திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் புறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சார்பில் கூறப்பட்டது.
இதையடுத்து மனுதாரரான ராம ரவிக்குமார், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினர்.
அதோடு, தனி நீதிபதியின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குத் தடை விதிக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், காவல் இணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு சார்பில், “தனி நீதிபதியின் நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக மேலும் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவை அனைத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் , “ஏன் இத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன?” என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு சார்பில், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது” என்று பதிலளிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் இன்று (மார்ச் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “தனி நபர்கள் சிலர் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவு உட்பட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த உத்தரவின் போது, கோயில் நிர்வாகமே மலையில் பூஜை செய்து இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாமே என்று குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் அரசு பிடிவாதமாக இருக்கக்கூடாது. சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிதாக்குவது ஏன்? இந்த ஒரு விஷயத்திற்காக எத்தனை பேரின் நேரம் வீணாகிறது? நீதிமன்ற நேரமும் வீணாகிறது” என்று தெரிவித்தனர்.
