தமிழக அரசு தூய்மை காவலர்களின் மதிப்பூதியத்தை ரூ.5,000-லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தியுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.417 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 12,524 கிராமப் பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை காவலர் தேவை என்ற அவுட்சோர்சிங் அடிப்படையில் 66,025 தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தூய்மை காவலர்கள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து உரமாக்குதல், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் மற்றும் ஊராட்சிப் பகுதிகளைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர். தமிழகத்தின் திடக்கழிவு மேலாண்மையில் தூய்மை காவலர்களின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்த நிலையில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
