நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் இன்று (அக்டோபர் 7) உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை 15 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் எம்.பி. கமல்ஹாசன் பேசுகையில்,” சர்வாதிகாரம், சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி தான். கல்வி தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது” என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசனின் சனாதனம் குறித்த இந்த கருத்துக்கு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், கமல்ஹாசனை கண்டித்து, அவரது சங்கை அறுத்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி இருந்தார்.
இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அக்கட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், எந்த வித உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்த போது, எந்த உள்நோக்கத்தோடும் தான் அவ்வாறு பேச வில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கொலை மிரட்டல் விடும் வகையில் அவர் பேசியதால் முன்ஜாமின் வழங்க கூடாது என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.