வைகவ் வாங்கடே
“நான் ஒன்றும் உருப்படாதவள் அல்ல” என்று அபூர்வா எப்போதும் கூறுவாள். ஆனால் நிலையான வேலையில் இருப்பது மட்டுமே தன்னுடைய கெட்ட பெயரை மாற்றப் போதுமானது அல்ல என்று அவளுக்குத் தெரியவில்லை. ஐ.ஐ.டி. கான்பூரில் படிக்கும்போது அவள் கஞ்சா புகைக்கத் தொடங்கினாள். அது விரைவாக அவளது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. தந்தை இல்லாமலும், உணர்வுரீதியாக ஒதுங்கியிருக்கும் தாயுடனும் வளர்ந்த இந்த நவ-பௌத்த தலித் பெண், மெல்ல மெல்ல “புகைப்பதை விரும்பும் பெண்” என்ற ஒற்றை அடையாளத்திற்குள் சுருங்கிப் போனாள்.
உலகெங்கிலும், போதைப் பொருள் பயன்பாடு ஒடுக்குமுறை இருக்கும் இடங்களிலேயே அதிகமாகத் தொடர்கிறது. அமெரிக்காவில் உள்ள பூர்வீகக் குடிமக்கள், நிலம் அபகரிக்கப்பட்டதாலும் கலாச்சாரம் அழிக்கப்பட்டதாலும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடிமைத்தனம், அதிகாரப்பூர்வமான இனவெறி ஆகியவை காரணமாக அதிகப்படியான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளையும் அடிமைத்தனத்தையும் எதிர்கொள்கின்றனர். இவையெல்லாம் தனிப்பட்ட பலவீனம் அல்ல, வரலாற்று ரீதியான மனக்காயங்களின் (Trauma) வெளிப்பாடு என்று உலகம் இன்று புரிந்துகொள்கிறது.
ஆனால் இந்தியாவோ இதைச் சாதியக் கண்ணோட்டத்தில் பார்க்க மறுக்கிறது. தலித் மக்கள் மதுவோ, புகையிலையோ அல்லது போதைக்கோ அடிமையாகும்போது, அது அவர்களின் ஒழுக்கக் குறைவு என்றே சொல்லப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக நடந்த அவமானங்கள், வன்முறை, புறக்கணிப்பு ஆகியவை ஒரு மனிதனின் மனதையும் உடலையும் எப்படிப் பாதிக்கும் என்று நாம் கேட்பதில்லை.
பொதுவெளியில் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையைப் புள்ளிவிவரங்கள் புட்டுவைக்கின்றன. தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், உயர் சாதியினரைவிடப் பட்டியலினத்தவர்களிடையே மது, புகையிலைப் பயன்பாடு அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன. தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS-5), மற்ற சாதியினரைவிடப் பட்டியலின, பழங்குடியின ஆண்களிடையே மது அருந்துவது அதிகம் என்று கூறுகிறது.
முற்போக்கான மாநிலமாகக் கருதப்படும் மகாராஷ்டிரமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆக்ஸ்பாம் (Oxfam) போன்ற அமைப்புகளின் ஆய்வுகள், தலித் மக்கள் அதிகம் வாழும் கிராமப்புறங்களிலும் குடிசைப் பகுதிகளிலும் போதைப் பழக்கம் அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் ஆண்களிடையே இது அதிகம். ஆனால் இது ஏன் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது?
இதைப் புரிந்துகொள்ள ‘தலைமுறைகளாகத் தொடரும் மனவேதனை’ (Inter-generational trauma) என்ற கருத்தை நாம் பார்க்க வேண்டும். ஒரு சமூகம் பல நூற்றாண்டுகளாகச் சமத்துவமின்மையிலும், கண்ணியம் மறுக்கப்பட்ட நிலையிலும், கீழ்த்தரமான வேலைகளுக்குத் தள்ளப்பட்டும் வாழும்போது, அவர்களுக்கு மன அழுத்தம் நிரந்தரமாகிவிடுகிறது. பதற்றம் பரம்பரையாகத் தொடர்கிறது. போதைப் பொருள் பயன்பாடு என்பது அவர்களுக்கு வெறும் இன்பம் அல்ல; அது வலியைக் குறைப்பதற்கான ஒரு வழி.

