விசிக கிரெடிபிலிட்டி முக்கியம் என்று கூட்டணி தொடர்பான கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் விசிக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கூடுதல் தொகுதிகள் கேட்டு விசிக அழுத்தம் கொடுக்கும் நிலையில், இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர்,
“விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருப்பமனு பெறுகிற நிகழ்வு இன்று முதல் தொடங்குகிறது. நான்கு நாட்களுக்கு விருப்பமனுக்களை பெற அறிவிப்பு செய்திருக்கிறோம். இன்று (மார்ச் 21) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சார்ந்த தோழர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கு தங்களின் விருப்ப மனுக்களை தலைமையில் ஒப்படைக்க கூறியிருக்கிறோம்.
அடுத்து 22-ஆம் தேதி: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாமக்கல் ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சார்ந்த தோழர்கள் நாளை விருப்பமனுக்களை சமர்ப்பிக்கலாம்.
23-ஆம் தேதி: ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களுக்கான விருப்ப மனுக்களை பெற உள்ளோம்.
கடைசியாக 24-ஆம் தேதி: மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களை சார்ந்த தோழர்கள் விருப்பமனுக்களை தலைமையகத்தில் ஒப்படைக்க அறிவிப்பு செய்திருக்கிறோம்.
இந்த விருப்பமனு கட்டணமாக தலா 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு செய்திருக்கிறோம். அதற்குரிய விண்ணப்ப படிவம் 100 ரூபாய் கொடுத்து இங்கே பெற்றுக்கொள்ளலாம். இந்த 5,000 ரூபாய்க்கான டிமாண்ட் டிராப்ட் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். இயலாதவர்கள் பணமாகச் செலுத்தலாம். ஏனென்றால் வங்கி விடுமுறை தொடர்ந்து மூன்று நாட்கள் இருப்பதனால் டிடி எடுக்க இயலாதவர்கள் கையில் பணமாகச் செலுத்தலாம் என்று அறிவிப்பு செய்திருக்கிறோம்.
ஒவ்வொரு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கும் விருப்பமனுக்களைப் பெறுவதை ஒரு ஜனநாயக நடைமுறையாக நாங்கள் கடைபிடித்து வருகிறோம். மிகக் குறுகிய கால அவகாசம் உள்ள நிலையில், ஒரு நேர்காணல் செய்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. அதனையும் ஏற்கனவே இயக்கத் தோழர்களுக்கு அறிவிப்புச் செய்திருக்கிறோம்.
ஆகவே, இன்று முதல் ஒன்பது மாவட்டங்களைச் சார்ந்த தோழர்கள் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களிடம் தங்களின் விருப்பமனுக்களை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் போது 25 தொகுதிகள் கிடைத்தன. வேட்பாளர்களுக்கான வாய்ப்பு கொடுப்பதில் சுதந்திரமா செயல்பட்டீர்கள் என்று முந்தைய நேர்காணலில் சொல்லிருந்தீங்க. ஆனால் இப்போது 10 தொகுதிகளுக்கும் குறைவாகவும், தனிச் சின்னம் இல்லாமலும் போட்டியிடுவதால் நெருக்கடியான சூழல் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்களே?
“இயக்கத் தோழர்களுக்கு அதெல்லாம் வெளிப்படையாச் சொல்ல வேண்டும். எதையும் நான் மூடி மறைத்து வைக்கக் கூடாது. அவங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிடக் கூடாது. ஒரு முன்முடிவோடு அவர்கள் விருப்பமனுக்களைத் தாக்கல் செய்வார்கள். அது வெளிப்படையாக இருந்தால் அதற்கேற்ப அவர்களுடைய அணுகுமுறையும் இருக்கும்.
நமது கட்சி என்பது ஒரு வெளிப்படையான அணுகுமுறைகளைக் கொண்ட ஒரு ஜனநாயக இயக்கம். என்ன நாங்கள் பேச்சுவார்த்தையில் பகிர்ந்து கொள்கிறோம் என்பது உட்பட முன்னணித் தோழர்களோடு நாங்கள் பகிர்ந்துகொள்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையிலே நேற்று இயக்கத் தோழர்களுக்கு, முகநூல் நேரலை வாயிலாக நான் குறிப்பிட்டது, பெரிய அளவிலான தொகுதிகளை நாம் பெற இயலாத சூழலில் இருக்கிறோம். ஆகவே, அதைப் புரிந்துகொண்டு உங்கள் ஒத்துழைப்பு கட்சித் தலைமைக்குத் தேவை என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.”
ஏற்கனவே போட்டியிட்ட ஆறு தொகுதிகளை கேட்கிறீர்களா…இல்லை கூடுதலாக வேண்டுமென பேசிக்கொண்டிருக்கிறீர்களா?
