ஆறுகளை பராமரித்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் 108 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் நொய்யல் ஆற்றை பார்வையிட்டார்.
நொய்யல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவினருடன் கலந்துரையாடிய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு காலத்தில் நொய்யல் ஆறு என்று சொன்னால் நோய்களை தீர்க்கக்கூடிய ஆறாக இருந்தது. ஆனால் இன்று நோய்களை வரவழைக்கக் கூடிய ஒரு ஆறாக மாற்றி விட்டார்கள்.
கடந்த 60 ஆண்டு காலமாக இந்த ஆற்றை பராமரிக்காமல் தொழிற்சாலை கழிவுகள், வீட்டு கழிவுகள் என அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டிய இந்த சூழலில் மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒரு பத்தாயிரம் கோடியை ஒதுக்க வேண்டும்.
சுமார் 180 கிலோமீட்டர் ஓடக்கூடிய நொய்யல் ஆற்றால் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 4 மாவட்டங்கள் பயனடைகிறது. நொய்யல் ஆறு ஒரு பொக்கிஷம் 2 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள்.
வெள்ளியங்கிரி மலையில் இருந்து உருவாகும் இந்த ஆறு மூலிகை நீரை கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் தற்போது சாக்கடை நீராக மாறிவிட்டது. 1967 இல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல ஆறுகள் செத்துக் கொண்டிருக்கிறது.
கூவம், அடையாறு ஆறுகள் செத்து விட்டன. தாமிரபரணி ஊசலாடுகிறது. வையாறும் போய் விட்டது. இப்படி தொடர்ந்து ஆறுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் நொய்யல் ஆற்றங்கரையில் வசிக்கும் 10 சதவீத மக்களுக்கு கேன்சர் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
ஆறுகளை மாசுபடுத்தி தமிழக அரசாங்கம் தன்னுடைய மக்களை கொலை செய்து கொண்டிருக்கிறது. ஆறுகள் என்பது நம்முடைய தாயைப் போன்றது அதை நாம் பராமரித்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என தெரிவித்தார்.
