ADVERTISEMENT

ஆளுநர் பதவி அரசியல் சாசன துஷ்பிரயோகம்: தேவை உடனடி சீர்திருத்தம்!

Published On:

| By Minnambalam Desk

நா.மணி

தமிழ்நாட்டின் ஆளுநர் மாற்றம் பலருக்கும் ஒரு நிம்மதி பெருமூச்சை அளித்திருக்கலாம். தொட்டதெல்லாம் ஒரு பிரச்சினை. நினைப்பதிலெல்லாம் தலையீடு. ஆளுநர் ஒரு அறிக்கை விட்டாலோ அல்லது ஏதாவது பேசிவிட்டாலோ அது “ஆளுநர் செய்தி” என்பதற்காக ஊடகங்கள் அதை வெளியிட வேண்டிய நிலை உருவாகிறது. ஊடகங்களில் வெளிவரும் அந்தச் செய்திக்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்.

ஆளுநர் பேசிய எதையும் யாரும் கவனிக்காமல் விட்டிருந்தால் அவர் பேச்சும் அறிக்கையும் தானாகவே குறைந்து இருக்கலாம். ஆனால் ஆளுநர் என்பதால் ஒவ்வொரு கருத்தும் விவாதமாக மாறுகிறது. வினையும் எதிர்வினையும் ஒருவித பதட்டத்தையும், அமைதியின்மையையும், சங்கடத்தையும் அலை அலையாக உருவாக்கிக் கொண்டே இருந்தது.

ADVERTISEMENT

“இந்தத் திருப்பணி தமிழ் நாட்டைக் காட்டிலும் மற்றொரு மாநிலத்திற்கு தேவைப்படுகிறது” என்று நினைத்து அவரை மேற்கு வங்கத்திற்குப் அனுப்பியிருக்கலாம். சட்டத்தை நிலைநாட்டும் உயர்நிலைப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர், ஐபிஎஸ் அதிகாரி.‌ “அரசியல் அமைப்பு சட்டத்தில் ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறது” என்பதைப் பற்றி சிந்திக்காமல் செயல்படுகிறார்.  என்ன சொல்ல முடியும்?

இப்படிப்பட்ட பணிகளுக்கே ஆளுநர் பதவி என்று நடுவண் அரசு புரிந்து வைத்திருக்கும்போது அதற்கு மேல் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் சார்பு இருக்கலாம். ஆனால் “நடுவண் அரசின் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஆளுநர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்; அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தான் செயல்பட வேண்டும்” என்று சொல்லக்கூடிய ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நாம் தவறிவிட்டோம். அந்த நிலையை உருவாக்க மாநில அரசுகளும் மக்களும் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது.

ADVERTISEMENT

ஆளுநர் பதவியின் நோக்கம்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், இவ்வளவு பெரிய அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் என்று தெரிந்திருந்தால், அரசியல் சாசன வடிவமைப்பாளர்கள், இந்தப் பதவியை வேறுவிதமாக சிந்தித்திருக்கலாம்.

இந்தியாவைப் போன்ற பரந்த தேசத்தில் ஒற்றுமையை உறுதி செய்யவும், மாநிலங்களை ஒருங்கிணைக்கவும், ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது. அந்த நோக்கங்களில் தவறு இல்லை. ஆனால் நடுவண் அரசின் ஆதிக்க அரசியல் பிழை இது.

ADVERTISEMENT

ஆளுநரின் முக்கியப் பணிகள்

•நடுவண் அரசில் குடியரசுத் தலைவர் இருப்பது போல மாநிலத்திற்கு ஒரு அரசியல் சாசனத் தலைவர் இருக்க வேண்டும்.

•மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இருக்க வேண்டும்.

•மாநில அரசின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருந்தால் எச்சரிக்கை வழங்க வேண்டும்.

•நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும்.

•சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறித்த குழப்பம் ஏற்பட்டால் வழிகாட்ட வேண்டும்.

•அரசியல் அமைப்பு சட்டத்தின் 356ஆம் பிரிவை தேவையான நேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்தப் பொறுப்புகளை ஆளுநர்கள் அறம் பிறழாமல் மேற்கொள்வார்கள் என்று அரசியல் அமைப்பாளர்கள் நம்பினர்.

காங்கிரஸின் ஆளுநர் பதவியின் துஷ்பிரயோகம்

இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆளுநர் பதவியின் துஷ்பிரயோகத்தை கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் அதே கட்சி நடுவண் அரசில் ஆட்சி செய்த காலத்தில் 356ஆம் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி பல மாநில அரசுகளை கலைத்தது.

ஜவகர்லால் நேருவே 1959ஆம் ஆண்டு E. M. S நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள அரசை கலைத்தார். அதன் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை காங்கிரஸ் அரசு கலைத்துள்ளது.

பெரும்பான்மை இல்லாத கட்சிகளை ஆட்சிக்கு அழைத்தல், பெரும்பான்மை நிரூபிப்பதை தாமதப்படுத்தல், ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமித்தல் போன்ற செயல்கள் நடந்தன. அவர்கள் தங்களை நியமித்த அரசுக்கு செவிசாய்த்து மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுத்தனர்.

1977–1980: ஆளுநர் மாற்ற அரசியல்:

அவசரநிலைக்கு பிறகு 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு, காங்கிரஸ் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை ராஜினாமா செய்ய வைத்தது.

