ADVERTISEMENT

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அருளுரையும் நிஜ முகமும்!

Published On:

| By Minnambalam Desk

சஞ்சய் கே. ஜா

அரசியல்வாதிகள் பொதுவில் பேசுவதையும் நடந்துகொள்வதையும் அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. ஆழமாக ஆராய வேண்டும். குறுகிய நோக்கத்தை மறைக்க தாராளவாதச் சொல்லாட்சியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும்போது அதைக் கேட்பவர்கள் ஏமாந்துவிடக்கூடும். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத்தின் சமீபத்திய மூன்று நாள் பிரசங்கம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ADVERTISEMENT

பகவத் பயன்படுத்திய தர்க்கங்களும் உருவகங்களும் ஜனநாயக மனநிலையைப் பிரதிபலித்தன. அவர் எல்லோரும் ஒன்றுபோல இருப்பதைப் பற்றி அல்ல, ஒற்றுமையைப் பற்றிப் பேசினார்; ஒருவரின் மத நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம், உலகளாவிய அமைதி என்றெல்லாம் சொன்னார்.

“பன்முகத்தன்மை உலகின் அழகைக் கூட்டுகிறது,” என்று அழகாகப் பேசினார். “சப் ஏக் ஹைன், சப் அப்னே ஹைன்,” என்னும் பாடல் வரிகள் காதுகளுக்கு இனிமையாக இருந்தன. சாவர்க்கர் அல்லது கோல்வால்கரின் வார்த்தைகளை அல்ல; காந்தி, தாகூர், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சரின் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டினார். உலகின் அமைதியான சகவாழ்வுக்காகப் பங்களிக்க இந்தியாவை ‘விஸ்வகுரு’வாக மாற்ற ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய அவர், “உங்கள் பாதையைப் பின்பற்றுங்கள், ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை மதியுங்கள்” என்றார்.

ADVERTISEMENT

இந்த உன்னதமான லட்சியத்தை யார் எதிர்த்துப் பேச முடியும்? “வெவ்வேறு பாதைகள் உள்ளன. ஆனால் நாம் ஒன்று. உள்ளடக்கம் ஒன்றுதான். பாதைகளுக்காகச் சண்டையிடாதீர்கள்” என்று வலியுறுத்தினார். இன்பத் தேன் வந்து பாய்கிறதா உங்கள் காதுகளில்?. ஆர்.எஸ்.எஸ். தலைவர் இப்படிப் பேசுகிறார் எனும்போது அதில் என்னதான் பிரச்சனை? 

நிஜ முகத்தின் தோற்றம்

ADVERTISEMENT

கொஞ்சம் சுரண்டிப் பார்த்தால் உண்மையான முகம் வெளிப்படும். வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையிலான இடைவெளி வெளிப்படும். சிந்திக்கும் மனதைத் தொந்தரவு செய்யும் கேள்வி இதுதான்: ஆர்.எஸ்.எஸ். அத்தகைய உன்னத நோக்கங்களைக் கொண்டிருந்தால், அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் அவர்களால் ஏன் அவற்றை அடைய முடியாது? அவர்கள் ஏன் இந்து ராஷ்டிரத்தை நாடுகிறார்கள்?

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினர் ஆகியோர் தங்கள் சொந்தப் பாதையைத் தொடர சுதந்திரம் உள்ள இந்து ராஷ்டிரத்திற்காக நாங்கள் பாடுபடுகிறோம் என்பதை பகவத் தெளிவுபடுத்தினார். “யாரும் விலக்கப்பட மாட்டார்கள்” என்று அவர் வலியுறுத்தினார்.

அப்படியென்றால், மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு உத்தரவாதத்திற்குப் பதிலாக, இந்துக்களின் கருணையை எதிர்நோக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் விரும்புகிறதா? பகவத்தின் அருளுரையின் சாராம்சத்தில் இருப்பது உரிமைகள், நீதியின் ஆற்றல் அல்ல; பெருந்தன்மைகான உறுதிப்பாடு.

அதாவது சமத்துவம் என்பது சட்டப்பூர்வமான உரிமையின் பாற்பட்டது அல்ல. பெரும்பான்மையினரின் பெருந்தன்மையின் விளைவு என்பதே அவர் சொல்ல விரும்பும் செய்தி. இறுதியில், அவர் அறிவித்தார்: “முழு நாடும் சங்கமாக மாற வேண்டும்.”

