ராஜன் குறை
பராசக்தி என்ற திரைப்படம் 1952-ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசியல், பண்பாட்டு வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது. அதற்குக் கலைஞர் எழுதிய வசனங்கள் திராவிட தமிழர் தன்னுணர்வைத் தூண்டி எரியச் செய்வதன் மூலம், பகுத்தறிவுத் தீ பரவக் காரணம் ஆனது. அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆதிக்க சக்திகள் பொங்கி எழுந்தன. பார்ப்பனீய ஊடகங்கள் ஆவேசம் காட்டின. உளவுத் துறை அறிக்கைகள் ஆள்வோரால் கோரப்பட்டன.
ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அந்த சர்ச்சைகளைக் குறித்து Parasakthi: Life and Times of a DMK film என்ற கட்டுரையை Economic and Political Weekly இதழில் 1991-ஆம் ஆண்டு எழுதினார். அது இந்திய கல்விப்புலத்தில் திரைப்பட ஆய்வுகள் பரவலாகத் தொடங்கியபோது பலருக்கும் ஊக்கமளிப்பதாய் இருந்தது. இப்போது கடற்கரய் மத்தவிலாச அங்கதம் என்ற ஊடகவியலாளரால் அந்த தகவல்களெல்லாம் முழுமையாகத் திரட்டப்பட்டு ‘பராசக்தி தடை’ என்ற நூலாக கலைஞர் நூற்றாண்டை குறிக்கும் விதமாக வெளியாகியுள்ளது.
அந்த பட த்திற்கு ஏன் பராசக்தி என்று பெயர்? அதில் ஒரு கோயில் வந்தாலும் அது பக்திப் படமல்ல. “அம்பாள் என்றைக்கடா பேசினாள்?” என்று கேட்ட படம். “அது பேசாது. கல்” என்ற வசனத்தில் கல் என்பது ஒலிக்காமல் செய்யப்பட்டதால் உதடு அசைந்தாலும் ஒலி வராது. பிறகு ஏன் அந்தப் படத்திற்கு பராசக்தி என்று பெயர் என்பதும் முக்கியமாகச் சிந்திக்க வேண்டிய கேள்விதான்.
பரம் என்பது இகத்திற்கு, மானுட அனுபவத்திற்கு, அப்பாற்பட்டது. அதனால் கடவுளை பரம்பொருள் என்று கூறுவோம். பராசக்தி என்பது மானுடருக்கு மேற்பட்ட ஒரு சக்தி. ஆனால் தனி மனிதர்களான மானுடர்களுக்கு மேற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் மனிதர்களின் கூட்டுத் தன்னுணர்வு உருவாக்கும் வரலாற்று ஆற்றல். அதனை வரலாற்றின் ஆன்மா எனலாம், வரலாற்றுத் தன்னுணர்வு எனலாம். மானுட சமூகங்களை அவற்றின் வரலாற்றுத் தன்னுணர்வுதான் இயக்குகிறது என்னும்போது அதுவும் பராசக்திதான்.
திராவிட முன்னேற்றக் கழகம் “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றும் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்றும் கூறும் மரபினைக் கொண்டது என்பதை கணக்கில் கொண்டால் மக்களின் வரலாற்று கூட்டியிக்கச் சக்தியினையே பராசக்தி என்று குறிப்பிடலாம் என்பதாகப் புரிந்துகொள்ள முடியும்.

அதே காரணத்தினால்தான் 1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற பெருவெடிப்பான மாணவர் போராட்ட த்தினை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள திரைப்படத்திற்கு பராசக்தி என்ற பெயரை வைத்துள்ளார்கள். இந்த பட த்தில் கோயில் கூட கிடையாது. முந்திய பராசக்தி திரைப்படம் ஒரு காட்சியில் மாணவர்கள் முன் திரையிடுவதாக அமைந்துள்ளது. அதற்காக அதனை பட த்தின் தலைப்பாக்க முடியாது. அதனால் அந்த 1952 பராசக்தி, அதனை சுட்டும் இந்த 2026 பராசக்தி ஆகிய இரண்டுமே மக்களின் வரலற்றுத் தன்னுணர்வின் ஆற்றலைக் குறிப்பதாகவேதான் கொள்ள முடியும்.