பின்னர் 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அதே நடைமுறை தொடர்ந்தது. அரசியல் சாசனப் பொறுப்பை சுதந்திரமாக நிறைவேற்றுவதற்கான சூழல் ஆளுநர்களுக்கு வழங்கப்படவில்லை.

பாஜக காலத்தில் அதிகரித்த துஷ்பிரயோகம்

காங்கிரஸ் காலத்தில் நடந்ததை விட பல மடங்கு அளவில் ஆளுநர் பதவி துஷ்பிரயோகம் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் ஆளுநரின் பேச்சுகள், அறிக்கைகள், நடவடிக்கைகள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு  பெரும் தலைவலியாக மாறின. மக்கள் நலத்திற்காக கொண்டுவரப்பட்ட பல மசோதாக்கள் ஆண்டுகளாக ஒப்புதல் இன்றி கிடப்பில் போடப்பட்டன.

கர்நாடகா அரசியல் நெருக்கடி

2018ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து 115 உறுப்பினர்களின் ஆதரவை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.

ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற காரணத்தால் பாஜகவை ஆட்சிக்கு அழைத்தார் ஆளுநர். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டபோது பி.எஸ். எடியூரப்பா  ராஜினாமா செய்தனர்.

மகாராஷ்டிரா நிகழ்வு

2019ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில்  சிவசேனா காங்கிரஸ் மற்றும்  சரத்பவாரின் தேசிய காங்கிரஸ் இணைந்து

பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருந்தது. 

ஆனால் 23 நவம்பர் 2019 அதிகாலையில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோருக்கு ரகசியமாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

பின்னர் உச்ச நீதிமன்றம் 24 மணி நேரத்தில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டபோது பட்னாவிஸும், அஜித் பவாரும் ராஜினாமா செய்தனர்.

கமிஷன் பரிந்துரைகள்

சர்கா்காரியாகமிஷன்  (1983) மற்றும் பூஞ்ச் கமிஷன் (2007) ஆகியவை,  ஆளுநர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும். 356 பிரிவு மிக அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் ஆர் எதிர் நடுவண் அரசு தீர்ப்பில் 356 பிரிவை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தியது.

ஆளுநர் பதவிக்குப் தெளிவான நெறிமுறைகள் தேவை

இந்த மிகக் கசப்பான அனுபவங்கள் அடிப்படையில்,  தமிழ் நாடு அரசு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் 2025 ஏப்ரல் மாதம் ஒரு குழு  அமைக்கப்பட்டது.  அந்தக் குழு மத்திய மாநில அரசுகளின் உறவை பரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட குழு. அதில் ஆளுநர் பதவியும் விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பதவியின் மேன்மையை காக்க பரிந்துரைகள்

• மாநில சட்டமன்றம் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை குடியரசுத் தலைவர் ஆளுநராக நியமிக்க வேண்டும்.

• ஒரே ஒரு முறை மட்டுமே ஆளுநர் பதவி வழங்கப்பட வேண்டும்.

• ஆளுநர் பதவிக்குப் பிறகு வேறு அரசியல் பதவிகளுக்கு செல்லக் கூடாது.

• ஐந்தாண்டு காலத்திற்கு முன்பே புதிய ஆளுநரை நியமிக்க வேண்டும்.

• மாநில சட்டமன்றத்திற்கு ஆளுநரை நீக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

ஆளுநருக்கான தகுதிகள்

ஒரு ஆளுநர்,

அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது,

பொது வாழ்க்கையில் சிறந்த சாதனைகள் கொண்டவராக இருக்க வேண்டும்,

கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த அரசியல் கட்சியிலும் பதவி வகித்திருக்கக் கூடாது,

நிர்வாகம், சட்டமன்றம் அல்லது நீதித்துறையில் அதிகாரப்பூர்வ பதவி வகித்தவராக இருக்கக் கூடாது.

வழிகாட்டி ஆவணம் தேவை:

ஆளுநர்கள் நடுநிலையுடன் செயல்படுவதற்காக தெளிவான வழிகாட்டி ஆவணம் தேவை. தேர்தல், அமைச்சரவை ராஜினாமா, நம்பிக்கையில்லாத தீர்மானம் போன்ற சூழ்நிலைகளில் ஆளுநர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தை அமைக்க அழைக்கும் போது முன்னுரிமை வரிசை

தேர்தலுக்கு முன் கூட்டணி – தெளிவான பெரும்பான்மை,

தனிப்பெரும் கட்சி – உறுதியான ஆதரவு,

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி,

வெளியிலிருந்து ஆதரவு பெறும் கூட்டணி,

இந்த அனைத்து முடிவுகளும் சட்டமன்ற அவையில் மட்டுமே இறுதி செய்யப்பட வேண்டும்.

ஒரு மாநில அரசின் கண்ணியத்தை காக்கும் பொறுப்பு ஆளுநருக்கும் உள்ளது. ஆளுநர் பதவி அரசியல் மோதலுக்கான மேடையாக மாறாமல் அரசியல் சாசனப் பொறுப்பாக செயல்பட வேண்டும்.

அரசியல் அமைப்பில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் ஆளுநர் பதவி யாருக்கும் சுமையானதாக அல்லாமல் உண்மையான அரசியல் சாசனப் பொறுப்பாக மாறும்.

கட்டுரையாளர்:

The post of Governor requires clear ethics - Article in Tamil by Professor N Mani

நா.மணி, பேராசிரியர். மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share