ADVERTISEMENT

‘புலியை பார்த்து பூனை கோடு போட்டு கொண்ட கதை’ – விஐய்யை விமர்சித்த திருமாவளவன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தவெக தலைவர் விஜய் இலவசங்கள் குறித்து தெரிவித்திருப்பது புலியை பார்த்து பூனை கோடு போட்டுக் கொண்ட கதை என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நேற்று (மார்ச் 7) மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் மகளிரணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் கலந்துகொண்டனர். விழாவில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 2,500, அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் தாய்மாமன் தங்க மோதிர திட்டம், திருமணத்திற்காக 8 கிராம் (ஒரு பவுன்) தங்கம் தரமான பட்டுச் சேலை என 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக அறிவித்தார்.

ADVERTISEMENT

இதற்கிடையே, தவெக பரப்புரைச் செயலாளர் அருண்ராஜ் கடந்த காலத்தில் இலவசங்களை விமர்சித்த பழைய வீடியோக்களை நெட்டிசன்கள் மீண்டும் பகிர்ந்து, விஜய்யின் அறிவிப்புகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 8) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், விஜய்யின் இலவசத் திட்ட அறிவிப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது “புலியைப் பார்த்து பூனை கோடு போட்டுக்கொண்ட கதை என்று சொல்வார்களே, அப்படித்தான் நான் கருதுகிறேன். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மகளிர் நலனை கருத்தில் கொண்டு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதை எதிர்கொள்ள இத்தகைய வாக்குறுதிகளை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று பார்க்கிறேன். இது எந்த வகையிலும் திமுக கூட்டணியின் செல்வாக்கை பாதிக்காது என்று நம்புகிறேன்” என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share