சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், ’உத்தரவுகளை பிறப்பிப்பதால் நீதிபதிகளையே விமர்சிக்கின்றனர்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்
அதோடு, மாதம்பட்டி ரங்கராஜுடன் இருந்த புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக் கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன் இன்று (அக்டோபர் 6) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், ‘கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டார்’ என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றும் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி செந்தில்குமார், ‘இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. இந்த மனுவுக்கு அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று ஜாய் கிரிசில்டா தரப்பு உத்தரவிட்டார்.
மேலும் அவர், ‘சமூக ஊடகங்களில் இருந்து யாரால்தான் தப்பிக்க முடிகிறது. நீதிபதிகள் கூட ட்ரோல் செய்யப்படுகிறார்கள். உத்தரவுகளை பிறப்பிக்கிறோம் என்பதற்காக தனிப்பட்ட ரீதியில் எங்களை விமர்சிக்கிறார்கள். நீதிபதிகளின் கடந்த காலம், அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழுத்து வைத்தெல்லாம் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்கின்றனர்.
இதையெல்லாம் பார்த்து ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு தவிர்த்துவிட வேண்டும். நீங்கள் சமூகத்தில் அரசியல் ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ ஒரு நிலையை அடையும்போது, இவை அனைத்தும் நடக்கும். ஒவ்வொரூ செயலுக்கும் எதிர்வினை வரத்தான் செய்யும்” என்று கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக கடந்த அக்டோபர் 3ஆம் தேதி கரூர் பெருந்துயரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பித்து கடும் கண்டனங்கள தெரிவித்திருந்தார் நீதிபதி செந்தில்குமார். குறிப்பாக என்ன மாதிரியான கட்சி இது? அக்கட்சித் தலைவருக்கு தலைமை பண்பே இல்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் சிலர் நீதிபதி குறித்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நீதிபதி செந்தில்குமார் தங்களையே விமர்சிப்பதாக கூறியுள்ளார்.
அப்போது, ‘அரசியலமைப்பின் கடமையை நீங்கள் செய்கிறீர்கள், சமூக வலைதளங்களில் இவ்வாறு விமர்சிப்பது கண்டனத்திற்குரியது. வழக்கறிஞர்கள் சமுதாயம் உங்கள் பின் நிற்கும் என்று நீதிபதியிடம் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் உறுதியளித்தார்.
ஜாய் கிரிசில்டா தரப்பில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுதா, நாடாளுமன்றமும் உங்கள் பின் நிற்கும் என தெரிவித்தார். மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், ‘வழக்கறிஞர்கள் சமுதாயம் உங்களுக்கு துணை நிற்கும்’என்று தெரிவித்தார்.