ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் விவகாரம் : நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மதுரை ஆட்சியர்!

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் மதுரை ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி இந்து அமைப்பைச் சேர்ந்த ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படவில்லை.

ADVERTISEMENT

சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாகவும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறி தீபம் ஏற்ற போலீசாரும், ஆட்சியரும் அனுமதி மறுத்தனர்.

எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர், ஆணையர் உள்ளிட்டோர் மீது ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்காத காரணத்தை சொல்லியே ஆக வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆட்சியர் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (பிப்ரவரி 2) நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மதக் கலவரம் ஏற்படும் சூழல் உள்ளது என தகவல் வந்தது. எனவே, விரும்பத்தகாத செயல்கள் எதுவும் நடக்க்கூடாது
என்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சுமார் 1500 பேர் மலை ஏற முயன்றதால் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பலனளிக்காமல் சூழல் கடினமாக இருந்தது.

இதைத்தவிர நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுரை காவல் ஆணையர் உள்ளிட்டோரும் இதுபோன்று பதில் மனு தாக்கல் செய்தனர்.

மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் மதுரை ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக புன்னகையுடன் அதிகாரிகள் வந்துள்ளனர் என்று கூறிய நீதிபதி, காவல் ஆணையர் மற்றும் துணை காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளித்து, மதுரை ஆட்சியர் மட்டும் மார்ச் 2ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share