நாட்டின் ஒரு பகுதியினர் மட்டுமே சங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும்போது, ​​சிறுபான்மையினர், அரசியல் போட்டியாளர்கள், விமர்சகர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உணர்கிறார்கள். சங்கம் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றால் என்ன நடக்கும்? 11 ஆண்டுகால இந்துத்துவ ஆட்சிக்குப் பிறகு, முஸ்லிம்களின் குரல் பலவீனமாகியுள்ளது.  2024இல், முதல் முறையாக, ஒரு முஸ்லிம்கூட இல்லாமல் ஒரு மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டது.

முஸ்லிம்களின் வாழ்வாதார வழிகள் மிகவும் குறைந்துவிட்டன. இந்தியாவிற்கு விஸ்வகுரு அந்தஸ்தை உறுதியளிக்கும் இந்துத்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள், இன்று ஒரு முஸ்லிம் குடிமகனின் இதயத் துடிப்பைக் கேட்டால், அகமது ஃபராஸ் எழுதிய “பஸ்தியன் சந்த்-சிதரோன் கி பசானே வாலோன்/மேரி துனியான் மே தோ புஜ்தே சலே ஜாதே ஹைன் சிராக்” (நட்சத்திரங்களிலும் நிலவிலும் குடியேற ஏற்பாடு செய்துகொண்டிருப்பவர்களே, என் உலகில் உள்ள விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன.) போன்ற ஒரு பாடலைக் கேட்பது உறுதி.

வரலாறும் பாசாங்குத்தனமும்

ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களை அழிக்கும்போது, ​​முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறினார். “எந்த இடத்திற்கும் படையெடுப்பாளர்களின் பெயர்களை வைக்கக் கூடாது. (சுதந்திரப் போராட்ட வீரர்) அஷ்பகுல்லா கான் (சிப்பாய்), அப்துல் ஹமீத் ஆகியோரின் பெயர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை,” என்று அவர் தெளிவுபடுத்தினார். எனவே, யார் நல்ல, ஏற்றுக்கொள்ளக்கூடிய முஸ்லிம் என்பதை ஆர்.எஸ்.எஸ். தீர்மானிக்கும்.

 அஷ்பகுல்லா கான்

சமூக, அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்து, எந்த முஸ்லிம் இந்தியாவில் தங்கலாம், யார் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். கர்னல் சோபியா குரேஷி இந்திய இராணுவத்தின் சாதனைகளைப் பற்றிப் பேசுவதால் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார். பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் நியாயமான கேள்விகளைக் கேட்பதற்காக வேட்டையாடப்படுவார். சிறுபான்மையினர் மீது இப்படிப்பட்ட நிபந்தனையோடு பாசம் காட்டும் இந்த உலக அமைதி விரும்பிகள், காசாவில் இனப்படுகொலை செய்வதாகக் குற்றம்சாட்டப்படும் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பாராட்டித் தள்ளுவார்கள். 

எம்.எஸ். கோல்வால்கரின் இழிவான கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை எந்த ஆர்.எஸ்.எஸ். தலைவரும் தெளிவுபடுத்தவில்லை. “இனப் பெருமை அதன் உச்சத்தில் ஜெர்மனியில் வெளிப்பட்டுள்ளது. வேறுபாடுகளைக் கொண்ட இனங்களும் கலாச்சாரங்களும் வேரூன்றி, ஒன்றுபட்ட முழுமையில் ஒன்றிணைவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதையும் இது காட்டுகிறது. இது இந்துஸ்தானில் நாம் கற்றுக்கொள்ளவும் பலனடையவும் உதவக்கூடிய நல்ல பாடம்” என்றார் கோல்வால்கர்.

இந்த விஷயத்தின் மையக்கரு மிகவும் சிக்கலானது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்புகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவ உத்தரவாதத்தில் திருப்தியில்லை. சிறுபான்மையினர் இந்துக்களின் நல்லெண்ணத்திலும் கருணையிலும் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

குணநலன்களை உருவாக்கும் நோக்கம்

பகவத் தனிநபர்களிடத்தில் நல்ல குணநலன்களை உருவாக்குவதற்கு அசாதாரண முக்கியத்துவம் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் எவ்வளவு ஒழுக்கமானவர்கள், மனசாட்சி உள்ளவர்கள் என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் பண்புகளாக தூய்மை, எளிமை, அனைத்து மனிதகுலத்தின் மீதும் அன்பு ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.

