230 இடங்களைக்கொண்டுள்ள ‘இந்தியா’ கூட்டணி, ஒரு ஒருங்கிணைந்த மாற்றை முன்வைப்பதற்கான உரிமையை மட்டுமல்ல, கடமையையும் கொண்டுள்ளது.
மனிஷ் திவாரி
2025ஆம் ஆண்டு, நிர்வாகம், பாதுகாப்பு, ஜனநாயகப் பொறுப்புக்கூறல் ஆகிய முக்கியமான செயல்பாடுகளில் அரசு இயந்திரத்தின் அதிர்ச்சியூட்டும் பலவீனத்தை வெளிப்படுத்திய காலமாகக் கருதப்படும். மணிப்பூர் பள்ளத்தாக்கின் பதற்றம்முதல், கடுமையான தேசிய பாதுகாப்புச் சம்பவங்கள்வரை இந்த ஆண்டு ஒரு புதிய உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தற்போதைய நிர்வாக மாதிரி என்பது எதிர்வினை ஆற்றும் (reactive) போக்கைக் கொண்டது; அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்விலிருந்து விலகி நிற்கிறது.

மணிப்பூர் சோகம் தேசத்தின் மனசாட்சியில் ஆறாத வடுவாக நிற்கிறது. மாநில அரசின் ராஜினாமாவும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதும் தீர்வுகளல்ல; தோல்வியின் மறைமுக ஒப்புதல்கள். ஜனநாயகம் முடங்கிக் கிடக்கும் சூழலில், நாளுக்கு நாள் ஆழமாகிவரும் இனப் பிளவுகளை இவற்றால் மறைக்க முடியவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டித் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதங்கள் மீறப்படுவதன் வெளிப்படையான எடுத்துக்காட்டு இது.
தேசியப் பாதுகாப்புத் துறையில் 2025ஆம் ஆண்டு பல அதிர்ச்சிகளை அளித்தது. பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் என்பது வெறும் பாதுகாப்பு குறைபாடு மட்டுமல்ல, அது உளவுத்துறை, நிர்வாகத் தோல்விகளையும் சுட்டிக்காட்டியது. மே 7 முதல் 10 வரை எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் ராணுவத் திறனை வெளிப்படுத்தினாலும், அவை தந்திரோபாய (tactical) வெற்றிகளாகவே இருந்தன; ஒரு விரிவான மூலோபாயப் பார்வையை (strategic) அவை கொண்டிருக்கவில்லை. அணு ஆயுதம் ஏந்திய, சமச்சீரற்ற போரில் ஈடுபடும் ஒரு எதிரிக்கு எதிராக, வழக்கமான பதிலடித் தாக்குதல்கள் மட்டும் நிலையான தடுப்பு சக்தியாக அமையுமா என்ற அடிப்படைக் கேள்விக்கு இன்றும் விடை கிடைக்கவில்லை.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் சாடும் முயற்சியாகவே முடிந்தன. பாகிஸ்தானைவிட ஒன்பது மடங்கு பாதுகாப்பு பட்ஜெட்டையும், பெரும் ராஜதந்திர செல்வாக்கையும் கொண்டுள்ள இந்தியா, ஏன் இன்னும் ‘தூண்டுதல் – பதிலடி’ என்ற சுழற்சியிலேயே சிக்கிக்கிடக்கிறது என்ற சிக்கலான கேள்விக்குத் தீர்வு காணப்படவில்லை.
தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு, உள்நாட்டுத் தீவிரவாதத்தின் அபாயத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியது. இது உளவு நிறுவனங்கள்மீது வலுவான நாடாளுமன்றக் கண்காணிப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் இத்தகைய தவறுகள் கறையை ஏற்படுத்தின. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இந்தியா-அமெரிக்க உறவுகள் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு ராஜதந்திரக் குழப்பத்தில் முடிந்தது. எட்டு தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட விதிகள் அடிப்படையிலான உலக ஒழுங்கை மாற்றியமைக்க முயலும் அமெரிக்க நிர்வாகத்தின் அரசியல் நோக்கங்களைச் சமாளிக்க முடியாமல், நமது வெளியுறவுத் துறை திணறியது.
“அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” என்னும் கொள்கையும் கடும் சவால்களைச் சந்தித்துள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்டதன் விளைவுகள் மூலோபாய ரீதியாகச் சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளன. இலங்கை மற்றும் நேபாளத்தில் ‘ஜென்-இசட்’ (Gen-Z) தலைமுறையினரின் போராட்டங்கள், நிறைவேறாத ஆசைகள் எவ்வாறு சமூக ஊடகங்கள் மூலம் ஆயுதமாக மாற்றப்படலாம் என்பதைக் காட்டுகின்றன.
சீனாவுடனான உறவில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முன்னேற்றம் என்பது வெறும் விமானச் சேவைகள், விசாக்கள் தொடர்பான ஒரு மாயையே. எல்லையில் தீர்க்கப்படாத ஆக்கிரமிப்புகளையும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறையையும் மறைக்கவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
உள்நாட்டு விவகாரங்களில் அரசின் பொருளாதார, சமூகக் கொள்கைகள் தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டமிடலை விட, தேர்தல் பீதியால் உந்தப்பட்டவையாகவே தெரிந்தன. வருமான வரி, ஜிஎஸ்டி குறைப்புகள் தெளிவான நிதிக் கொள்கையின் அங்கமாக இல்லாமல், 2024 தேர்தல் பின்னடைவுக்கும், ட்ரம்ப் நிர்வாகத்தின் தன்னிச்சையான வர்த்தக வரிகளுக்குமான அவசர எதிர்வினையாகவே இருந்தன.

