ADVERTISEMENT

மெல்ல மெல்ல காவிமயமாகும் அதிமுக – திருமாவளவன் விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

அதிமுக மெல்ல மெல்ல காவிமயமாகிறது.அதிமுக தலைவர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உலக தாய்மொழி தினமான இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “நம் உயிருக்கு நேராம், சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு வேராம், உயர்வுக்கு வானாம், பிறவிக்குத் தாயாம், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்… தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்.” எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும், இந்தப் பதிவுடன் அவர் இணைத்திருந்த போஸ்டரில் திருவள்ளுவர் வெள்ளை நிற உடையில் இல்லாமல் காவி நிற உடையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்தப் போஸ்டரை எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டார்.

ADVERTISEMENT

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “அதிமுக பாஜகவின் பிடிக்குள் எப்போதோ போய்விட்டது. மெல்ல மெல்ல அது காவி மயமாக்கப்பட்டு வருகிறது என்ற கருத்தை, கவலையை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அதற்கு சான்றாகத்தான் இந்தப் பதிவு அமைந்துள்ளது. பெரியார் பாசறையில் தோன்றிய இயக்கம், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையில் இயங்கிய ஒரு திராவிட இயக்கம் இன்று சங்பரிவார்களின் பிடிக்குள் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது.

அதிமுக வெற்றி பெற்றால் ஆர்எஸ்எஸ் தான் நாட்டை ஆளும் என்பதில் யாருக்கும் ஐயம் தேவையில்லை. அதை அவ்வப்போது நான் சுட்டிக்காட்டியும் இருக்கிறேன். திருவள்ளுவருக்கு காவி பூசும் வேலையைத் துணிச்சலாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சமூக ஊடகப் பக்கத்திலேயே பதிவு செய்யும் அளவுக்கு நிலைமை மாறியிருப்பது வேதனை அளிக்கிறது. அதைத் தற்போது நீக்கி இருக்கிறார்கள் என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது.

ADVERTISEMENT

ஆனாலும், அதிமுக தலைவர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும். இல்லையெனில் அவர்கள் தங்கள் சுய அடையாளத்தை இழக்க நேரிடும் என்பதை, அந்த இயக்கத்தின் மீதுள்ள நன்மதிப்பின் அடிப்படையில் கருத்தாக முன்வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share