தி.மு.க உருவாக்கிய திராவிடத் தமிழர் தன்னுணர்வு என்ற பராசக்தி
இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசாக மலர்ந்தபோது நாட்டில் பதினைந்து சதவீதம் பேருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். தமிழ்நாட்டிலும் பெரும்பாலானோர், குறிப்பாக உழைக்கும் மக்கள் எழுத்தறிவற்றவர்களாகவே இருந்தனர். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டம் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு என்று புரட்சிகரமாக வரையறை செய்தது. கல்வி பெறாத, நாளேடுகளையோ, இதழ்களையோ படிக்க முடியாத சாமானிய மக்கள் எந்த அடிப்படையில் அரசியலைப் புரிந்துகொண்டு வாக்களிப்பார்கள் என்பது மிகப்பெரிய சவாலாக விளங்கியது.
இந்த இடத்தில் நாம் இந்தியக் குடியரசு தோன்றிய வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஏன் இந்தியாவில் பெரும்பாலோர் எழுத்தறிவின்றி இருந்தனர், எத்தகைய ஏற்றத்தாழ்வு நிலவியது என்பது புரியும். குறிப்பாக இந்த ஏற்றத்தாழ்வு வர்ண தர்ம சிந்தனையால் உருவான ஜாதீய சமூக வடிவில் இருந்தது என்பதுதான் இந்திய குடியரசின் துவக்க நிலை. இது நீண்ட கால வரலாற்றின் விளைபொருள்.
இந்தியாவில் அவ்வப்போது பேரரசுகள் தோன்றினாலும், அவை பெரும்பாலும் எண்ணற்ற தன்னாட்சி பெற்ற சிற்றரசர்கள் தாங்கள் வசூலிக்கும் வரியில் ஒரு பகுதியை பேரரசருக்கு கப்பம் கட்டும் அமைப்பாகவே இருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின் மொகலாயப் பேரரசு, பாமினி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு அதன் பின் இறுதியாக மராத்தியப் பேரரசு ஆகியவை முக்கியமான அரசமைப்புகளாக விளங்கின.
தமிழ்நாட்டில் சோழப் பேரரசும், பாண்டியப் பேரரசும் பதினான்காம் நூற்றாண்டில் சிதைவுற்ற பிறகு, விஜய நகர பேரரசிலிருந்து பிரிந்து தன்னாட்சி கொண்ட மதுரை நாயக்கர்கள் ஆட்சியும். மராத்தியப் பேரரசிலிருந்து பிரிந்து தன்னாட்சி கொண்ட தஞ்சாவூர் மராத்திய அரசாட்சியும். ஆற்காட்டு நவாபின் ஆட்சியும் பல தன்னாட்சி கொண்ட குறுநில அரசர்கள், நில உடமையாளர்கள், பாளையக்காரர்கள் ஆகியோரைக் கொண்டிருந்தவையாக இருந்தன.
பெரும்பாலான அரசர்கள், குறுநில மன்னர்கள், நிலவுடமையாளர்களின் கணக்கர்களாகவும், நில அளவை, நிதி நிர்வாகத்தை கவனிப்பவர்களாகவும், கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் பூசாரிகளாகவும், துறவிகளாகவும், கல்வி கற்றவர்களாகவும் பார்ப்பனர்களே இருந்தனர். அவர்கள் பணிக்காக அவர்களுக்கு நிறைய விளைநிலங்களும் தரப்பட்டதால் நில உடமையாளர்களாகவும் இருந்தனர். இவர்களைத் தவிர பார்ப்பனரல்லாத நிலவுடமையாளர்களும், வர்த்தக சமூகத்தினரும் ஓரளவு கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றிருந்தனர்.
