ADVERTISEMENT

வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. ‘வியட்நாம் புரட்சி’ வெடிக்கும்?

Published On:

| By Minnambalam Desk

எஸ்.வி.ராஜதுரை

1823இல், அப்போது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜேம்ஸ் மன்றோவின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த க்வென்ஸி என்பவரால் எழுதப்பட்டதும் அன்று முதல் இன்று வரை அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் கூறாக உள்ளதும்தான் ‘மன்றோ கொள்கை’ (Monroe Doctrine) எனக் கூறப்பட்டு வருகிறது.

அக்காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த தென்னமெரிக்க நாடுகளில் நடந்த புரட்சிகரக் கொந்தளிப்புகளின் காரணமாக அவை தேசிய விடுதலை பெறும் நிலையில் இருந்தன. இருந்தபோதிலும் அமெரிக்காவின் மன்றோ கொள்கை இனி ‘புதிய உலகம்’ எனச் சொல்லப்படும் அமெரிக்கக் கண்டங்களில், குறிப்பாக இலத்தின் அமெரிக்கா எனச் சொல்லப்படும் தென்னமெரிக்காவிற்குள் – ஐரோப்பிய நாடுகள் இனி புதிய ஆக்கிரமிப்புகளைச் செய்யக்கூடாது என்றும், அதேவேளை ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் உள்விவகாரங்களிலோ அல்லது அவற்றிடம் எஞ்சியிருந்த இலத்தின் அமெரிக்கக் காலனி நாடுகளிலோ அமெரிக்கா தலையிடாது என்றும் மன்றோ கொள்கை கூறியது.

ADVERTISEMENT

ஆனால், இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, உலகிலுள்ள வேறு எந்த நாட்டிலும் அமெரிக்கா தலையிடாது என்ற வரம்பு மன்றோ கொள்கையில் சேர்க்கப்படவில்லை. எனவே அமெரிக்கா இலத்தின் நாடுகளில் மட்டுமின்றி உலகின் ஆறு கண்டங்களிலும் தலையிட்டுள்ளது. புவிக் கோளத்தில் குறைந்தபட்சம் பாதியளவு தனது உடைமையில் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் குறிக்கோள்.

இலத்தின் அமெரிக்க நாடுகளைத் தன் புழக்கடையாகக் கருதும் அமெரிக்கா தன்  நலனுக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் நாடுகளை ஆக்கிரமித்தோ அல்லது அந்த நாடுகளில், தனது உளவுத் துறை மூலமாகவோ ‘எதிர்க் கட்சிகளை’ உருவாக்கி ஆட்சிக் கலைப்பு செய்தோ தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. உலக நாடுகளில் பிரதிநிதி என்று சொல்லப்படும் ஐ.நா.வின் விதிகளையும் சர்வதேசச் சட்டங்களையும் துச்சமெனக் கருதும் அமெரிக்கா, 2000த்தில் தொடங்கிய புத்தாயிரமாண்டில் மட்டும் லிபியா, சிரியா, இராக், பாலஸ்தீனம் முதலிய நாடுகளில் நேரடியாக இராணுவத் தலையீடு செய்துள்ளது. அண்மையில் வங்கதேசத்திலும் நேப்பாளத்திலும் நடந்த ”இளந்தலைமுறையினரின் புரட்சிகளி”லும் அமெரிக்காவின் கை உள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

ADVERTISEMENT

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கக் கண்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற மன்றோ கொள்கையைக் காட்டி, 1950களில் குவாதமாலா நாட்டிற்கும் 1960களில் கியூபாவிற்கும் சோவியத் யூனியன் செய்த பொருளாதார உதவிகளையும்கூட அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் செய்யப்பட்ட தலையீடு என்று அமெரிக்கா கூறியது.1960 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா,  கியூபாவுடன் எந்த நாடும் வணிகம் செய்யக்கூடாது என்ற தடை விதித்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது.

இலத்தின் அமெரிக்க நாடுகள் ஏதும் சோசலிசத்தை மட்டுமல்ல சுயேச்சையான, இறையாண்மையுள்ள பொருளாதாரத்தை உருவாக்குவதைக்கூட அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த நாட்டின் மீதும் இராணுவத் தலையீடு செய்யும் திமிர் அமெரிக்காவிற்கு இருந்து வருகிறது. அணு உலைகள் தொடர்பான சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு ஈரான் உடன்படவில்லை என்று கூறியும் உலக எஜமானனாகத் தன்னைப் பாவித்தும் சிலமாதங்களுக்கு முன் அமெரிக்க இராணுவ விமானங்கள் ஈரானின் அணு உலைகள் இருந்த இடத்தின் மீது குண்டு மாரி பொழிந்துவிட்டுச் சென்றன. அந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகுத்தியது ஈரான். தற்போது ஈரானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக அந்த நாட்டின் அரசை எதிர்த்து வன்முறைக் கிளர்ச்சிகளை நடத்துபவர்கள் மீது ஈரானிய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்கா அந்த நாட்டில் தலையிடும் என்று இரண்டு நாள்களுக்கு முன் ட்ரம்ப் விடுத்த அறிக்கைக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளது அந்த நாட்டு அரசாங்கம்.

