கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி தவெக தலைவர் நடிகர் விஜய் அனுப்பி வைத்த ரூ.20 லட்சத்தை அவருக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சிலர் யாரிடமும் உதவி வாங்காமல் வாழ வேண்டும் என நினைப்பார்கள், அந்த நோக்கத்தில் விஜய் அனுப்பிய பணத்தை அந்த பெண் திருப்பி அனுப்பி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று (அக்டோபர் 28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சார்’ என்று சொன்னாலே தி.மு.க விற்கு அலர்ஜி. இப்போது தோல்வி பயம் வந்துள்ளது. நேரு காலத்தில் இருந்தே வாக்காளர் விடுப்பு, சேர்ப்பு, இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் என எல்லாமே உள்ளது. பீகாரில் நடந்த சம்பவத்தில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் ஊரிலேயே இல்லை. 28 லட்சம் பேர் இறந்தே போனார்கள். மீதமுள்ளவர்கள் அடுத்த இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டனர். ஆனால், கொளத்தூர் தொகுதியில் மட்டும் 9,000 வாக்குகள் அதிகமாக உள்ளன என்றார்.
தி.மு.க அமைச்சர்கள் எல்லோரும், அவர்கள் போலியாகச் சேர்த்த வாக்காளர்களை நீக்கி விடுவார்கள் என்பதால் வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்று அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த பட்டியலை தமிழ்நாடு அரசாங்கம் தானே தயார் செய்ய உள்ளது. அதில் ஏன் திமுகவிற்கு நடுக்கமும், பயமும் வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நடிகர் விஜய் கொடுத்த பணத்தை ஒரு பெண் திருப்பி அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பலர் உதவி செய்யும் நோக்கத்துடன் பணம் கொடுப்பார்கள். சிலர் உதவியை வாங்க மறுப்பார்கள். சிலர் யாரிடமும் உதவி வாங்காமல் வாழ வேண்டும் என நினைப்பார்கள், அந்த நோக்கத்தில் அந்தப் பெண் பணத்தைத் திருப்பி அனுப்பி இருக்கலாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