இந்திய வர்ணாசிரம தர்ம சிந்தனையில் உழைக்கும் மக்களான நான்காம் வர்ணத்தினரான சூத்திரர்களும், அவர்ணர்களான தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட சேவை வகுப்பினரும் கல்வி கற்பது என்பது அரிதாகவே இருந்தது. இவற்றிற்கு பல விதிவிலக்குகள் தோன்றியவண்ணம் இருந்திருக்கலாம் என்றாலும், பெருமளவு கல்வி என்பது ஆதிக்க சக்திகளின் உடமையாகவே இருந்தது. பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் இதுவே நிலைமையாக இருந்தது.

ஆங்கிலேயர் வருகையும், காலனி ஆதிக்கமும்
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியா முழுவதும் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை பெருக்கியபோது அதனுடன் தொடர்பு கொண்ட ஆதிக்க வர்ணத்தினர், குறிப்பாக பார்ப்பனர்கள், ஆங்கிலம் கற்கத் தொடங்கினார்கள். பல்வேறு இந்திய மன்னர்களுக்கிடையிலான போர்களில் ஈடுபட த்துவங்கிய ஆங்கிலேயர்கள் மெள்ள, மெள்ள அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமைகளைப் பெற்று மறைமுகமாக ஆட்சி செய்யத் துவங்கினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் பல நிர்வாக அமைப்புகளை, நீதிமன்றங்களை அமைக்கத் துவங்கினார்கள்.
அப்போதுதான் இந்தியர்களை அவர்களது நிர்வாக முறைகளுக்குப் பழக்கவும், ஆட்சி செய்ய உதவவும் பயிற்றுவிக்கும் தேவை உருவானது. ஆங்கிலேயர்கள் பள்ளிகளையும், கல்லூரிகளையும் உருவாக்கினார்கள். இயல்பாகவே பார்ப்பனர்களும், ஓரளவு பிற நிலவுடமை, வர்த்தக வகுப்பினரும் ஆங்கிலக் கல்வி பயிலத் துவங்கினார்கள். அந்த காலத்தில் ஐரோப்பாவில் அச்சுத் தொழில் பெருகி, பொதுமன்றங்கள் உருவாகிவந்ததால், இந்தியாவிலும் மெள்ள, மெள்ள அது போன்ற முயற்சிகள் துவங்கின. இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் அச்சு ஊடகம் இந்தியாவில் உருவாகி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவலானது.
சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படும் ஆங்கிலேயர்களுடனான இந்திய அரசர்களின் இறுதிப்போர் 1857-இல் நிகழ்ந்து தோல்வியடைந்த பிறகு, இந்தியா நேரடியாக பிரிட்டிஷ் அரசியின் ஆட்சியின் கீழ் வந்தபோது இந்த புதிய நிர்வாக வலைப்பின்னல் வலுவடைந்தது. நவீன அரசு நிர்வாகத்தில் இந்தியர்களின் பங்கேற்பும் அதிகரித்தது. ஆங்கிலக் கல்வி பயின்ற பார்ப்பனர்களும். வர்த்தக சமூகத்தினரும் இந்திய அளவில் ஒரு வலைப்பின்னலாக மாறுவது சாத்தியமானது. குறிப்பாக ஏராளமானவர்கள் சட்டம் பயின்று வழக்கறிஞர்களாக உருமாறினார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ், இரட்டையாட்சி முறை
ஆங்கிலம் படித்த பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், வர்த்தக சமூகத்தினர், நிலவுடமையாளர்கள் ஆகிய பார்ப்பனர்களும், பிற செல்வமிக்க ஜாதியினரும் ஆங்கிலேயர்களின் ஆட்சியை விமர்சிக்கத் துவங்கிய போதுதான் இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ஆம் ஆண்டு பிறந்தது. இந்தியா முழுவதுமிருந்து ஆங்கிலம் கற்றவர்கள் கூடி பிரிட்டிஷ் ஆட்சியை விமர்சிக்கும், ஆட்சிக்குக் கோரிக்கைகள் வைக்கும் இயக்கமாக காங்கிரஸ் இருந்தது. சுருங்கச் சொனால் ஒரு குடிமைச் சமூக அமைப்பு.
