திருக்குறள் – திருவள்ளுவருடன் ஒரு திரைப்பயணம் : விமர்சனம்

Published On:

| By christopher

thirukkural - thiruvalluvarudan oru thiraipayanam review

அரசியல் பேசுகிறாரா ‘இந்த’ திருவள்ளுவர்?

இந்த மண்ணின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் எப்படிப்பட்ட அனுபவங்களை எதிர்கொண்டிருப்பார்கள்? பழந்தமிழ் இலக்கியக்கியங்கள் வாயிலாக, அவை குறித்த சித்திரங்கள் நமக்குக் காணக் கிடைக்கின்றன. ஒரு நாளின் அத்தனை கணங்களையும் அதன் வழியே அறிந்திட முடியாது என்றபோதும், அன்றைய வாழ்வனுபவங்களில் முக்கியமானவற்றை அனுமானித்துவிட முடியும். thirukkural – thiruvalluvarudan oru thiraipayanam review

ஒரு திரைப்படத்தில் அது நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கான பதிலைத் தருகிறது ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘திருக்குறள்’ திரைப்படம்.

கலைச்சோழன், தனலட்சுமி, ஓஏகே சுந்தர், கொட்டாச்சி, குணா பாபு, பாடினி குமார், சுகன்யா என்று பலர் இதில் நடித்துள்ளனர்.

வள்ளுவரின் கதையா?

திருவள்ளுவர் என்பவர் எங்கு, எப்போது, எப்படி வாழ்ந்தார் என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும்விதமாக ‘திருக்குறள்’ திரைக்கதை அமைக்கப்படவில்லை. மாறாக, மனைவி வாசுகி உடன் இல்லறம் பேணிய வள்ளுவர் திருக்குறளை எழுதுகையில் எப்படிப்பட்ட வாழ்வனுபவங்களை எதிர்கொண்டிருப்பார் என்கிற கற்பனையின் விளைவாக இதன் காட்சிகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

மதுரைக்குத் தெற்கே வள்ளுவ நாட்டில் வாழ்ந்து வருகிறார் வள்ளுவர். காதல் மணம் புரிந்த வாசுகி, தவழும் வயதிலுள்ள குழந்தை என்றிருக்கிறது அவரது குடும்ப வாழ்க்கை.

அரசர்கள் தேடி வந்து, அரசவைக்கு அழைத்துச் சென்று ஆலோசனைகள் கேட்கும் அளவுக்கு மதி நுட்பம் வாய்ந்தவராக இருக்கிறார் வள்ளுவர்.

இன்னொறு புறம், குறுநில மன்னரான குமணனை ஆட்சிப் பீடத்தில் இருந்து இறக்கிவிட்டு, சூழ்ச்சியால் அவரது தம்பி இளங்குமணன் அரியணை ஏறுகிறார்.

அதையடுத்து வனவாசம் மேற்கொள்கிறார் குமணன். காட்டிற்குச் சென்ற பிறகே, அவரைக் கொலை செய்ய இளங்குமணன் உத்தரவிட்டது தெரிய வருகிறது. அப்போதும் தன்னுயிரைத் தர அவரும் தயாராக இருக்கிறார்.

ஆனால் உடன் வரும் அமைச்சர்களோ, மெய்க்காப்பாளர் இளம்பரிதியோ அதனை ஏற்பதாக இல்லை. அவரைக் காட்டில் விட்டுவிட்டு ஆளுக்கொரு திசையில் செல்கின்றனர். மன்னரைக் கொன்றுவிட்டதாகப் பொய்யாகத் தகவல் அனுப்புகின்றனர்.

வள்ளுவரிடம் தமிழ் கற்கச் செல்கிறார் இளம்பரிதி. அதன் வழியே, குமணன் உயிரோடு இருக்கும் விஷயம் வள்ளுவருக்குத் தெரிய வருகிறது.

இந்த நிலையில், கொங்கு நாட்டின் அரசர் நன்னன் அழைப்பின் பேரில் அங்கு செல்கிறார் வள்ளுவர். அப்போது இளங்குமணன் பேராசையால் அந்த நாட்டின் மீது படையெடுத்து வரவிருப்பதாகத் தகவல் கிடைக்கிறது.

அதையடுத்து, மீண்டும் குமணனை அரசவையில் அமர்த்தும் வண்ணம் சில செயல்களைத் திட்டமிடுகிறார் வள்ளுவர். கூடவே, தான் எழுதி வருகிற திருக்குறளை நிறைவு செய்யும் முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.

அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

அறம் போற்றும் படைப்பைத் தருகிற முயற்சியில் இருக்கும் ஒரு படைப்பாளி, அதன் சாரத்தைத் தன் வாழ்வோடு எப்படிப் பொருத்திப் பார்க்காமல் இருப்பார்? அதையே ‘திருக்குறள் – திருவள்ளுவருடன் ஒரு திரைப்பயணம்’மும் பிரதிபலிக்கிறது.

வள்ளுவரும் வாசுகியும் எப்படி இல்லறம் போற்றினார்கள்? சமூகத்தோடு இயைந்திருந்தார்கள்? தாம் வாழ்ந்த மண்ணின் அரசியல் அறம் பேணினார்கள்? அவர்களைச் சமூகமும் அரசும் எப்படி எதிர்கொண்டது என்று சொல்கிறது ’திருக்குறள்’ திரைப்படம்.

பழந்தமிழ் ஈர்க்கிறதா?

இந்த படத்தின் நாயகனாக நடித்திருக்கிற கலைச்சோழன், தான் ஏற்ற வள்ளுவரைச் சாந்தமும் தெளிவும் அறம் சார்ந்த ரௌத்திரமும் கொண்டவராகத் திரையில் வெளிக்காட்டியிருக்கிறார். சமகாலப் படங்களின் நாயகர்களைப் போன்று இதில் உணர்வெழுச்சிகளை வெளிப்படுத்த முடியாது என்று தெரிந்தும், பாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடித்திருப்பது சிறப்பு.

வாசுகியாக வரும் தனலட்சுமி அழகான தோற்றத்துடன் வருவது மட்டுமல்லாமல் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் வசனம் பேசியிருக்கிறார். களவு, ஊடல் பற்றி விளக்கமளிக்கிற இடங்களில் ஈர்க்கிறார்.

என்ன, அதே போன்ற உடல்மொழி, கண்ணசைவுகள் வேறு காட்சிகளில் தலைகாட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

சுப்பிரமணிய சிவா, ஓஏகே சுந்தர், கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர் உள்ளிட்ட சிலர் இதில் நடித்துள்ளனர்.

முன்பாதியில் சுகன்யா – சந்துரு ஜோடி, இரண்டாம் பாதியில் குணா பாபு – பாடினி குமார் ஜோடியின் காதல் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த காட்சிகளில் எல்லை தாண்டாத வகையில் காமம் நிறைந்திருக்கிறது. அவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் ஈர்க்கிறது.

பதினான்கு வயதுக்குக் கீழான குழந்தைகள் அந்தக் காட்சிகளைக் கண்டால் நிறையவே கேள்விகளைக் கேட்பார்கள். நாம் திரைப்படங்களில், தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதள உள்ளடக்கத்தில் இன்று அவர்கள் கண்டு வருவதில் அது ஒரு துளியே என்பது ஆறுதல்படுத்துகிற விஷயம்.

‘அடுத்து என்ன நிகழும்’ என்று தெளிவாக உணர்த்துகிற இது போன்ற படங்களில் காட்சியமைப்பிலும் நடிப்பிலும் ‘நாடகத்தனம்’ அதிகமிருக்கும். இதிலும் அது நிகழ்ந்திருக்கிறது. அதேநேரத்தில், படம் ரொம்ப போரடிக்கவில்லை என்பதே உண்மை.

காட்சிகளில் ஓரளவுக்கு இருக்கிற விஷயங்களைக் கூட நம்முள் ‘ஓஹோ’ என்று உணர வைக்கிறது இளையராஜாவின் இசை.

ஒரு காட்சியில் எந்த இடத்தில் பின்னணியில் இசை ஒலிக்கக் கூடாது? ஒரு காட்சி முடிந்து இன்னொரு காட்சி தொடங்குகிற இடங்களில், இரு வேறு உணர்வுமயமாக்கத்திற்கான இசையை எப்படி ஒன்றிணைப்பது?

வழக்கம் போல, இதிலும் இந்த கேள்விகளுக்கு ‘ராஜ பாடம்’ தந்திருக்கிறார்.

’முல்லை வாசம்’, ‘கொத்து கொத்தாய் கதிர் முற்றி நிற்க’ பாடல்களை இளையராஜா எழுதி இசையமைத்திருக்கிறார். அவை மனதைத் தொடுகிற மெலடி மெட்டுகள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்வைக் காண்பிப்பதே அரிய விஷயம் எனும்போது, அப்படைப்பில் பிரமாண்டத்தை எதிர்பார்ப்பது பேராசை. முடிந்தவரை, படத்தின் பட்ஜெட்டை நினைவூட்டாத வகையில் கேமிரா கோணங்களை அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய்.

