சுமார் நூற்றி எழுபத்தைந்து படங்களில் நடித்திருக்கு அர்ஜூன், தனது நடிப்பில் ரிலீஸ் ஆக இருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ என்ற படத்தை தனது முக்கியமான படம் என்கிறார்.
ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குனர் தினேஷ் லட்சுமண் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’.
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, இப்படம் உருவாகியுள்ளது என்கிறார்கள்.
இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில், நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
“தமிழ் நாட்டிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருக்கலாம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார் அர்ஜூன் சார் தான்”என்கிறார் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன்.
அர்ஜூன் பேசியபோது, “எனக்கு இது மிக முக்கியமான படம், எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான். தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்தாகச் சொன்னார்கள், ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. நான் நிறைய புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன், இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாக சொன்னார் ஆனால் எல்லாமே படத்திற்காகத் தான், படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ராஜேஷ் இளம் வயதிலேயே மரணம் அடைந்து விட்டார் அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள்..”என்றார்
இந்தப் படத்துக்கு பிறகு அர்ஜுன் மேலும் பிசி ஆவார் என்று பலரும் சொல்கிறார்கள்.
அப்படி என்ன அர்ஜுனுக்கு இந்தப் படம் முக்கியம் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து விடும்.
- ராஜ திருமகன்
