கிழக்கே போகும் ரயில் படத்துக்கு கதாநாயகியாக ராதிகாவை பாரதிராஜா ஒப்பந்தம் செய்தபோது, அதில் பாக்கியராஜ் உட்பட யாருக்குமே உடன்பாடில்லை. ஆனால் பாரதிராஜா விடாப்பிடியாக நின்று ராதிகாவை கதாநாயகியாக்கினார். தமிழ் தெலுங்கு கன்னடம் உட்பட பல மொழிகளில் எல்லா பெரிய நடிகர்களோடும் நடித்து பிரபலமானார் ராதிகா,
ஆனால் தொலைக்காட்சி சீரியல்களின் எதிர்கால ஆளுமையை கண்டு பிடித்து சின்னத் திரை தொடர்களின் முடி சூடா ராணியாக ராதிகா உருவானது அவருடைய மாபெரும் சாதனை.
அவரது சித்தி சீரியல் வெளியான சமயத்தில் சென்னையில் பூகம்பம் வந்து கட்டிடங்கள் ஆடி பயந்து போன மக்கள் வீட்டுக்கு வெளியே வந்து உட்கார்ந்து இருக்கும்போது, சித்தி சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் வர, மீண்டும் பூகம்பம் வந்து செத்தாலும் பரவாயில்லை என மக்கள் வீடுகளுக்குள் போய் டிவி போட்டு சித்தி பாத்துட்டு மறுபடியும் பயம் வந்து தெருவுக்கு வந்து உட்கார்ந்தது வரலாறு,
அன்று முதல் இன்று வரை சினிமா, சின்னத்திரை இரண்டிலும் கலக்கி வரும் ராதிகா , இப்போது சினிமாவில் தான் நடிக்கும் ஒரு வித்தியாசமான கேரக்டர் மூலம் பேசு பொருளாகி இருக்கிறார்,
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தாய் கிழவி’
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் இது. அதன் போஸ்டர் மற்றும் டீசரில் வயது முதிர்ந்த கிராமத்துக் கிழவியாக கவனிக்க வைக்கிறார் ராதிகா.
இந்தப் படத்தில், 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா மேடம் நடித்திருக்கிறார். அவருடைய மூன்று மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். அந்த ஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த் ராமதாஸ் நடித்திருக்கிறார். இதுதவிர மற்ற முக்கிய இரண்டு கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். உசிலம்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள நடிகர்கள் அல்லாத கிராமத்து மக்கள் பலரும் இதில் நடித்திருக்கின்றனர்.ண
படம் குறித்து கூறும் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் “நான் இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். சிவகார்த்திகேயன் சார் இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர்கள், எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாகவே கொடுத்து கதையில் எந்தவிதமான காம்ப்ரமைஸூம் செய்யாமல் நினைத்தபடியே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே படமும் நன்றாக வந்திருக்கிறது.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை பற்றிய கதையாகவும், அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுநடை, அவர்களின் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள், சடங்குகள் ஆகியவற்றை பேசும் படமாக இது இருக்கும். இந்த விஷயங்களை சீரியஸ் டோனில் இல்லாமல் நகைச்சுவை கலந்து பொழுதுபோக்காக திரையரங்குகளில் மக்கள் ரசிக்கும்படி கமர்ஷியலாக எடுத்திருக்கிறோம். கிராமத்தில் உள்ள மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை மூலமும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தின் மதிப்பை கலகலப்பாக பேசியிருக்கிறோம்” என்கிறார்.
ஆனால் டைட்டில் தாய்க் கிழவி என்றுதானே இருக்க வேண்டும் . அதை விட்டு தாய் கிழவி என்று தப்பாக எழுதி, ‘க்’கன்னாவில் ஒரு க் வைக்கலாமா?