சுரேஷ் கல்லேரியின் கலை வடிவமைப்பு, பழந்தமிழரின் வாழ்வில் இருந்த சில கூறுகளைத் திரையில் காட்டுகிறது. ஆனால், ஒரு திரைப்படத்திற்கான திருப்தியை அது தரவில்லை.

காட்சிகளை அளவாக ‘கட்’ செய்திருக்கிறது வினோத் சிவகுமாரின் படத்தொகுப்பு.

இந்த படத்தின் கதை திரைக்கதை வசனத்தை அமைத்திருக்கிறார் செம்பூர் கே.ஜெயராஜ்.

ஏற்கனவே சொன்னது போல, திருக்குறளை எழுதுகிற காலத்தில் வள்ளுவரும் வாசுகியும் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பதை கணக்கில் கொண்டே மொத்தக் காட்சிகளையும் அமைத்திருக்கிறார்.

திருக்குறளுக்கான அர்த்தத்தை, வள்ளுவரின் பெயரை, ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி எடுத்தாள்வதை வசனங்களின் வழியே விமர்சித்திருக்கிறார்.

‘அம்மன் தெய்வங்கள் ஏன் வடக்கு நோக்கி இருக்கின்றன தெரியுமா? எதிரி வடக்கில் இருந்து தான் வர முடியும் என்பதை உணர்த்தத்தான்’, ‘சமயவாதிகளுக்கு அரசியலில் இடம் தர தமிழ் கலாசாரம் அனுமதிப்பதில்லை’ என்பது போன்ற வசனங்கள் ‘அரசியல் நெடி’யை வெளிக்காட்டுகின்றன.

காதல் மணம், பெண்ணுரிமை உட்படப் பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது காட்சியமைப்பு.

சமகாலத்தில் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழ் பேசினால் எப்படி இருக்குமோ, அதே தொனியில் பாத்திரங்களின் வசனம் இருக்குமாறு வடிவமைத்திருக்கிறார் ஜெயராஜ்.

அதனால் ‘என்ன சொன்னீர்’ என்கிற மாதிரியான ‘மனோகரா’, ‘திருவிளையாடல்’ காலத்து வசன உச்சரிப்புகள் இதில் இல்லை. அது சிலரைத் திருப்திப்படுத்தும், சிலரை எரிச்சல்படுத்தும்.

‘திருக்குறள்’ எனும் நூலில் உள்ள கருத்துகளைத் திரைக்கதையில் பொதித்து வைத்திருக்கிற இத்திரைப்படமானது வெற்றுப் பேச்சாக, பிரச்சாரமாக, நாடகமாகத் தென்படாமல் இருக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன்.

அழகியல் மிளிர்கிற காட்சியாக்கத்துடன், திரையில் தெளிவுடன் கதை சொல்ல முயன்றிருக்கிறார். அதையும் மீறிச் சில இடங்கள் ‘நாடகத்தனமாக’ நகர்கின்றன.

போர்க்களக் காட்சிகளோ, ‘பட்ஜெட் கம்மி’ என்பதை உணர்த்துகின்றன.

அது போன்ற விஷயங்களைக் கடந்துவிட்டால் போதும். ‘திருக்குறள் பற்றிய படம்னா கண்டிப்பா போரடிக்கும்’ என்றெழுகிற எதிர்மறை எண்ணங்களைத் துவம்சம் செய்துவிடுகிறது இப்படம்.

‘இப்படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே’ என தியேட்டருக்கு வருபவர்களை ‘திருக்குறள்’ ஏமாற்றாது. போலவே, இதற்கு எதிரான சிந்தனை கொண்ட ரசிகர்கள் அல்லது சமகாலம் அல்லது எதிர்காலம் சார்ந்த கதைக்கருக்களை விரும்புபவர்கள், படத்தின் விளம்பரத்தை கண்டவுடன் ‘யுடர்ன்’ இடுவார்கள்.

ஆக, ’திருக்குறள்’ படத்திற்கான ரசிகர்கள் யார் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. அப்படியான ரசிகர்களுக்கு ஏற்ற படைப்பைத் தந்திருக்கிறது இப்படக்குழு.

அறம் சார்ந்த வாழ்க்கையின் அவசியம் பற்றி எதிர்காலத் தலைமுறைக்குச் சொல்லித்தர வேண்டும் என்பவர்கள் ‘திருக்குறள்’ திரைப்படம் கண்டால் மகிழ்வது நிச்சயம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share