார்ந்த பெருவழிபாட்டு மரபு இந்த வடிவத்தையே ஆராதிக்கிறது. பழங்குடிப் பெண்ணான வள்ளியை மணந்த வடிவம் சடங்கற்ற, அசைவ உணவும், தமிழ்ப் பாடல்களும் நிறைந்த சாதாரண/கிராமிய வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. (திருப்பரங்குன்றத்தில் வள்ளியின் கதை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.)

ADVERTISEMENT

சமூகநீதியும் நீதிமன்றத் தடைகளும்

1971இல் திமுக ஆட்சியில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. பிராமணச் சங்கங்கள் இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தன.

உச்ச நீதிமன்றம், ஆகம நடைமுறைகளை மீறுவது பக்தர்களின் மத நம்பிக்கையை மீறுவதாகும் என்று கூறி, அர்ச்சகர் நியமனத்தைச் சமஸ்கிருத ஆகம விதிகளுக்கு உட்பட்டது என்று தீர்ப்பளித்தது. தீண்டப்படாதவர்கள் சிலையைத் தொட்டால் கடவுள் விலகிவிடுவார் என்று புராணங்கள் சொல்வதைச் சுட்டிக்காட்டி, நீதிமன்றம் பிராமணர்களின் வாதத்தை நிலைநாட்டியது.

இதனால், கலைஞரின் சட்டம் 35 ஆண்டுகள் நீதிமன்றத்தில் சிக்கி, அதன் தீவிரத்தன்மையை இழந்தது. ஸ்டாலின் அரசு 2021இல் மீண்டும் பிராமணர் அல்லாத அர்ச்சகர்களை நியமித்தபோதும், ஆகமக் கோயில்களில் பிராமணரல்லாத அர்ச்சகர்களின் நியமனம் இன்னும் நீதிமன்ற நிலுவையில் உள்ளது. தேவர்கள், நாடார்கள் போன்ற பிராமணர் அல்லாத ஆதிக்கச் சாதியினரே பிராமணரல்லாதோர் அர்ச்சகராக வருவதைத் தடுக்கும் சக்திகளாக உள்ளனர்.

கருப்புசாமி: புறக்கணிக்கப்பட்ட ஆதித்திராவிடக் கடவுள்

முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு முன்பே, கருப்புசாமி (கருப்புக் கடவுள்) என்ற ஒரு ஆதித் திராவிடக் கடவுள் இருந்தார். இவரது நாட்டுப்புறக் கதைகளின் மீதுதான் முருகனின் கதைகள் ஏற்றப்பட்டன.

இன்று திருப்பரங்குன்றம் கோயிலில், கருப்புசாமி “காவல் தெய்வமாக”, ஆகம சாதியக் கோட்பாட்டின்படித் தனது கடமையைச் செய்து, முருகனின் கருவறையைப் பாதுகாக்கிறார். இது ஆதித் திராவிடர்களிடமிருந்து சடங்கு அதிகாரத்தைப் பிடுங்கி ஆதிக்கச் சாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உணர்த்துகிறது.

19ஆம் நூற்றாண்டிலிருந்து அயோத்திதாசப் பண்டிதர் போன்ற தலித் அறிஞர்கள், தமிழ்நாட்டின் ஆதித் திராவிடர்கள் ஆதிக்கச் சாதிகள் அல்ல, மாறாகப் பறையர்கள், பள்ளர்கள் போன்ற சமூகத்தினரே என்று வாதிட்டனர். இந்த ஆதி திராவிடத் துறை (சமூக நீதித் துறை) என்ற பெயரானது, சங்க இலக்கியங்களுக்கு முன்பே இங்கு வாழ்ந்தவர்களைக் குறிக்கும் விதமாக, அந்த வரலாற்று உண்மையை அங்கீகரிக்கிறது.

இந்த இலக்கியக் காவியங்கள் அரசர்களால் உருவாக்கப்பட்டு, சமூக ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பட்டன. முகமது யூசுப் கான் (இஸ்லாமிற்கு மாறிய முக்குலத்தோர்) போன்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள்கூடத் திருப்பரங்குன்றம் கோயில் பிராமணர்களுக்கு மானியம் வழங்கினர். இது, ஆட்சியாளர்கள் மாறினாலும், பிராமணர்களின் அரசியல் செல்வாக்கைக் காக்க எல்லா அரசுகளும் முயன்றன என்பதைக் காட்டுகிறது.