ADVERTISEMENT

1998முதல் 2013 வரை வெனிசூலாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஹ்யூகோ சாவெஸ், அந்த நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டு சென்றார். அவரது ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்கா தன் உளவுப் படைகள் மூலமும் அங்குள்ள அரசியல் கைக்கூலிகள் மூலமும் சாவெஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பல முயற்சிகளைச் செய்தது. சாவெஸ் இறந்த பிறகு அவரது அரசியல் வாரிசான நிக்கோலா மதுரோ ஆட்சிக்கு வந்த நாள் முதல் அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீர்குலையும்படி செய்து வந்தது. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசூலா. அந்த வளத்தைக் கொள்ளையடித்து வந்த பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன வெனிசூலாவின் சாவெஸ், மதுரோ அரசாங்கங்கள்.

ட்ரம்ப் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக பதவியேற்ற முதல், வெனிசூலா அரசாங்கம் போதைப் பொருள்களை அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லும் கும்பல்களுக்கு ஆதரவளிப்பதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்துவந்தார். அது உண்மைதான் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும்கூட, உலகில் மிக சக்தி வாய்ந்த நாடாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்கா போதைப் பொருள்கள் தன் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்திருக்க வேண்டுமல்லவா?

மேற்சொன்ன பிரசாரத்துடன், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக மக்களில் ஒரு பகுதியினரைத் திரட்டிக் கொண்டு வந்துள்ளவருமான மரியா கொரினா மச்சோடோ போன்றவர்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாட்டில் கலவரச் சூழ்நிலையை ஏற்படுத்தி வந்தது ட்ரம்ப் அரசாங்கம். மேலும், அங்கு கூலிப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இலத்தின் அமெரிக்க நாடுகளில் தனக்குப் பிடிக்காத அரசாங்கங்களை எண்ணற்ற முறை கவிழ்க்கவும் தேவைப்பட்டால் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கொல்லவும் தீர்மானித்து வந்த அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவம், தன் கைக்கூலி நாடுகளுடன் இணைந்து 1983இல் கருங்கடல் பகுதியிலுள்ள சின்னஞ் சிறு தீவு நாடான கிரெனாடாவின் மீது படையெடுத்து அந்த நாட்டின் பிரதமர் மாரிஸ் பிஷப்பைக் கைது செய்து வீட்டுக் காவலில் வத்து பின்னர் கொலை செய்தது.

அமெரிக்க நேரப்படி 3.1.2026 அதிகாலையில் அமெரிக்க இராணுவ விமானங்கள் வெனிசூலாவின் தலைநகர காரகாஸ் மீதும் நாட்டின் பல பகுதிகள் மீது பரவலாகவும் குண்டுமாரி பொழிந்துள்ளன. வெனிசூலாவின் இராணுவத் தளங்கள், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீதே தாக்குதல் தொடுப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் கூறினாலும், மக்கள் வசிக்கும் இடங்களிலும் இராணுவத் தாக்குதலை நடத்தியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இனிமேல்தான் தெரிய வரும். இது ஒருபுறமிருக்க வெனிசூலாவின் குடியரசுத் தலைவர் நிக்கோலா மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து வேறு நாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளதாக ட்ரம்ப் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைவிட அக்கிரமமான செயல் உலக அரசியலில் இருக்க முடியுமா?

மதுரோவும் அவரது மனைவியும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கான சான்றை அமெரிக்கா தர வேண்டும் என்று வெனிசூலாவின்  துணைக் குடியரசுத் தலைவர் வற்புறுத்தியுள்ளார். அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ, தனது நாடு எவருக்கும் பணிந்துவிடாது என்றும் அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்டிற்குள் நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். எத்தனை பிணக்குவியல்களை அந்த நாடு காணப் போகிறதோ? அமெரிக்க மக்களில் 35 விழுக்காட்டினர் மட்டுமே ட்ரம்புக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்றாலும் அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களும், இராணுவமும், காவல் துறையும் ட்ரம்பிற்குப் பக்க பலமாக இருக்கின்றன.

வியட்நாம் போரின் போது அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக அந்த நாட்டுக் குடிமக்கள் கிளர்ந்தெழுந்தது போன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்குமா? அல்லது ரஷியா, சீனா, ஈரான் போன்றவை வெனிசூலாவுக்கு ஆதரவாக அறிக்கையுடன் நிற்காது வேறுவகையில் உதவி செய்யுமா? காஸா விவகாரத்தில் நடந்து கொண்டது போல இந்திய அரசாங்கம் இப்போதும் மெளனம் காக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற தீய சக்தி ஒழிந்தால்தான் உலக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு:

The Monroe Doctrine and American Occupations special story by SV Rajadurai

எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share