பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) இணைந்தால் திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியுள்ளதாவது:
- பாஜகவினர் மதத்தின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை சிறுபான்மையினருக்கு எதிராகப் பரப்புகின்றனர்.
- பாமகவினர் சாதியின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை தலித்துகளுக்கு எதிராகப் பரப்புகின்றனர்.
- சோசியல் இன்ஜினியரிங் – Social Engineering என்கிற பெயரால் சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை விதைத்து, பிரிவினையை ஏற்படுத்தக் கூடிய, நிலையான பகையை வளர்க்கக்கூடிய பாமக- பாஜக ஆகிய இரண்டு கட்சிகளோடு எந்தக் காலத்திலும் நாங்கள் (விசிக) தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம்.
- இந்தக் கட்சிகள் இடம்பெறக்கூடிய கூட்டணியிலும் இடம்பெற மாட்டோம் என்று ஒரு முடிவை நாங்கள் ஏற்கனவே எடுத்துவிட்டோம்.
- பாமக, பாஜக இடம் பெறும் கூட்டணியில் விசிக இடம் பெறாது என்பது இன்றைக்கு நேற்றைக்கு எடுத்த முடிவல்ல. அந்த முடிவை எடுக்கிற சுதந்திரமும், உரிமையும், அதிகாரமும் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க நாங்க எப்போதும் விரும்பவில்லை.
- திமுக ஒரு முடிவை எடுத்தால், அது எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால், நாங்க அந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
- இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இதில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. அதற்கு காரணம், நாங்கள் அவ்வப்போது வருகிற தேர்தலுக்காக நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளக் கூடாது. நம்முடைய கருத்தியல் சார்ந்த பயணத்தில் நம்பகத்தன்மையை வளர்த்தெடுக்க வேண்டும். அந்த நம்பகத்தன்மையை பாதுகாக்க வேண்டும். அந்த கிரெடிபிலிட்டி (Credibility) என்கிற நம்பகத்தன்மையை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என்கிற அடிப்படையில் நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதிப்பாட்டோடு இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