மகாராஷ்டிரத்தில் சாதியும் போதைப் பழக்கமும் இணைந்தே பயணிக்கின்றன. கரும்பு வெட்டுபவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், தோல் பதனிடும் தொழிலாளர்கள் போன்ற கடினமான வேலைகளைச் செய்யும் தலித் மக்களுக்கு மது வலி நிவாரணியாகவும், மன அழுத்த மருந்தாகவும் மாறுகிறது. கள்ளச் சாராயக் கடைகளும் மதுக்கடைகளும் தலித் குடியிருப்புகளைச் சுற்றியே அமைக்கப்படுகின்றன. சந்தை அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது. அரசு வரியைப் பெற்றுக்கொண்டு, குடிப்பவர்களைக் குற்றம் சொல்கிறது.
ஒழுக்கத்தைப் பேசும் மொழி
சாதியால் சுட்ட வடு என்பது மற்ற இழப்புகளைவிட மாறுபட்டது. அதிலிருந்து தப்பிக்க முடியாது. வறுமை மாறலாம், ஆனால் சாதி ஒட்டிக்கொண்டே இருக்கும். ஒரு தலித் குழந்தை தன் பெற்றோர் சாதிப் பெயரால் அவமானப்படுத்தப்படுவதைப் பார்த்து வளரும்போது, அது அந்தப் பிஞ்சு மனத்தின் சுயமரியாதையைப் பாதிக்கிறது. சமூக அழுத்தம் மூளையின் செயல்பாட்டையே மாற்றுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, போதைப் பழக்கம் என்பது வெறும் பழக்கம் அல்ல; அது உள்ளுக்குள் பதிந்திருக்கும் வலி நிறைந்த நினைவின் பிரதிபலிப்பு.

இந்தியாவில் உள்ள மனநல சிகிச்சை முறைகள் இதை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. போதை மீட்பு மையங்கள் காரணத்தைக் கண்டறியாமல், பழக்கத்தை மட்டும் நிறுத்தச் சொல்கின்றன. மேற்கத்திய உளவியல் முறைகள் சாதிய வன்முறையை மறந்துவிட்டுத் “தனிப்பட்ட காரணங்களைப்” பற்றிப் பேசுகின்றன. மகாராஷ்டிர கிராமத்தில் இருக்கும் ஒரு தலித்தைப் பொறுத்தவரை, சாதியை மறைத்துப் பேசும் சிகிச்சை என்பது சிகிச்சையே அல்ல. ஒரு தலித் உரிமைப் போராளி கூறுவது போல, “உடலில் சொருகியுள்ள கத்தியை எடுக்காமல் காயத்தை ஆற்ற முடியாது.”
தலித் சமூகத்துப் பெண்கள் வேறு விதமான சுமையைத் தாங்குகிறார்கள். தலித் பெண்கள் மது அருந்துவது ஆண்களைவிடக் குறைவாக இருந்தாலும், அவர்கள் புகையிலையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கூலி இல்லாத உழைப்பு, குடும்ப வன்முறை, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிலிருந்து தப்பிக்கப் புகையிலை மெல்லுவது ஒரு வழியாக இருக்கிறது. தலித் பெண்களின் துயரம் என்பது இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது.
போதைப் பழக்கத்தை ஒழுக்கத்துடன் தொடர்புபடுத்தும் சொல்லாடல்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தனிப்பட்ட மன உறுதி இல்லாததுதான் போதைப் பழக்கத்திற்குக் காரணம் என்று சொல்லும்போது, தண்டனையும் அவமானமுமே தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. இதனால் குடும்பங்கள் தங்களைத்தாங்களே நொந்துகொள்கின்றன. சமூகம் சிதறுகிறது. ஆனால் அதை உருவாக்கும் சமூகக் கட்டமைப்பு அப்படியே இருக்கிறது. நகர்ப்புறங்களில் உள்ள உயர் சாதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும்போது மனஅழுத்தம், அதிக வேலைப்பளு ஆகிய காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. பழக்கம் ஒன்றுதான்; ஆனால் பார்வைகள் வேறு.