வழக்குகள்: காலனியாதிக்ககாலப் பூசல்கள்

திருப்பரங்குன்றம் மலை மீதான இந்துக்களின் போராட்டம் காலனியாதிக்கக் காலத்திலிருந்தே நடந்துவருகின்றன. 1862, 1912ஆம் ஆண்டுகளில் மலையின் உச்சியில் விளக்கு ஏற்ற முயற்சிகள் நடந்ததாகவும், ஆனால் அது “வழக்கம் இல்லை” என்றும் “சட்டம் – ஒழுங்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்” என்றும் கூறி மாவட்ட மாஜிஸ்திரேட் தடுத்ததாகவும் சான்றுகள் கூறுகின்றன.

1917: பூசலின் ஆரம்பம்

1917ஆம் ஆண்டில், நாட்டுகோட்டைச் செட்டியார் (நகரத்தார்) சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.வி. அழகப்பச் செட்டியார், கோயில் மேலாளர், புரவலர் என்ற முறையில், மலையின் சில பகுதிகள் மீது அரசாங்கமும் தர்காவும் உரிமைகோருவதை எதிர்த்து சப்-கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

செட்டியார், முழு மலையையுமே “சுப்ரமணியக் கடவுளின் உறைவிடம்” என்றும், எனவே அது கோயிலுக்கு மட்டுமே சொந்தம் என்றும் வாதிட்டார். அவர், தர்கா முஸ்லிம் ஆட்சியின்போது ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

பிராமணர்களுக்கு மானியம் அளித்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

காலனியாதிக்கத் தீர்ப்பு (1923 – 1931)

துணை நீதிமன்றத் தீர்ப்பு (1923): நீதிபதி பி.ஜி. ராமா ஐயர், மசூதி, நெல்லித்தோப்பு, உச்சியிலுள்ள கொடிமரம் உட்படத் தர்காவுக்கான பாதைகள் முஸ்லிம் தரப்புக்குச் சொந்தம் என்று தீர்ப்பளித்தார். அதே சமயம், மலையின் ஆக்கிரமிப்பற்ற பகுதிகள் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டன.

சன்னிதி வீதி (கடைகள் நிறைந்த வணிக மையம்) பொதுச் சொத்தாக அறிவிக்கப்பட்டது.

நீதிபதி ஐயர், தர்கா ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்துவருகிறது என்று ஏற்றுக்கொண்டாலும், “அரபியில் நபிகள் நாயகம் வருவதற்கு முன்பே” மலையின் புனிதத்தன்மை இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார்.

பிரிவி கவுன்சிலின் இறுதித் தீர்ப்பு (1931) 

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, லண்டனில் உள்ள பிரிவி கவுன்சில், நீதிபதி ஐயரின் தீர்ப்பை மீட்டெடுத்தது. நெல்லித்தோப்பு உட்படத் தர்காவுக்கு உரிய பகுதிகள் முஸ்லிம்களுக்கும், மற்ற ஆக்கிரமிப்பற்ற பகுதிகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்திற்கும் என்று பிரித்து வழங்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின் தொடரும் வழக்குகள்

1931இல் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகும், கோயில் நிர்வாகம் தொடர்ந்து தர்காவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில், அறநிலையத் துறை மூலம் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரியே கோயிலின் சார்பில் வழக்குத் தொடுத்தார்.

2000ஆம் ஆண்டில் தர்கா மின் இணைப்பு பெறவும் தர்காவைப் புதுப்பிப்பிக்கவும் முயன்றபோது கோயில் நிர்வாகம் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது. 2012ஆம் ஆண்டில் நீதிமன்றம் நெல்லித்தோப்பு வரையிலான மின் செலவுகளை உள்ளாட்சி அமைப்பும், தர்காவும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டும், இன்றுவரை தர்காவுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

சங்பரிவாரின் நுழைவு (2023): 

நீண்டகாலமாக அரசு நடுநிலை வகித்த நிலையில், 2023இல் இந்து மக்கள் கட்சியின் ஏ.பி. இராமலிங்கம் என்பவர் முதன்முதலில் இந்துத்துவ அமைப்பின் சார்பில் வழக்குத் தொடர்ந்தார். அவர் சர்வமத வழிபாட்டுச் சின்னமான சூஃபி தர்காவில் அண்மைக் காலங்களில் பெருகிவிட்ட முஸ்லிம்களின் தொழுகை, பக்ரீத் போன்ற இஸ்லாமியப் பண்டிகைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்படி கோரினார்.