“அது இரண்டு ஒரு நாளில் தெரிந்துவிடும். நாங்கள் சுமூகமான முறையில் பேசிக் கொண்டிருக்கிறோம். கூட்டணியின் நலன்களையும் கருத்தில் கொண்டு நாங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. கட்சியின் நலன்கள் எவ்வளவு முக்கியமானதோ, அதைப்போல நாங்கள் அங்க வகிக்கக்கூடிய கூட்டணியின் நலன்களும் முக்கியமானது. இன்றைய அரசியல் சூழல்களைக் கவனத்தில் கொண்டு நாங்கள் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்த அடிப்படையில்தான் பேச்சுவார்த்தையும் சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கிறது.”
நேற்றைய தினம் புதிய கூட்டணி ஒன்று அமைந்துள்ளது. சசிகலாவும் ராமதாஸும் ஒரு கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள்… இதைப் பற்றி உங்க கருத்து என்ன?
“அந்தப் புதிய கூட்டணிக்கு என்னுடைய வாழ்த்துகள். அவருடைய முயற்சியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
மூன்றாவது அணி உருவாகும் என நினைக்கிறீங்களா?
“தமிழ்நாட்டில் எத்தனை கூட்டணிகள் உருவானாலும், புதிய புதிய கூட்டணிகள் வந்தாலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே இந்த நொடி வரை வலுவாக இருக்கிறது. தேர்தல் களத்தில் இந்தக் கூட்டணியே வலுவாக இருக்கும், வெற்றியும் பெறும். மக்கள் பேராதரவு வழங்குவார்கள்.”
திமுக தலைமையிலான கூட்டணியில் மற்ற கட்சிகளோட பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. சிபிஎம் கூடுதலான தொகுதிகளை கேட்கிறார்கள். இந்த இழுபறி உண்மையாகவே இருக்கிறதா? பேச்சுவார்த்தை என்ன நிலைமையில் இருக்கிறது?
“இன்னும் கையெழுத்தாக்வில்லை என்பது உண்மை. ஆனால் இழுபறி என்று அதைச் சொல்ல முடியாது. ஒரு தாமதம் என்று சொல்லலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் கூட்டணியின் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் போகாது. கட்சி நலன் முக்கியமானது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அது வரவேற்கக் கூடிய ஒன்றுதான். அதை யாரும் பிழையாகப் பார்க்க முடியாது. ஆனாலும் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணிக்கு மிகப்பெரிய வலுவாக இருக்கும், வலிமையைத் தரும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. விரைவில் அவர்கள் சுமூகமான தீர்வை காண்பார்கள் என்று நான் நம்புகிறேன்.”
திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளிறுவதாக சொல்கிறார்களே?
“இன்னும் அதிகாரப்பூர்வமா அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. நான் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனிடம் மனந்திறந்து பலமுறை பேசியிருக்கிறேன். இந்தக் கூட்டணியில் தொடர்வது அவருடைய நலன்களுக்கும் கூட்டணியின் நலன்களுக்கும் இன்றியமையாத தேவை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆனாலும் அவர் தம்முடைய கட்சி முன்னணித் தோழர்களோடு பேசிச் சுதந்திரமாக முடிவெடுப்பார். திமுக கூட்டணியிலேயே அவர் தொடர வேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் விருப்பம்.”
எதிர்கட்சித் தலைவருடைய டெல்லி பயணம் ப்ற்றி உங்க கருத்து என்ன?
“போயஸ் தோட்டத்தைத் தேடி வந்த காலம் மாறி, இன்றைக்கு டெல்லியைத் தேடிச் செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரிதும் மதிக்கிறேன் என்கிற முறையில் என்னுடைய கவலையை நான் பகிர்ந்து கொள்கிறேன். அவர் அதிமுக என்கிற ஒரு மாபெரும் சக்தியின் தலைவர். ஆனால் பாஜக அவரை ஒரு கிள்ளுக்கீரையாக நடத்துகிறதோ என்கிற எண்ணம் பொதுவெளியில் உருவாகி இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் அது அவருடைய கட்சி விவகாரம். அதற்கு மேல் நான் அதிலே கருத்துச் சொல்ல எதுவுமில்லை.
தற்போது கூடுதல் தொகுதிகளைப் பெறுவது பின்னடைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல பலன் தரும் என்று நேற்று ஒரு இடத்தில் பேசும்போது சொல்லியிருந்தீர்கள். அது உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் கூடுதலாக சீட் வாங்குவது போன்று இருக்குமா?
