இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) 2026-ஆம் ஆண்டின் முதல் ஏவுதலான பிஎஸ்எல்வி–சி62 (PSLV-C62) ராக்கெட் இன்று (ஜனவரி 12, 2026) காலை 10:18:30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ஏவுதலின் முதன்மை செயற்கைக்கோள் ஆக இ.ஓ.எஸ்-என்1 (EOS-N1) எனப்படும், அன்வேஷா (Anvesha) என்று அழைக்கப்படும் அதிநவீன ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இடம்பெற்றது. இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
இச்செயற்கைக்கோள் பாதுகாப்பு கண்காணிப்பு, சுற்றுச்சூழல் ஆய்வு, விவசாயம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 16 செயற்கைக்கோள்கள் (EOS-N1 உட்பட 15 சிறிய இணை செயற்கைக்கோள்கள்) ஒரே நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டன.
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ள மற்ற செயற்கைக்கோள்களில் ஆயுள்சாட், சென்னையைச் சோ்ந்த ஆா்பிட்எய்டு எனும் ஸ்டாா்ட் அப் நிறுவனம் தயாரித்தது. இது புவிவட்டப் பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோளில் மீண்டும் எரிபொருள் நிரப்புதல் குறித்த ஆய்வை மேற்கொள்ள இருந்தது.
மேலும் இதில் இதில் ஸ்பெயின், பிரேசில், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் சிறிய செயற்கைக்கோள்களும் அடங்கும்.
இந்நிலையில், ராக்கெட்டின் மூன்றாவது நிலையின் (Third Stage – PS3) இறுதியில் தொழில்நுட்பக் கோளாறு (anomaly) ஏற்பட்டதால் வழி மாறியது (trajectory deviation). இதன் காரணமாக செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் முழுமையாக நிலைநிறுத்தப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அனைத்து செயற்கைக்கோள்களும் செயல் இழக்கப்பட்டிருக்கலாம் என்ற கூறப்படுகிறது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,“ராக்கெட்டின் இயக்கத்தில் ஏற்பட்ட சீர்கேடு தொடர்பான அனைத்து தரவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முழுமையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்” என கூறப்பட்டுள்ளது.
