கொரோனா தொற்று போல அமீபா பரவாது என்பதால் சபரிமலை செல்வோர் அச்சப்பட தேவையில்லை என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. தமிழ்நாடு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இந்த ஆண்டும் தமிழகத்தில் கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று (நவம்பர் 17) ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர்.
இதற்கிடையில் கேரளாவில் ‘அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ என்ற மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக, சபரிமலைக்கு வரும் ஐய்யப்ப பக்தர்களுக்காக சில வழிகாட்டுதல்களை கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆறுகளில் குளிக்கும் போது மூக்கு மற்றும் வாயில் நீர் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்கள் உரிய ஆவணங்களுடனும், மருந்துகளுடனும் பயணிக்க வேண்டும். மேலும் அவசர மருத்துவ உதவிக்கு 04735 203232 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்பவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறையும் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் பரவும் நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம். சபரிமலை சென்று வந்து 3 நாட்களுக்கு பின் காய்ச்சல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ஆறுகள், குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கும் போது மூக்கினுள் நீர் செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். கொதிக்க வைத்த நீரை பருக வேண்டும். மலை ஏறும் போது மெதுவாக இடைவெளி விட்டு ஏறவும். கொரோனா தொற்று போல அமீபா பரவாது என்பதால் சபரிமலை செல்வோர் அச்சப்பட தேவையில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