அப்படியெல்லாம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஒரு ப்ரீ-கண்டிஷன்ஸ் , அதாவது முன் நிபந்தனைகள் போட்டு அப்படி ஒரு ஒப்பந்தத்தை நாம் செய்யவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் மீதான நம்பகத்தன்மை என்பதை அடிப்படையாக வைத்து அதைச் சொன்னேன். விடுதலைச் சிறுத்தைகளுடைய கிரெடிபிலிட்டி என்பது முக்கியமானது. நாங்கள் பொதுச் சமூகத்தினுடைய ஏற்பிசைவைப் பெறுவதற்கு , போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
என்னதான் அர்ப்பணிப்போடு பணியாற்றினாலும், விரிந்து பரந்த தளத்தில் பணியாற்றினாலும், அனைத்துத் தரப்பு மக்களுடைய பிரச்சனைகளை நாங்கள் கையில் எடுத்துப் போராடினாலும், களமாடினாலும் எங்களை அங்கீகரிப்பதிலே ஒரு சிக்கல் இருக்கிறது, ஒரு சமூகச் சிக்கல் இருக்கிறது. அதை மெல்ல மெல்ல நாங்கள் வலுவிழக்கச் செய்ய வேண்டும். அதனைத் தகர்த்து நாங்கள் அனைவருக்கும் ஒரு பேரியக்கம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எல்லாத் தரப்பு மக்களும் இந்த இயக்கம் நமக்கான இயக்கம் என்று உணருகிற ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்கிற அந்த அடிப்படையில் தான் எங்கள் கட்சி மீதான கிரெடிபிலிட்டி என்கிற நம்பகத்தன்மையை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம். அதுதான் எங்களுடைய வெற்றியாகவும் நாங்கள் பார்க்கிறோம். சிங்கிள் டிஜிட் என்பதிலிருந்து நாங்கள் டபுள் டிஜிட் போகிறோம் என்பது மேலோட்டமாக ஒரு தற்காலிகமான வெற்றியாக இருக்கலாம்.
ஆனால் அதைவிடக் கொள்கைப்பிடிப்போடு இருக்கிறார்கள், பதவிப் பரிசுகளுக்காக அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை, வலதுசாரி அரசியலுக்கு எதிரான போராட்டங்களில் இருந்து பின்வாங்கவில்லை என்கிற அந்தப் பொதுச் சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதுதான் விடுதலைச் சிறுத்தைகளுக்கான கிரெடிபிலிட்டி என்று நான் பார்க்கிறேன். அந்த அடிப்படையில் தான் என்னுடைய நகர்வுகளும் முடிவுகளும் இருக்கின்றன. இதை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் ஏமாளித்தனம் என்று கருதலாம் அல்லது அவர்கள் மிகக் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைக்கலாம். இதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை. எங்கள் வலிமை எங்களுக்குத் தெரியும். எந்த நேரத்தில் அந்த வலிமைக்குரிய பயனை நுகர முடியும் என்பதும் எங்களால் மதிப்பீடு செய்ய முடியும். ஆகவே நாங்கள் யாவும் உணர்ந்தே இந்த முடிவை எடுக்கிறோம்.
அறியாமையிலிருந்தோ, பலவீனங்களிலிருந்தோ, நெருக்கடிகளிலிருந்தோ, அச்சுறுத்தல்களிலிருந்தோ எந்த முடிவையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுக்கவில்லை. சுதந்திரமாக முடிவெடுக்கிறோம், தொலைநோக்குப் பார்வையோடு முடிவெடுக்கிறோம். எது பலம், எது பலவீனம் என்பதையும் அறிந்தே முடிவெடுக்கிறோம். இது நம்முடைய வலிமைக்கு உரியதுதானா அல்லது வலிமைக்கு உரியது இல்லையா என்பதையும் மதிப்பீடு செய்துதான் முடிவெடுக்கிறோம். ஆகவேதான் நான் சொல்லுகிறேன், யாவும் உணர்ந்தே நாங்கள் இந்த முடிவை மேற்கொள்கிறோம் என்பதற்கு ஒரே காரணம்தான். எங்கள் மீதான நம்பிக்கை என்பது பொதுவெளியில் மேலும் வலுபெற வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். இதைத் தவிர எங்களுக்கு இப்போதைக்கு வேறு எந்த அளவுகோலும் இல்லை. யாரும் எப்படியும் விமர்சித்து விட்டுப் போகட்டும். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. எங்கள் அடியை நாங்கள் நிதானமாக எடுத்து வைக்கிறோம். எங்கள் திசையை நாங்கள் ஏற்கனவே தீர்மானித்திருக்கிறோம். ஆகவே எங்கள் முடிவு என்பது எங்களைச் சார்ந்தது, மண்ணைச் சார்ந்தது, மக்களைச் சார்ந்தது.
2021 தேர்தல் முடிவுகளின் போது ஒரு பிரஸ் மீட்டில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள், பொதுத் தொகுதிகளில் கூட விசிக வெற்றி பெற்றிருக்கிறது, எல்லாருக்குமான இயக்கமாக மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்று அப்போதே குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போதும் இதையே தான் குறிப்பிடுகிறீர்கள். கூடுதல் தொகுதிகளில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
இதோ பேசிக்கொண்டிருக்கிறோம். இரண்டு நாட்களில் முடிவு தெரிந்துவிடும்
கூடுதலாக தொகுதி வாங்குவோமா?
கூடுதலாக தொகுதி வாங்குவோம். எண்ணிக்கை இரண்டு நாட்களில் முடிவாகும்
டபுள் டிஜிட்டா, சிங்கிள் டிஜிட்டா?
இரண்டு நாளில் முடிவாகும்.
