திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்குச் சென்ற வழியில் கடந்த ஜூலை 12ஆம் தேதி மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியடைய செய்தது.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இதனையடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நேரடி மேற்பார்வையில் 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. எனினும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதன்பின்னர் ஏஐ மூலம் உருவாக்கிய குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்டு, தகவல் கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் அறிவித்தனர்.
இந்த நிலையில் தான் 14வது நாளான நேற்று (ஜூலை 25) ஆந்திர மாநில சூலூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் சுற்றி திரிந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரை கவரைப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் கைதானவரின் புகைப்படத்தை காண்பித்து போலீசார் உறுதி செய்து கொண்டனர்.
தொடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்து போலீசார் நடத்திய விசாரணையில், கைதானவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் ராஜு பிஸ்வ வர்மா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.