நாக்பூரில் உள்ள ரேஷிம் பாக் நகருக்குச் சென்று உன்னதமான ஆர்.எஸ்.எஸ். மக்களைப் பார்க்க முடியாதவர்கள் தங்களைச் சுற்றிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி. பிளவுபடுத்தும் அரசியல், பொய்கள், முதலாளித்துவத்துடனான நட்பு, வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் இல்லாமை ஆகியவற்றிற்காக எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம்சாட்டுகின்றன.

“வன்முறையிலும் ஆக்கிரமிப்பிலும் ஈடுபடும் எந்த ஆர்.எஸ்.எஸ். ஊழியரையாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று பகவத் கேட்டார். “சர்வே பவந்தி சுகினா – அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார். காந்தியின் கொள்கைகளையும் குறிப்பிட்டார். குடும்ப விழுமியங்கள், தனிப்பட்ட நேர்மை, பாரம்பரிய உடைகள், உணவுகளின் பாதுகாப்பு, சமூக நடத்தை ஆகியவை குறித்து அவர் தேசத்திற்கு அறிவுரை வழங்கினார்.

ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் அமைதியின் தூதர்களா?

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்ற ஆண்களும் பெண்களும் உண்மையில் கருணையின் அமைதியின் தூதர்களா? சரி, மோசமான உதாரணங்களைப் பார்க்க வேண்டாம். பகவத் ஆக்கபூர்வமான சிந்தனையை அறிவுறுத்தியுள்ளார். பாஜக முதலமைச்சர்கள் அலி-பஜ்ரங்க்பலி, 80-எதிர்-20 பற்றிப் பேசுகிறார்கள் என்று சொல்லாதீர்கள். “கோலி மரோ சலோன் கோ” (துரோகிகளைச் சுட்டுக் கொல்லுங்கள்), போன்ற கோஷங்களை எழுப்பிய அமைச்சர்களை மறந்துவிடுங்கள். அல்லது போலி என்கவுண்டர்கள், கடத்தல், கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்களை மறந்துவிடுங்கள்.

ஒவ்வொரு பண்டிகையிலும் மசூதிகளுக்கு வெளியே கூடி முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளைக் கத்தும் இளைஞர்களைப் பார்க்காதீர்கள். இல்லை, யாரை நேசிக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன அணிய வேண்டும் என்று தீர்மானிக்கும் கும்பல்களைப் பற்றி நினைக்காதீர்கள். கும்பல் படுகொலை. முஸ்லிம் விற்பனையாளர்களைப் புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் குண்டர்கள் ஆகியோர் உங்கள் சிந்தனையைக் கெடுக்க விடாதீர்கள். இதையெல்லாம் மறந்துவிட்டால் பகவத்தின் அருளுரையைக் கேட்டு மயங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

பகவத் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்படி என்றால் என்ன? விமான நிலையங்கள், ரயில்கள், சந்தைகளில் இந்துக்கள் எந்தத் தடையும் இல்லாமல் பஜனை பாடுவதுபோல முஸ்லிம்கள் பொது இடங்களில் சுதந்திரமாகத் தொழுகை நடத்த முடியுமா? முஸ்லிம் பெண்கள் பாரம்பரிய உடைகள், பர்தா அணிந்தால் ஏன் இந்த பரபரப்பு? சாவன் மாதம் முழுவதும் இறைச்சி, மீன் கடைகள் ஏன் வலுக்கட்டாயமாக மூடப்படுகின்றன? 

மதுரா, காசி, அயோத்தியில் ராமர் கோயில் போன்ற போராட்டங்களை ஏன் அனுமதிக்க வேண்டும்? இந்த மூன்று இடங்களிலிருந்தும் முஸ்லிம்கள் பரந்த மனதுடன் வெளியேற வேண்டும் என்று பகவத் பரிந்துரைத்தார். சங்கத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முஸ்லிம்கள் தொடர்ந்து தியாகம் செய்ய வேண்டும். சங்க ஊழியர்கள் முழு உலகிற்கும் நல்ல நடத்தை, ஒழுக்கம், இரக்கத்தின் முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என்று பகவத் கூறியுள்ளார். அத்தகைய குணத்தை முஸ்லிம் தியாகத்தின் அடிப்படையில் மட்டுமே உருவாக்க முடியும். 

சஞ்சய் கே. ஜா, அரசியல் விமர்சகர்.

நன்றி: தி வயர் இணையதளம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share