திடீரென அறிவிக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது கொள்கை ரீதியான பல்டி. இதில் பிழையற்ற தரவுகளைச் சேகரிப்பதிலோ அல்லது சமூக விடுதலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பொருளாதாரக் குறிகாட்டிகளை ஆராய்வதிலோ உண்மையான அர்ப்பணிப்பு தென்படவில்லை.
ஜனநாயக நிறுவனங்களும் நெறிமுறைகளும் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டன. அரசு இயந்திரம் அரசியலுக்கு அடிபணிவதை இது அப்பட்டமாகக் காட்டியது. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் புதிய முறையிலிருந்து தலைமை நீதிபதி நீக்கப்பட்டதன் விளைவாக, ஒரு புதிய ஆணையம் உருவானது. இந்த ஆணையம் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (Special Intensive Revision) என்ற பெயரில், வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, பொதுமக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சட்டபூர்வமற்ற, ஜனநாயகத்திற்கு ஆபத்தான பாதையில் இறங்கியது.
அணுசக்தித் துறைக்கான ‘சாந்தி’ (SHANTI) சட்டம், முறையான நாடாளுமன்ற ஆய்வின்றிச் சட்டங்களை நிறைவேற்றும் ஆபத்தான போக்கிற்கான சான்றாகும். விபத்துக் காலங்களில் ஆபரேட்டர்களின் பொறுப்பை வெறும் 3,000 கோடி ரூபாயாகக் குறைத்தும், வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு முழு விலக்கு அளித்தும், லாபத்தைத் தனியாருக்குத் தந்து நஷ்டத்தைப் பொதுமக்களின் தலையில் கட்டும் இந்தச் சட்டம் பொதுப் பாதுகாப்பைப் பணயம் வைத்துள்ளது.

மகாத்மா காந்தியையும் ராமபிரானையும் முரண்படுபவர்களாகச் சித்தரித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) மாற்றுவது காந்தியக் கொள்கைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, பிற்போக்குத்தனமான நடவடிக்கையும் ஆகும். தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம், உயர் கல்வி மசோதா ஆகியவை கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும் நிறுவனங்களின் சுயாட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாத மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகளாகும். 2025ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகள், குடிமக்களின் டிஜிட்டல் ஆன்மாவை மிகக்குறைந்த பாதுகாப்புகளுடன் அரசின் கையில் ஒப்படைப்பதன் மூலம் ஒரு முழுமையான சர்வாதிகாரச் சூழலை உருவாக்குகின்றன.
இந்தியாவின் உயிர்நாடியான ரயில்வே துறை, தவிர்க்கப்பட வேண்டிய பல சோகங்களைச் சந்தித்தது. பாலங்கள் இடிந்து விழுந்தன. இவை தெய்வச் செயல்கள் அல்ல; பராமரிப்பிலும் கண்காணிப்பிலும் ஏற்பட்ட தோல்விகள். ஜூன் மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளானது வான்வழிப் பாதுகாப்பு குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியது. ஆனால் உலகளாவிய கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாக்க இவை மூடிமறைக்கப்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் ஒருசில நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது.

ஒவ்வொரு பேரழிவின்போதும், துயரம் தெரிவிப்பது, நிதியுதவி அறிவிப்பது, விசாரணைக்கு உத்தரவிடுவது என்னும் வழக்கமான கதைதான் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தார்மீகப் பொறுப்பேற்காமல் இருக்கிறார்கள். பொறுப்புக்கூறலை விட பிம்பத்தைக் கட்டமைப்பதற்கே முன்னுரிமை அளிக்கும் கலாச்சாரத்தை இது சுட்டிக்காட்டுகிறது.
எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பு

இந்த இருண்ட சூழல் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பெரும் அழைப்பாகும். 230 இடங்களைக் கொண்டுள்ள இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்த மாற்றை முன்வைப்பதற்கான உரிமையை மட்டுமல்ல, அதற்கான புனிதமான கடமையையும் கொண்டுள்ளது.
கிராமப்புறத் துயரம், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களைச் சிதைக்கும் முயற்சிகள் ஆகியவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. எதிர்க்கட்சிகள் சிதறி நிற்காமல், தேசியப் பாதுகாப்பு, கூட்டாட்சித் தத்துவம், பொருளாதார மீளுருவாக்கம், நிறுவனங்களின் தன்னாட்சி ஆகியவற்றில் தெளிவான மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுவே 2024ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையின் சாரம்.
கட்டுரையாளர்:
மனிஷ் திவாரி, வழக்கறிஞர், மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், முன்னாள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்.