காங்கிரஸ் தொடர்ந்து வற்புறுத்தியதால் முதல் உலகப் போர் முடிந்தவுடன், பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுடன் ஆட்சி அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்தது. அப்போது உருவான அரசமைப்புதான் இரட்டையாட்சி முறை. தேர்தல்கள் மூலம் அமைக்கப்படும் இந்தியர்களின் அரசுக்கு சில ஆட்சி நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்படும். பிற முக்கிய அதிகாரங்கள் பிரிட்டிஷ் கவர்னர்கள் கையில் இருக்கும். இந்த தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை என்பது சொத்து வரி செலுத்துபவர்கள், பட்ட தாரிகள் என குறிப்பிட்ட குடிமைச் சமூக உறுப்பினர்களிடம் மட்டுமே இருந்தது. வெகுமக்கள் வாக்களிக்க முடியாது.
பின்னர் 1937-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசமைப்பு சட்ட த்திலும் இந்த நிலையே நீடித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் கொடுக்கும் நிலை உருவானபோது, இந்திய குடியரசிற்கான அரசமைப்பு அவையும் இவ்வாறு குடிமைச்சமூக தேர்தலில் உருவான மாகாண அவைகளாலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த அரசமைப்புச் சட்ட அவை உருவாக்கிய குடியரசில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்து, அனைவரையும் இறையாண்மையுள்ள குடிநபர்களாக்கும் புரட்சிகர முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியக் குடியரசு, திராவிட முன்னேற்றக் கழகம், பராசக்தி
தி.மு.க 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டம் இரண்டு மாதங்கள் கழித்து நவம்பர் 16 கையெழுத்திடப்பட்டு, 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி அனைத்து மக்களும் வாக்களிக்கும் முதல் தேர்தல் 1952-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அந்த ஆண்டுதான் பராசக்தி திரைப்படம் வெளியானது.
பராசக்தி திரைப்படம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கலாமா என்று உரக்கக் கேட்டது. குடியரசு சட்டம் இயற்றினால் மட்டும் போதாது, மக்கள் வாழ்வாதாரத்திற்கு வகை செய்ய வேண்டும் என்று முழங்கியது. தி.மு.க சாமானியர்களை அணிதிரட்டி, வெகுமக்கள் கட்சியாக வடிவெடுத்து, மக்களாட்சியில் பங்கேற்பதற்கான தன்னுணர்வினை மக்களிடையே உருவாக்கியது.
எழுத்தறிவு பரவலாகாத சமூகத்தில் மக்களிடையே இக்கருத்துக்களைக் கொண்டு சேர்க்க நாடகங்கள், மேடைப்பேச்சு, ஆகியவற்றை திறம்படப் பயன்படுத்தியது திமு.க. மக்களிடையே தி.மு.க-வின் கதையாடல்கள், சொல்லாடல்கள் பெற்ற செல்வாக்கினைக் கண்டு திரைப்படத் துறை தி.மு.க எழுத்தாளர்களை, தலைவர்களை அழைத்தது. பெரும்பாலும் தி.மு.க திரைப்படங்களை பயன்படுத்தியது என்றுதான் எழுதுவார்கள். உண்மையில் தமிழ் திரைத்துறை தி.மு.க-வை பயன்படுத்தியது என்று எழுதவேண்டும்.
