எர்ணாகுளம் – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலும், ராஞ்சியில் இருந்து கோவைக்கு தினசரி ரயிலும் இயக்கப்பட உள்ளதாக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற சி.பி.ராதா கிருஷ்ணன் இன்று முதல் முறையாக கோவை வந்தார். கொடிசியா வளாகத்தில் “கோயமுத்தூர் சிட்டிசன் போரம்” சார்பில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த பாராட்டு விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “140 கோடி மக்கள் வாழும் நாட்டில் குடியரசு துணை தலைவராக பொறுப்பு ஏற்ற பின்பு தமிழகத்தில் சென்னை வர திட்டமிட்டு சுற்றுபயணத்தை உருவாக்கினோம்.
ஆனால் பிரதமரை சந்தித்த போது செஷல்ஸ் நாட்டிற்கு புதிய அரசு பொறுப்பு ஏற்ற விழாவில் செல்லுமாறு தெரிவித்தார். அந்த நாட்டில் அரசு விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்து நேராக இங்கு வருகிறேன். புரோட்டாகால் படி மாநில தலைநகருக்குதான் செல்ல வேண்டும். ஆனால் கோவை மண் என்னை இழுத்து வந்திருக்கின்றது.
இந்த தேசத்தின் துணை குடியரசு தலைவராக பொறுப்பு ஏற்ற பின்பு, ஒவ்வொரு இலாகா மந்திரிகளாக சந்தித்தனர். அவர்களின் திட்டங்களை சொன்னார்கள். அப்போது ரயில்வே மந்திரியிடம் எர்ணாகுளம் – பெங்களுர் வந்தே பாரத் ரயில் வேண்டும் என்று சொன்னேன். கோவை, ஈரோடு உட்பட 4 நகரங்களில் நின்று செல்லும் வகையில் விரைவில் அந்த ரயில் வர இருக்கின்றது. இதே போல ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வருகின்றனர்.
கோவைக்கு தொழிலாளர் வருகைக்காக இன்னொரு ரயில் ராஞ்சி – கோவை இடையே தினசரி சேவையாக புதிய ரயில் இயக்கப்பட இருக்கின்றன என்றார்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு துணையாக இருப்பேன். விமான நிலைய விரிவாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து இருக்கின்றன. நாம் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறும். முயற்சிக்காக தொடர்ந்து அணுகுமுறையும்,பொறுமையும் தேவை. அது கொங்கு மண்டலத்துக்கு இருக்கின்றது” என தெரிவித்தார்.