நூற்றாண்டுக் காலமாக நீடிக்கும் இந்தச் சண்டை வளர அதிகாரிகள் அனுமதித்ததால்தான், இது இன்று மாநில அரசியலை மாற்றியமைக்கக்கூடிய இந்துத்துவச் சித்தாந்த இயக்கத்திற்கு அடித்தளமாக மாறியுள்ளது.

புதிய முருகனுக்கான தேடல்: அயோத்தி மாடல்

இந்துத்துவக் குழுக்கள் திருப்பரங்குன்றம் மலையை ‘வெற்றிவேல் முருகனின் பிரதான இருப்பிடம்’ என்று கூறி, அதைத் தமிழகத்தின் அயோத்தியாகக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றன. ஜூன் 22 அன்று நடந்த முருகன் மாநாட்டில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பதற்குப் பதிலாக ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா’ என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநாட்டின் வெற்றியும் பின்னணியும்

இந்த மாநாட்டில் 2 லட்சம் முதல் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இது தமிழ்நாடு வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இந்துத்துவக் கூட்டம் என்று எதிர்ப்பாளர்களும் ஒப்புக்கொண்டனர்.

பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் மதுரையிலிருந்தும் அதைச் சுற்றியுள்ள முக்குலத்தோர் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளிலுமிருந்தும் வந்தவர்கள். இப்பகுதிகளில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம்.

இந்தக் கூட்டத்தில் முக்கியமாகப் போற்றப்பட்ட உருவம் ‘பசும்பொன்’ முத்துராமலிங்கத் தேவர். அவரது பெயர் மிகவும் பலத்த வரவேற்பைப் பெற்றது.

முத்துராமலிங்கத் தேவர்: இந்துத்துவத்தின் சின்னம்

இந்த மாநாட்டின் தலைமை விருந்தினரான தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், முத்துராமலிங்கத் தேவரை “முருகனின் நவீன மறுபிறவி” என்று ஒப்பிட்டது, கூட்டத்தின் மிகப்பெரிய உற்சாகத்தைப் பெற்றது.

தேவர், சுபாஷ் சந்திரபோஸின் ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்தார். குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

ஆரம்பத்தில் தலித்துகளின் கோயில் நுழைவை ஆதரித்தாலும், 1957இல் பள்ளர் சாதியைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவத் தலைவரான இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்ட பிறகு அவரது மனப்பான்மை வியத்தகு அளவில் மாறியது.

1957ஆம் ஆண்டில் ராமநாதபுரம்-சிவகங்கை-மதுரை பகுதிகளில் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்குப் பிறகு, தேவர் கைது செய்யப்பட்டார்.

திராவிடக் கட்சிகளின் சமரசம்

முத்துராமலிங்கத் தேவரின் மறைவுக்குப் பிறகு, திமுகவும் அதிமுகவும் அவரது செல்வாக்கைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் கடுமையாகப் போட்டியிட்டன.

முக்குலத்தோர் போன்ற ஆதிக்கச் சாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக, திராவிடக் கட்சிகள் தலித் வன்கொடுமைகளையும், பெரிய சமூக நீதித் திட்டங்களையும் புறக்கணித்துவிட்டன என்பதே பிரதான விமர்சனமாக உள்ளது.

விவசாய ஆதிக்கச் சாதிகளுக்கும் முற்போக்கு திராவிடக் கட்சிகளுக்கும் இடையேயான முரண்பாடு தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு முரண்பாடான அம்சமாக இருந்தது. ஆனால், தற்போது இந்தச் சாதிகளுடன் இந்துத்துவம் கொண்டிருக்கும் தொடர்பு எளிமையானதாகவும், இயல்பானதாகவும் தோன்றுகிறது. சைவம் சார்ந்த தமிழ்-இந்துத்துவப் பிரச்சாரக் கதையாடல் வாக்குகளாக மாறுமா மாறாதா என்பது தெரியாது. ஆனால், இந்தக் கதையாடல் மக்களிடையே ஆதரவைப் பெற்றுவருகிறது என்பதுதான் யதார்த்தம்.

**

நன்றி: தி நியூஸ் மினிட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share