காரணம் தி.மு.க இந்தியக் குடியரசின் புதிய மக்களாட்சித் தத்துவத்தில் நடக்க வேண்டிய வரலாற்று மாற்றங்களையே தன்னுடைய கதையாடலாகக் கொண்டது. அந்த கதையாடலின் அடிப்படையிலேயே புனைவுகளை, நாடகங்களை, திரைப்படங்களை எழுதியது. அதன் அரசியல் செயல்பாடுகளால், பிரசாரத்தால், போராட்டங்களால் மக்களிடையே உருவான தன்னுணர்வுதான் இந்த நாடகங்களையும். திரைப்படங்களையும் வெற்றி பெறச் செய்தன. அந்த வரலாற்றுத் தன்னுணர்வுதான் எம்.ஜி.ஆர்-சிவாஜி என்ற நட்சத்திர இணையை உருவாக்கியது.
இந்தியக் குடியரசின் முரண்களும், தமிழ்நாட்டு மொழிப் போரும்
காங்கிரஸ் கட்சியை உருவாக்கியதிலிருந்து, அரசமைப்பு சட்ட அவையை உருவாக்குவது வரையிலான அரசியலை முன்னெடுத்தது சமூக ஆதிக்க சக்திகளான பார்ப்பனர்களும், பனியா உள்ளிட்ட பிற வர்த்தக, நிலவுடமை சக்திகளும்தான். இவர்களுக்கு அந்நிய மொழியான ஆங்கிலத்திலேயே எப்படி அரசாட்சியைத் தொடர்வது என்ற எண்ணம் பிறந்தது. அதற்கு முன் கற்றவர் மொழியாக சமஸ்கிருதம் இருந்த நினைவு இருந்தது. அதனையே இந்தியாக மாற்றினார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே வட நாட்டு பார்ப்பனர்களும். பனியா சக்திகளும் மக்களிடையே புழங்கிய இந்துஸ்தானி மொழியிலிருந்து அரபி. பார்சி சொற்களை நீக்கிவிட்டு சமஸ்கிருத சொற்களை புகுத்தி, சுத்தகரிக்கப்பட்ட இந்தி மொழியை பொதுமன்றத்தில் உருவாக்கினர். மக்கள் பேசி வந்த அவதி. பிரஜ்பாஷா, மைதில், போஜ்பூரி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை ஒதுக்கிவிட்டு கடிபோலி என்ற சுத்தகரிக்கப்பட்ட இந்தி மொழியை பள்ளிகளில் பயிற்றுவிக்கவும், பொதுமன்றத்தில் புழங்கவும் துவங்கினர். நகரி என்று எழுத்து வடிவத்தையும் நிலைப்படுத்தி அதை தேவநகரி என்று அழைத்தனர்.

இந்த சுத்தகரிப்பு மதரீதியாகவும் இருந்தது. இந்துஸ்தானியிலிருந்து உருது மொழியைப் பிரித்து அதனை முஸ்லீம்கள் மொழியாகவும், அவர்கள் உருவாக்கிய சமஸ்கிருதமயமான இந்தி மொழியை இந்து மொழியாகவும் அடையாளப்படுத்தினர். பிரதாப் நாராயண் மிஸ்ரா என்ற கவிஞர் எழுதிய வரிகள் புகழ்பெற்றவை: “நீங்கள் நல்வாழ்வைப் பெற விரும்பினால், பாரதத்தின் புதல்வர்களே! நீங்கள் ஜபிக்க வேண்டிய வார்த்தைகள் – இந்தி, இந்து, இந்துஸ்தான்!”
இப்படியாக உருவாக்கப்பட்ட இந்தியைத்தான் அரசமைப்பு சபையில் வட மாநில தலைவர்கள் இந்தியாவின் தேசிய மொழியாக, இந்திய அரசின் அலுவல் மொழியாக ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். தென்னாட்டிலிருந்து சென்ற அரசமைப்பு அவை உறுப்பினர்களும், நேரு உள்ளிட்ட காங்கிரஸ் முற்போக்காளர்களும் கடுமையாக வாதிட்டு ஆங்கிலமும் தொடர வேண்டும் என்று கூறினார்கள். இறுதியில் பதினைந்து ஆண்டுகாலம் ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்றும் தேவைப்பட்டால் நீடித்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது.