இதன் பின்னணியில் அரசியல் பொருளாதாரமும் உள்ளது. மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் அரசு பெரும் லாபம் ஈட்டுகிறது. இதில் பெரும் பகுதி விளிம்புநிலை மக்களிடமிருந்தே வருகிறது. அரசு திட்டங்கள் மருத்துவமனைச் செலவு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற அறிகுறிகளை மட்டுமே கவனிக்கின்றன. ஆனால் அதன் வேரை (சாதி) அகற்றுவதில்லை.
இது தனிப்பட்ட தீமை அல்ல
இந்தச் சுழற்சியை உடைக்க, நாம் ஒழுக்கம் பேசுவதை விட்டுவிட்டுச் சமூக நீதியைப் பற்றிப் பேச வேண்டும். அரசாங்கக் கொள்கைகள் சாதியை மனநலம் தொடர்பான காரணியாக அங்கீகரிக்க வேண்டும். போதை மீட்புத் திட்டங்கள் அந்தந்தச் சமூகத்திற்கானவையாகவும் சாதியக் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்பவையாகவும் இருக்க வேண்டும். கண்ணியமான வேலையும் பாதுகாப்பும் போதை மீட்புக்கு மிக முக்கியம்.
மிக முக்கியமாக, சாதி இப்போது இல்லை என்ற பொய்யை இந்தியா கைவிட வேண்டும். தலித் சமூகங்களில் இருக்கும் போதைப் பழக்கம் தனிப்பட்ட தோல்வி அல்ல, அது சமூகத்தின் தோல்வி. ஒரு நாகரிகம் பல நூற்றாண்டுகளாகச் சமத்துவமின்மையை வளர்த்துவிட்டு, அதன் விளைவுகளைப் பார்த்து ஆச்சரியப்படுவது வேடிக்கையானது. சாதிய ஒடுக்குமுறையை வரலாற்றுத் தகவலாகப் பார்க்காமல், அது இன்றும் நம் உடலில் பதிந்திருக்கும் காயம் என்று உணரும்வரை, மது என்பது புகலிடமாகவும் அழிக்கும் சக்தியாகவும் நீடிக்கும்.
அபூர்வா தியான வகுப்புகளுக்குச் சென்றார். ஆனால் போதை என்பது ஒருவரது அடையாளமாக மாறிவிடும்போது, அதிலிருந்து விடுபடுவது கடினம். இந்தியா போதைப் பழக்கத்தைத் தனிப்பட்ட குற்றமாகப் பேச விரும்புகிறது. ஏனென்றால் அதுதான் சமூகத்தின் பொறுப்பைத் தட்டிக்கழிக்க உதவும். சாதி இந்துக்கள் தலித் மக்களின் போதைப் பழக்கத்தைப் பார்த்துக் கிண்டல் செய்துகொண்டே அதே சமூக அமைப்பிலிருந்து தங்களுக்குத் தேவையான உழைப்பையும் பெற்றுக்கொள்ளலாம்.

சாதி இருக்கும்வரை போதைப் பழக்கம் புதுப்புது வடிவங்களில் (பாட்டில், பாக்கெட், மாத்திரை) வந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் மன அழுத்தம் எப்போதும் தனக்கான வடிகாலைத் தேடும். அந்த நிலையை மாற்றாதவரை, மதுவை ஒழிப்பதைப் பற்றிப் பேசுவது வெறும் ஏமாற்று வேலை.
நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்வி, ஏன் தலித்துகள் அதிகம் குடிக்கிறார்கள் என்பது அல்ல. இந்தியா அவர்களுக்குச் செய்த அநீதியைக் காண ஏன் மறுக்கிறது என்பதுதான்.
வைபவ் வாங்கடே, ஒரு எழுத்தாளர்.