நாம் கவனமாகப் பார்த்தால் இந்த நவீன இந்தி மொழி உருவான வரலாற்றிற்கும், தி,மு.க உருவாக்கிய தமிழ் மொழித் தன்னுணர்விற்குமான வேறுபாடு புலப்படும். தி.மு.க சமஸ்கிருத வார்த்தைகளை நீக்கி, ஒலி நயம் மிகுந்த தமிழ் மொழிப் பயன்பாட்டை வெகுமக்களுக்கு எடுத்துச் சென்றது. அதன் மூலம் திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதியின் கூட்டுத் தன்னுணர்வை வலுப்படுத்தியது.
நவீன இந்தி மொழி உருவாக்கமோ, மத ரீதியான அடையாளம், பார்ப்பனீய அடையாளம் ஆகியவற்றை ஏற்று, வெகுமக்களின் பேச்சு மொழிகளை புறக்கணித்து மேட்டிமை அடையாளமாக உருவானது. அந்த இந்தி மொழியை இந்திய ஒன்றிய அரசின் ஒற்றை ஆட்சிமொழியாக மாற்றுவதும், அதன் பொருட்டு தமிழர் அதனைக் கற்றே ஆகவேண்டிய நிர்பந்த த்தை உருவாக்குவதும், தமிழ் தன்னுணர்வின் மீதான அப்பட்டமான ஆதிக்கமாக மாறியது. அதுவே 1965-ஆம் ஆண்டு மொழிப்போர் வெடித்தெழக் காரணம் ஆனது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியும், தன்னுணர்வுக் கிளர்ச்சியும்
இந்திய மாநிலங்களில் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கிறது தமிழ்நாடு. குறிப்பாக கடந்த நாலாண்டுகளில் திராவிட மாடல் ஆட்சி மிகப் பெரிய பாய்ச்சல்களை நிகழ்த்தி வருகிறது. இதனை ஆராயும் பொருளாதார நிபுணர்கள், அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர், தமிழ்நாட்டின் வரலாற்றுத் தன்னுணர்வும் அதற்குக் காரணம் என்பதை உணர்ந்துள்ளார்கள்.
அந்த வகையில் 1965 மொழிப்போர் என்பது தமிழ்நாட்டின் வரலாற்றை நிர்ணயித்தத் தருணமாகும். அறுபதாண்டுகள் கழித்து வடவராதிக்கம் இந்துத்துவம் என்ற வடிவில் இந்தி மொழி திணிப்பிற்கு தயாராகி வருகிறது. இதன் உட்கிடையாக பார்ப்பனீய மீட்புவாதம் விளங்குகிறது. திராவிட தமிழர் தன்னுணர்வைச் சிதைக்க பல்வேறு மாய பிம்பங்கள் களமிறக்கப்படுகின்றன.
அத்தகைய தருணத்தில் மீண்டும் ஒரு பராசக்தி திரைப்படம் வெளியாகியுள்ளது. இன்றைய நான்காம் தலைமுறை இளைஞர்களுக்கு பழைய வரலாற்றை மீண்டும் திரையிலேயே வடித்துக் காட்டி, அவர்கள் தன்னுணர்வை வலுப்படுத்துகிறது. அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் தமிழ்நாடு தேர்தல் இந்த வகையில் மிக முக்கியமானதாகும். ஆரியம் முழு மூச்சுடன் களம் இறங்குகிறது; பல்வேறு சூழ்ச்சி வலைகளைப் பின்னுகிறது.
அத்துனை சூழ்ச்சி வலைகளையும் அறுத்தெரிந்து, இருளைக் கிழித்து உதயசூரியன் தோன்றும். அதற்கான அறிகுறியே இந்த புதிய பராசக்தி!
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
